03/07/2018

மரமும் மனிதனும்...


பாலை  என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும்.

சிறப்பு - தமிழர் நிலத்திணைகளில் ஐந்தில் ஒன்றான குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதியை பாலை என்பர். இந்த பாலை நிலத்தில் விளையும் இந்த மரம், பாலைமரம் என்றே பெயர் பெற்றிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

வளரும் நாடுகள் - இலங்கையில் பாலை மரங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் வட மத்திய பகுதிகளிலும் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையைத் தவிர இந்தியா, வங்காளதேசம், மியான்மர், கம்போடியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இத்தாவர இனம் காணப்படுகிறது.

பயன்பாடு - இலங்கையில் தொடர்வண்டி சேவை தொடங்கியக் காலங்களில் பாலை மரப்பலகைகளைப் பயன்படுத்தியே தொடர்வண்டி செல்வதற்கான தண்டவாளங்களுக்கான படுக்கைக் கட்டைகள் இட்டனர். ஆங்கிலேயர் இதனை "இலங்கை இரும்பு" (Ceylon Steel or Ceylon Iron wood) என்றும் அழைத்தனர். இருப்பினும் ஆங்கிலேயர் காலங்களில் போட்ட படுக்கைக் கட்டைகள் இன்றும் உக்கிப்போகாமல் உறுதியுடன் இலங்கையில் பல்வேறு தொடர்வண்டிப் பாதைகளிலும் காணப்படுகின்றன.

இலங்கையின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கட்டப்பட்டிருக்கும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் போன்ற கட்டடங்களின் கூரை தேவைக்கு பெரும்பாலும் பாலை மரப்பலகைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை நூற்றாண்டுகளாக உக்கிப்போகாமல் உழைக்கக்கூடியன.

கடத்தல் - இலங்கை வடக்கு கிழக்கு காடுகளில் வளரும் பாலைமரங்களை தறிப்பதற்கு அனுமதிப் பத்திரம் பெறவேண்டும். ஆனால் அனுமதிப் பத்திரம் பெறாமல் பாலைமரங்களை தறித்து கடத்தலில் ஈடுபடுவோர் உள்ளனர். இதனை கட்டுபடுத்துவதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்த முனைந்தாலும், இந்த கடத்தல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வன்னிப் பகுதி இருந்தவேளை இவை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் இந்த மரக்கடத்தல்கள் தொடர்வதை செய்திகள் தருகின்றன.

பாலை வகைகள் - பாலப்பழம் பழுக்கும் பாலமரம் வேறு. இதனை வீடுகளில் வளர்ப்பதில்லை. அது காட்டில் தானாக வளரும் மரங்களாகும். அவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை பழம் காய்க்கும். அப்பழங்கள் மிகவும் இனிப்பானது.

கருமையான நிறத்தில் சுண்டுவிரல் அளவில் சற்றே குறைந்த பருமனுள்ளதாக, 50 சென்டிமீட்டர் நீளத்தில் நுனியில் மட்டும் இணைந்திருக்கும் இரட்டைக்காய்கள் காய்க்கும் பாலமரம் வேறு. இதற்கும் பாலை நிலத்துக்கும் தொடர்பு உண்டு. கீழே உள்ள படங்களில் உள்ள மரம் இது.
மற்றொன்று பாலக்கொடி.

பாலைப்பழம் - பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். இது இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காடுகளில் வளரும் பாலை மரத்தில் காய்க்கும் பழமாகும்.[4] பாலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தை பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.

பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்புச் சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின் போன்ற பால் பசைப் போல் வாயில் ஒட்டிக்கொள்ளும். பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவைகளாகவே விற்பனை செய்வர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.