01/08/2017

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜேஷ் கொல்லப்பட்ட வழக்கில், அதே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த மணிக்குட்டன் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் அளித்துள்ள மரண வாக்குமூலத்தில் தனது கொலைக்கு ஆர்எஸ்எஸ் காரர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது...


இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிக் குட்டன் பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர். அவர் மீது 18 வழக்குகள் உள்ளன. கொலைச் சம்பவத்திற்குப் பிறகு புலிப்பாறை என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த கொலையில் நேரடியாக தொடர்புடைய மணிக்குட்டன், ஏ.பி.விஜித் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள டிங்கர் விஷ்ணு என்பவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர ஊழியராவார். இவர் முக்கிய குற்றவாளிகளுக்கு உதவி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியரான அம்பத்தின்கால அசோகன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் விஷ்ணுவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் போலீசார் கூறினர். விஷ்ணு மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ள இருவர் மணிக்குட்டனின் உறவினர்கள் ஆவர்.

பாஜக அராஜகம்: இதனிடையே ராஜேஷ் கொலையை கண்டிப்பதாக கூறி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் ஞாயிறன்று பந்த் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் பேருந்துகள் மீது ஆர்எஸ்எஸ் -பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

திருவனந்தபுரத்தில் உள்ள பிராந்திய புற்றுநோய் சிகிச்சை மையம், மருத்துவ அறிவியல் கல்லூரி, நரம்பு மற்றும் இருதய அறுவை சிகிச்சை மையம் உட்பட மருத்துவமனைகளுக்கு செல்வதற்காக வந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சனிக்கிழமையன்று பின்னிரவில்தான் , ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் பந்த் குறித்து அறிவித்தனர். காலையில், பஸ் போக்குவரத்து இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது கொல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். கொச்சியில் பெட்ரோல் நிலையங்கள் தாக்கப்பட்டதால், மூடப்பட்டன. கொப்பம் என்ற இடத்தில் சிஐடியு அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆர்எஸ்எஸ்- பாஜக பந்த் அறிவிப்பு காரணமாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.