13/04/2018

பண்டைய கால நாகரீகங்களுள் வழிபாடுகள்...


அனைத்து சமயங்களும் ஒன்றோடொன்று தொடர்புக் கொண்டவையாகவே இருக்கின்றன என்றும் அவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு சில விடயங்கள் பொதுவாக இருக்கத் தான் செய்கின்றன என்றும் நாம் கூறினோம் என்றால் அவற்றுக்கு தக்க சான்றுகளையும் நாம் காண்பிக்க வேண்டி இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமைகளை நாம் காண்பிக்கத் தவறினோம் என்றால் நமது கூற்றுகள் வெறும் பெயரளவுக் கூற்றுக்களாகவே சென்று விடும். எனவே இப்பொழுது நமது பயணத்தில் மேலும் சில ஒற்றுமைகளை நாம் காண வேண்டி இருக்கின்றது.

ம்ம்ம்ம்... இம்முறை நாம் எங்கிருந்து பயணத்தை தொடங்கலாம்...? சரி... சிந்து சமவெளியில் இருந்தே தொடங்கலாம்... சென்ற முறை நாம் சிந்து சமவெளியை பற்றி கண்டப் பொழுது அந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றும் அங்கிருந்தே சென்ற மக்கள் மேசொபோடமியா மற்றும் சுமேரிய நாகரீகத்தினை உருவாக்கினர் என்றக் கருத்துக்களை மையமாக வைத்தே கண்டதால் அங்கே மக்கள் கொண்டு இருந்த வழிப்பாட்டு முறையைப் பற்றி நாம் காண முடியாது சென்று விட்டது. கவலை இல்லை...அவற்றை இப்பொழுது காண்போம்.

சிந்து சமவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலமாக பல விடயங்கள் நம்முடைய பார்வைக்கு வந்து உள்ளன. முதலில் அந்த இடங்களில் அதிக அளவில் நினைவுக்கற்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் கல்லினை நட்டி வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம் என்று. இதனையே ஆராய்ச்சியாளர் இரா. ஜெசிந்தர் எபினேசர் என்பவரும் அவரது 'நினைவுக்கல் வழிப்பாடும் விவிலியமும் என்ற நூலில் பின் வருமாறு கூறுகின்றார்

அக்கற்கள் ஆனவை பொது நன்மையின் வடிவாக விளங்கும் இறைவனையும் பொது நன்மையின் பொருட்டு தன்னையே தியாகம் செய்த மனிதனையும் நினைத்துக் கல் கட்டி வழிபடுவது நினைவுக்கல் வழிப்பாடாகும்.

மேலும் இந்த நினைவுக் கல் வழிபாடே இசுலாமிய சமயத்திலும் காணப்படுகின்றது என்றே 'இசுரவேளர் சமயம்' என்ற தனது நூலில் ஞான ராபின்சன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

பழங்கால அரபுக் கோவில்களில் அப்புனிதக் கல், தொழுகைக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்பட்டது. இக்கல் ஒரு குறிப்பிட்ட கடவுளைக் குறிப்பதாக இராமல் அனைத்துக் கடவுளையும் குறிப்பிட்டு நின்றது. கற்களின் மேல் இரத்தம் பூசப்பட்டது.

இந்த நினைவுக் கல் வழிபாட்டு முறை தான் சமணம் மற்றும் புத்த சமயங்களில் 'தூபி' என்று பெயர்பெற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் 'கந்து' என்று பெயர் பெற்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அட என்னய்யா இது நினைவுக் கல் அப்படின்னு கேட்குறீங்களா... அட அது வேற ஒண்ணும் இல்லைங்க இன்று நாம் சிவலிங்கம் என்ற பெயரில் வழிபடுகின்றோமே அதேக் கல் வழிப்பாட்டு முறை தான் அந்தக் காலத்தில் நினைவுக் கல் வழிபாடு என்ற பெயரில் இருந்து இருக்கின்றது.

மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவனை கல்லினை நட்டி வைத்து வணங்கி வந்தனர். இந்தப் பழக்கம் அனைத்து நாகரீகங்களிலும் பொதுவாக இருந்தமையை நாம் முந்தையப் பதிவுகளில் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம். ஆனால் அக்காலத்தில் சிவலிங்கம் என்றப் பெயர் தோன்றி இருக்காத காரணத்தினால் நாம் அக்கல் வழிப்பாட்டு முறையினை நினைவுக் கல் வழிப்பாட்டு முறை என்றே நாம் இந்தப் பதிவில் அழைக்கின்றோம்.

சரி... நினைவுக் கல் வழிபாடு சிந்து சமவெளி மக்களிடம் இருந்தது... சுமேரிய மக்களிடமும் இருந்தது... அதனைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்திலும் காணப்படுகின்றது என்பதனையும் நாம் முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இன்னொரு ஒற்றுமைகளையும் நாம் கண்டு விடுவோம்...

சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் பல பெண் தெய்வங்களின் வடிவங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல உருவங்கள் கொம்பினை உடைய உருவங்களாகவே காணப்படுகின்றன. கொம்புகள் அந்த உருவங்களின் தெய்வத்தன்மையை உருவகப்படுத்துவதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அத்தகைய கொம்பினை உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் சரி விவிலியத்திலும் சரி ஒன்று போலவே நமக்கு கிட்டப்பெருகின்றன. இதனை

சிந்துவெளியில் கொம்புடன் காணப்படும் உருவங்களை ஒத்து, சுமேரியாவிலும் பாபிலோனியாவிலும் கொம்புடைய உருவங்கள் காணப்படுகின்றன. அங்கு இக் கொம்பு அரசனையோ, குருவையோ, கடவுளையோ குறிப்பதாக கொள்ளப்பட்டு இருக்கின்றது. என்று சான் மார்ஷல் அவர்கள் அவரது ; மோகஞ்சடாரோவும் சிந்து சமவெளி நாகரீகமும் என்ற புத்தகத்தில் கூறி உள்ளது மூலமும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் இன்றும் கூட இந்தியப் பழங்குடி மக்களுள் தலைவராக உள்ளவர்கள் அவர்களது தலைமைக்கு அடையாளமாக எருமைக் கொம்பைத் தலையில் அணிந்து இருப்பதும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற்க

இன்றும் நம்முடைய சமுகத்தில் ஒரு சொற்தொடர் நிலவிக் கொண்டு இருக்கின்றது மேலே உள்ள வாக்கியத்தினை மெய்ப்பிப்பது போல.

"நீ என்ன பெரிய கொம்பனா டே...? "உனக்கு மட்டும் என்னவே ரெண்டு கொம்பா மொளச்சி இருக்கு" என்ற வாக்கியங்கள் தான் அவை. உற்றுப் பார்த்தோம் என்றால் அவற்றின் அர்த்தம் 'நீ என்ன பெரியவனா' என்றே வருகின்றது. அதாவது கொம்பினை வைத்து இருக்கின்றவன் பெரியவன் என்ற மறைமுகப் பொருளினையே அவை தருகின்றன. இந்தச் சொற்தொடர் என்றில் இருந்து நம்மிடையே இருக்கின்றன... தெரியவில்லை... இருந்தும் இவையும் சிந்தித்துப் பார்க்கத் தக்கவையே.

சரி... சிந்துசமவெளியில் கிடைக்கும் கொம்புகள் உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் பாபிலோனிய நாகரீகத்திலும் கிடைக்கின்றன... ஆனால் விவிலியத்திலும் இவற்றைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன என்றுக் கூறினீர்களே அது என்ன என்றுக் கேட்கின்றீர்களா... சரிதான் அதையும் கண்டு விடலாம். முந்தையப் பதிவுகளில் நாம் கண்டது போலவே மீண்டும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள சில பக்கங்களை நாம் இதற்காக திருப்ப வேண்டி இருக்கின்றது.

யோசேப்பின் அலங்காரம் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப் போலவும் அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகள் போலவும் இருக்கும். அவைகளாலே சனங்களை ஏகமாய்த் தேசத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான் - உபாமகம் (33:17).

சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; - மீகா (4:13).

அவர் வெஞ்சினம் கொண்டு
இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்; - புலம்பல் (2:3).

மேலே உள்ள இவ்வரிகள் மூலமாக கொம்புகள் ஆற்றலையும் அரசாட்சியையும் குறிப்பதாக இசுரவேலரின் சமயத்திலும் விளங்கியதை நாம் அறியலாம்.

சரி... பழைய நாகரீகங்களுள் நினைவுக் கல் வழிபாடும் ஒன்றுப் போலவே இருக்கின்றது... கொம்பு வைத்த உருவங்களும் சரி அவற்றிற்குரிய அர்த்தங்களும் சரி ஏறக்குறைய ஒன்றுப் போலவே இருக்கின்றது... இவற்றைப் போலவே இன்னும் பல பழக்கங்கள் அந்த பழைய நாகரீகங்களுக்குள்ளே பொதுவானதாக விளங்குகின்றன.

மர வழிபாடு, விலங்குகள் வழிபாடு , இயற்கை தெய்வங்கள் வழிபாடு, மலைகளில் இறைவன் இருப்பதாக நம்பிக்கை... மேலும் இன்ன பிற பழக்க வழக்கங்களும் இந்த நாகரீகங்களுள் ஏறக்குறைய ஒன்றைப் போலவே இருக்கின்றன. அட மறந்து விட்டேன்... உலகத் தோற்றக் கதையும் வெள்ளத்தால் உலகம் அழிந்தக் கதையும் கூட இவற்றில் ஒரே போலவே இருக்கின்றன.

இந்த ஒற்றுமைகள் தற்செயலானவையா அல்லது ஒரு இடத்தில தோன்றிய மக்கள் பல இடங்களுக்கு நகர்ந்தமையால் அவர்களுடனேயே இந்தப் பழக்கங்களும் நகர்ந்தமையால் காணப்படும் ஒற்றுமைகளா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. அது அவர்கள் கடமை... அதனை அவர்களிடமே விட்டுவிடுவோம்.

நாம் இப்பொழுது அறிந்துக் கொள்ள வேண்டியது பண்டைய காலத்தில் மக்களிடையே பல பழக்க வழக்கங்கள் ஒன்றுப் போலவே இருந்து இருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சிகளை இன்றும் நமது சமுகத்தில் நாம் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம் என்பதே.

பயணம் தொடரும்....

பி.கு:

இந்தத் தகவல்கள் நான் தெ. தேவகலா என்பவரது 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்னும் ஆராய்ச்சி நூலின் இருந்தே அறிந்து கொண்டவைகளாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.