28/04/2019

பழங்குடிகளை இடப்பெயர்வு செய்யக்கூடாது...


பழங்குடிகள் இல்லாமல் காடுகளை பாதுகாக்க முடியாது. ஆங்கிலேய காலனிய காலத்தில், வனத்தின் மீதிருந்த பழங்குடிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. 'சுதந்திர' இந்தியாவிலும் பழங்குடிகளின் வன உரிமை மறுக்கப்படுகிறது.

காடுகளை அழித்து கனிமவளங்களை சுரண்டி எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். இவற்றை எதிர்க்கும் பழங்குடிகள் வனத்தில் இருந்து துரத்தப்படுகிறார்கள்.

வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள், வன உரிமை சட்டத்தின் கீழ் தங்கள் நிலங்களுக்கு பட்டா கோரிய மனுக்கள் பெரும்பாலும் மறுக்கப்படுகின்றன.

இவ்வாறு, இந்தியா முழுவதும் வனப்பகுதியில் வசிக்கும் 1,127,446 பழங்குடிகளின் பட்டா மனுக்கள் மறுக்கப்பட்டுள்ளன.

Wildlife First என்னும் அரசு சாரா அமைப்பு பதிவு செய்துள்ள வழக்கில்,  உச்ச நீதிமன்றம் மேற்கூறிய பழங்குடிகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு தமிழகத்தில், 7148 குடியிருப்புகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினரை வனத்தில் இருந்து வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையின்போது மத்திய அரசு தனது வழக்கறிஞரைக்கூட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

பழங்குடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை வன அழிவிற்கே வழி வகுக்கும் . இதேநேரத்தில், அதிவிரைவு புல்லட் இரயில் திட்டம் போன்ற 'வளர்ச்சி' திட்டங்களுக்கான அனுமதி தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன.

2014 - 2019 வரை இவ்வாறு நாடு முழுவதும் வனப்பகுதியில்  682 வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது வனங்களை அழித்து கனிமவளங்களை எடுக்கவும், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமானம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இப்படியான அரசு செயல்பாடுகள் தான் சின்னதம்பி போன்ற யானைகள் தம் தாய்நிலத்தை விட்டு வெளியேற காரணமாக அமைகின்றன.

காலநிலை தன்னிலை மாறி வரும் நிலையில் வனங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் தேவையானது.

வனங்களை பாதுகாக்க காடுகள் குறித்த மரபு அறிவுபெற்ற பழங்குடிகளை பாதுகாக்க வேண்டியது அடிப்படையானது.

எனவே தமிழக அரசு மறுக்கப்பட்ட பழங்குடிகளின் மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களை பூர்விக வனப்பகுதியிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு தேவையான உத்தரவுகளை உச்சநீதிமன்றத்தில் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

-தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.