21/05/2017

புதிய நதிநீர் தீர்ப்பாயத்திற்கு எதிர்ப்பு, தஞ்சையில் ரயில் மறியல் செய்த விவசாயிகள் கைது...


தஞ்சாவூரை யடுத்த ரெட்டிபாளையத்தில் சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் புதிய நதிநீர் பிரச்சனைகளுக்கான ஒற்றை தீர்ப்பாயத்திற்கு காவிரி வழக்கை அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தி தஞ்சாவூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை முடக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கான புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கடந்த 15ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒற்றைத் தீர்ப்பாயம் குறித்து மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை ஒரு போராட்டக் கோரிக்கையாக முன்வைத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் 7வது நாளான இன்று தஞ்சாவூரை அடுத்த ரெட்டிபாளையத்தில் விவசாயிகள் சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கமான ரயில் மறியல் போராட்டங்களைப் போல் அல்லாமல், ரயில் வண்டி செல்லும் பாதைகளில் உள்ள ஊர்களில் உள்ள கிராம மக்களை, உழவர்களை, இளைஞர்களைத் திரட்டி பெருந்திரளாக மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஒற்றைத் தீர்ப்பாயத்தை நிறைவேற்றக் கூடாது, காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்யக் கூடாது என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் வஞ்சகத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காவிரிப் பாசனப் பகுதிகளை பாசனப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு, மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி தொடர் முழக்கமிட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் ரயில் தண்டவாளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து போராட்டக் குழுத் தலைவர் மணியரசனை போலீசார் குண்டகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகளையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கைது செய்தாலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று காவிரி மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து காவிரி மீட்புக் குழுவினர் அறிவிக்கவும் உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.