14/11/2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மாயம், ரூ.200-க்கு ஆசைப்பட்டு சென்ற கணவரை தேடும் மனைவி...


200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, இன்று கண்ணீரும் கடிதமுமாக போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ் என்று நடையாக நடந்து கொண்டிருந்த வசந்தாவுக்கு, என்னதான் பிரச்னை? அவரிடமே பேசினோம்.

'தருமபுரியை அடுத்துள்ள குண்டல்பட்டி தான் எங்க கிராமம். எனக்கு பிரபாகரன், ஜெயகுமார்னு ரெண்டு மகன்கள் உள்ளனர், என் கணவர் செல்வத்துக்கு 60 வயது ஆகிறது. தினமும் கட்டட வேலைக்குப் போனாதான் எங்க குடும்பத்துக்கு வருமானம்.

2017அக்டோபர் 7-ந் தேதி, தருமபுரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது. விழாவுக்கு வர்ற ஆண்களுக்கு 200 ரூபாயும், பெண்களுக்கு 150 ரூபாயும் தந்து அழைச்சுக்கிட்டுப் போக டெம்போ வர்றதா அ.தி.மு.க-வை சேர்ந்த ராஜா சொன்னார். சரி, வீட்டுல சும்மாதானே இருக்குகோம் போயிட்டுவந்தா 350 ரூபா கிடைக்கும்னு 7-ம் தேதி மதியம் 2 மணிக்கு நானும் அவரும் தனித் தனி டெம்போவுல விழாவுக்குப் போனோம்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிஞ்சதும் நான் வீடு திரும்பிட்டேன். ஆனா, என் கணவர் செல்வம் மட்டும் வீடு திரும்பல. கடந்த 36 நாளா தேடி வர்றோம்.

இன்னிக்கு வரை வீடு திரும்பல. அவருக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு தெரியல. அவருக்கு உடல்நிலை சரியில்லை., தினமும் மாத்திரை எடுத்துக்கணும். சரியா பேசக்கூட வராது அவருக்கு'' என்று கண்ணீர் வடித்தார் வசந்தா.

ஆளும் கட்சியைச் சேர்ந்த ராஜா ஒரு முறை, போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போனார். ஆனா, அவர் மட்டுமே போலீஸ் அதிகாரிகள்கிட்ட பேசினார். எனக்கு எந்த விவரமும் சொல்லலை. பிறகு, யாரோ செத்துப்போயிட்டாங்கன்னு அவங்களோட போட்டோவைக் காட்டி, இவரா?

என்று கேட்டாங்க போலீஸ். அவர் இல்லைனு சொல்லிட்டோம். எப்படியாவது என் கணவரை கண்டு பிடிச்சிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க என்று பரிதாபமாகக் கண்ணீர் விட்டு அழுதார் வசந்தா.

தருமபுரி பி1 காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமாரிடம் வந்தாவின் புகார் குறித்துக் கேட்டோம்., ''ஆமாங்க, காணாமல் போனதாகப் புகார் கொடுத்துள்ளார்கள்.

மேன் மிஸ்சிங் கேஸ் போட்டு தேடி வருகிறோம். அவருக்கு சரியாகப் பேச வராதுன்னும் சொல்றாங்க நாங்க மட்டும் என்ன செய்ய முடியும்'' என்றார்.

விழாவுக்கு அழைத்துச் சென்ற அ.தி.மு.க நிர்வாகிகள், வசந்தாவின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப்போகின்றார்கள் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

 - K7 news

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.