06/07/2017

கதிராமங்கலம் காக்க - மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்...


கதிராமங்கலத்தைக் காப்பதற்கான களப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் “மகளிர் ஆயத்தின்” மகளிர் தோழர்கள், இன்று (05.07.2017) தஞ்சை மாநகரில் செய்தப் பணிகளைப் பார்த்து தஞ்சை மக்கள் திகைத்து நின்றனர்..

கதிராமங்கலத்தில் மக்களைத் தாக்கி ஓ.என்.ஜி.சி.க்கு அடியாள் வேலை பார்த்த காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அச்சிடப்பட்ட சுவரெட்டிகளை குடந்தை நகரில் நாம் ஒட்டிய நிலையில், அதைக் காவல்துறையினர் கிழித்தெறிந்தனர்.

இன்று (05.07.2017) அச்சுவரொட்டிகளை மகளிர் ஆயத்தின் தோழர்கள் தாங்களாகவேச் சென்று தஞ்சையின் முதன்மை வீதிகளில் ஒட்டினர். தள்ளாத அகவையிலும் இளைஞரைப் போல் சுறுசுறுப்போடு செயல்பட்டு வரும் மகளிர் ஆயத்தின் நடுவண் குழு உறுப்பினர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில், மகளிர் தோழர்கள் கோகிலா, சரசுவதி, உமா, தானி ஓட்டுநர் சிவா ஆகியோர் இப்பணியை மேற்கொண்டனர். நாளையும் அப்பணியில் தோழர்கள் ஈடுபடுகின்றனர்.

முன்னதாக, கடந்த 03.07.2017 அன்று திருச்சி நடுவண் சிறைக்கு சென்ற தோழர் இலட்சுமி அம்மாள், வெள்ளம்மாள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசினர்.

இதனையடுத்து நேற்று (04.07.2017), கதிராமங்கலத்திற்குச் சென்ற தோழர் இலட்சுமி அம்மாள் உள்ளிட்ட தோழர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் தோழர்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மகளிர் ஆயத்தின் பணி தொடர்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.