15/04/2019

ஜிடிபி (GDP) எனும் மாயை...


எங்கு சென்றாலும் ஜிடிபி வளர்ச்சி, ஜிடிபி வளர்ச்சி என்று சதா மக்கள் பிதற்றுகிறார்கள். ஆனால் அதைப் பற்றிப் பெரும்பான்மை யானவர்களுக்குப் புரிதல் இருப்பதில்லை. உண்மையில் ஜிடிபி நம்மை நச்சு கலந்த உணவை நோக்கித் தள்ளுகிறது.

ஒரு மரம் உயிருடன் நின்று கொண்டிருந்தால் அதனால் ஜிடிபி வளர்ச்சி இருக்காது. ஆனால், அதே மரம் வெட்டப்பட்டு ஒரு பொருள் செய்து பணம் ஈட்டினால் ஜிடிபி வளரும். ஒரு கார் வாங்கினால் ஜிடிபி வளரும். அதே காரை பெட்ரோல் போட்டு அடிக்கடி ஓட்டினாலும் ஜிடிபி வளரும்.

ஏனென்றால் பொருளாதார அறிஞர்கள், 'நுகர்வு, வளர்ச்சிக்கு வழிகோலும்' என்கிறார்கள். சிலர் நாட்டின் ஜிடிபி மேலும் வளர சிக்னலில் சிவப்பு விளக்கின் நேரம் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். இதனால் அதிக காற்று மாசுப்பட்டு அதனால் நாம் நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் செல்வோம். ஜிடிபி வளரும். மருந்து வாங்குகிறோம். ஜிடிபி வளரும்.

அதேபோலதான், சுத்தமான நதி ஜிடிபிக்கு ஆபத்தானது. சுத்தமான நதிகள் இந்தியாவில் இல்லை என்பது வேறு கதை. அசுத்தமான நதிகளே ஜிடிபியை வளர்க்கும். நதியைச் சுற்றி நிறுவனங்கள் இருந்தால், அதனால் பொருள் ஈட்டப்பட்டு ஜிடிபி வளரும். நிறுவனங்கள் கழிவுகளை நதியில் கலப்பது பிரச்சனை இல்லை. அதற்காக 10,000 கோடி ரூபாயில் சுத்தப்படுத்தும் திட்டம் போடப்பட்டால் மறுபடியும் ஜிடிபி வளரும். இதுதான் ஜிடிபி வளர்ச்சியின் அடிநாதமாகத் திகழ்கிறது.

சுத்தமான, தரமான உணவு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஆனால் அது ஜிடிபிக்கு எதிரானது. ஆனால் நச்சான உணவுதான் ஜிடிபி வளர்ச்சிக்கு உதவும். அதனால்தான் உணவை நச்சாக்குவது பொருள் ஈட்டுவதற்கு உதவும். நச்சு கலந்த உணவு நமக்கு நோயைத் தரும். அதனால் மருந்துகள் வாங்குவோம். மருந்துகள் வாங்கப்படுவதால் ஃபார்மா நிறுவனங்கள் வளரும். ஜிடிபியும் வளரும். நோய்க்கு ஆளாவதால் காப்பீட்டு நிறுவனங்கள் நோக்கித் தள்ளப்படுவீர்கள். காப்பீட்டு நிறுவனங்கள் வளர்ந்து மறுபடியும் ஜிடிபி வளரும். இது இங்கு மட்டும் நடக்கும் விஷயம் அல்ல. சர்வதேசப் பொருளாதாரம் இப்படித்தான் வளர்ச்சி கண்டு வருகிறது.

இப்பவும் ஜிடிபி வளர்ச்சினு சொன்னீங்கனா உங்கள் சந்ததியினர் வாழ இங்கு எதுவும் இருக்காது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.