10/07/2018

பேசியபடி வாகனம் ஓட்டினால் மொபைல் பறிப்பு...


உத்தரகண்ட் மாநிலத்தில், பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவோரிடம் இருந்து, மொபைல் போன்களை, 24 மணி நேரத்துக்கு பறிமுதல் செய்யும்படி, போக்குவரத்து துறைக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த மாதம், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களின் போன்களை பறிக்கவும், டிரைவிங் லைசென்சை ரத்து செய்யவும், அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யும் வரை, விதிகளை மீறுவோரிடம், 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கலாம் எனவும் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. கடந்த வாரம், பவுரி கார்வால் மாவட்டம், துாமகோட்டில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 48 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, நேற்று முன் தினம், உயர் நீதிமன்ற நீதிபதி, ராஜிவ் சர்மா பிறப்பித்த உத்தரவு: சாலை பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து, போக்குவரத்து துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பேசியபடி, வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து, மொபைல் போனை, 24 மணி நேரத்துக்கு பறிமுதல் செய்து, உரிய ரசீது வழங்க வேண்டும்.மேலும், போதையில் வாகனம் ஓட்டுவோர், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், வாகன பர்மிட் ஆகியவற்றை, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 73 அமலாக்க குழுக்களை, போக்குவரத்து துறை செயலர் நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.