பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான போகநாதர் பூமிக்கு மீண்டும் வருவதாக கூறியிருப்பதாகவும். எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர் தனது சந்திரரேகை நூலில் விவரித்திருக்கிறார்.
தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்.
- சந்திர ரேகை.
பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டு போவார்கள், இதனால் பெரும்பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும்.
கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.
இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
ஆனால் கோரக்கரின் இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில் நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.
இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
கோரக்கர் மட்டுமல்லாது அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள் போன்றோரும் இம்மாதிரியான் எதிர் கூறல்களை கூறியுள்ளதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன...