13/01/2019

கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ...


ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த மர்ம மரணங்களுக்கு பின்புலமாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம், பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ், விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்கு உள்ளானதில், அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். சயான் உயிர் பிழைத்தார். இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார், தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், பல காலமாக வாய் திறக்க மறுத்து வந்த சயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.

இது, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தெஹல்கா வீடியோவில் இருப்பது, உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கொடநாடு கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவர் பொன்தோஸ் பேட்டி அளித்துள்ளார். இந்த தொடர் கொலைகளின் பின்னணி குறித்து, சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்று முன்பே கோரிக்கை விடுத்தவர், நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அரசுக் கொறடாவுமான முபாராக். அவர் நம்மிடம் கூறுகையில், ``கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தின்போது ஒரு காவலாளி கொலை, அதை தொடர்ந்து, அங்கே கம்யூட்டர் பிரிவில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் திடீர் தற்கொலை, ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலம் மாவட்டம் எடப்பாடி ஏரியாவில் கார் விபத்தில் மர்ம மரணம், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த சயானும் கார் விபத்தில சிக்கினார். அவரின் மனைவி, மகள் இறந்தனர். படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார் சயான். கனகராஜ் சொல்லி 10 பேர்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகப் போலீஸ் சொன்னது. இதை ஆரம்பத்திலிருந்தே கொள்ளை சம்பவமாகத்தான் போலீஸ் சொல்லி வந்தது. 

இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. `உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி முழுமையான சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று நாங்கள் அப்போதே வலியுறுத்தினோம். தற்போது சயான், டெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூவிடம் கூறிய தகவல்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன். இப்போதும் நாங்கள் சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிற்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார்.

இந்த வீடியோ கிளப்பியிருக்கும் அதிர்வுகள், எதிர்வரும் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதனால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதும் கேள்விக்குறியே. தற்போதைய நிலையில், அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு ‘வெயிட்டான மேட்டர்’ சிக்கியுள்ளது. கூடுதல் சீட்டுகளை மிரட்டிப் பெறுவதற்கு, பி.ஜே.பி-க்கும் இன்னொரு துருப்புச்சீட்டு கிடைத்துள்ளது. ஆளும் கட்சி இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைத்தான் தமிழகமே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.