16/08/2018

கைவிடப்பட்ட நிலையில் கம்பர்.. தமிழக அரசின் கவனத்துக்கு...


கம்பர் எழுதிய ராமாயண காவியத்தை உலகமே போற்றுகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே அமைந்துள்ள கம்பரின் சமாதியோ பராமரிப்பின்றி காணப்படுகிறது. அங்குள்ள கம்பர் கோவிலுக்குச் செல்லும் சாலை, பல ஆண்டுகளாகவே குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

1,000 ஆண்டுகள் பழமையான கம்பர் நினைவிடம் தற்போது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இந்த நினைவிடத்தைப் பாதுகாத்து அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென்று வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதுசம்பந்தமாக விசாரணை நடத்திய நீதிமன்றம், கம்பர் நினைவிடப் பராமரிப்புத் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள கருதுப்பட்டி என்ற கிராமத்தில்தான் கம்பர் நினைவிடம் அமைந்துள்ளது. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பர் இயற்றிய ராமாயணத்தில் காதல் தமிழ், வீரத் தமிழ், ஆன்மிகத் தமிழ் என அனைத்தும் இருக்கும். அதனால்தான் இன்றும் இந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதி உள்ள இடத்திலிருந்து மண் எடுத்து குழந்தையின் நாக்கில் வைப்பது வழக்கமாக உள்ளது. அப்படிச் செய்வதால், குழந்தை  நல்ல தமிழாற்றலுடனும் மிகுந்த தமிழ் அறிவுடனும் வளரும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை.

கம்பன் வாழ்ந்த காலம் கி.பி 9-ம் நூற்றாண்டு. தஞ்சை மாவட்டம் தேரெழுந்தூர் எனும் ஊரில் பிறந்தவர். தான் எழுதிய ராமாயணத்தை கி.பி 886-ல் திருவெண்ணெய் நல்லூரில் அரங்கேற்றினார். அதன் பின்னரே அவர் 'கவிச் சக்கரவர்த்தி' என அழைக்கப்பட்டார். சோழ மன்னன் குலோத்துங்க சோழனின் மகளுக்கும் கம்பன் மகனுக்கும் காதல் ஏற்படவே சோழ மன்னன் கோபம் கொண்டான். குலோத்துங்க சோழனின் அரசவையில் கொடிகட்டிப் பறந்தவர் கம்பர். புலவரின் குடும்பத்தில் தன் மகளுக்கு ஏற்பட்ட காதலை மன்னன் ஏற்கவில்லையென்றதும், மனம் வெறுத்தநிலையில் கம்பர் நாடோடியாகப் பல்வேறு இடங்களிலும் சுற்றித்திரிந்தார். இறுதியாக, சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் மாடு மேய்க்கும் சிறுவனிடம் முடிக்கரைக்கு கம்பர் வழிகேட்க, அந்த சிறுவனோ, "அடிக்கரை போனால் முடிக்கரை சென்றடையலாம்" என்று கவிநயத்துடன் சொன்னதைக் கேட்டு, அச்சிறுவனின் பேச்சாற்றல், கவிநயத்தால் கவரப்பட்ட கம்பர், "நாம் தங்க வேண்டிய இடம் முடிக்கரை அல்ல; நாட்டரசன்கோட்டைதான்" என்று முடிவு செய்தார். இதையடுத்து அங்கேயே தங்கினார் கம்பர். தன் இறுதி காலத்தையும் அங்கு கழித்தார்.

"தாடியுடன் தள்ளாத வயதில் வந்திருப்பவர் கம்பர்" என்று தெரிந்துகொண்டார் ஆவிச்சி செட்டியார். அதன் பிறகு ஆவிச்சி செட்டியார் தோட்டத்திலேயே தங்கியிருந்தார் கம்பர். மிகக் கொடிய வறுமையில் வாடிய கம்பர், நாட்டரசன்கோட்டையின் எல்லைப்புறத்தில் உள்ள ஆவிச்சி செட்டியார் தோட்டத்திலேயே மரணமடைந்தார். அவர் இறந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டு இன்றளவும் அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் மேல் வரலாற்றுப் பின்புலம்கொண்ட கம்பர் கோயிலில், அவரின் புகழைப் போற்றும்வகையில் அரசு சார்பில் எந்த விழாக்களும் நடத்தப்படுவதில்லை. இதனால், இப்பகுதியில் வாழும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் கம்பரைப் பற்றித் தெரியாத சூழல் நிலவுகிறது.

தவிர, கம்பர் சமாதி அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. புனித குளமாகக் கருதப்பட்ட கம்பன் குளம் பராமரிப்பு இல்லாததால், சிதிலமடைந்து நீர் வரத்தின்றிக் காணப்படுகிறது. தனியார் பராமரிப்பில் உள்ள கம்பர் கோயில் சுற்றுச்சுவர் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. கம்பன் விழாக்கள் மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட ஏராளமான வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. இதில் கம்பனுடைய இலக்கியங்கள் குறித்த பிரசங்கங்கள், பட்டிமன்றங்கள் நடக்கின்றன. ஆனால், அவர் இறுதிகாலத்தில் வாழ்ந்து உயிர் துறந்த ஊரான நாட்டரசன்கோட்டையில் கம்பனுக்குப் பெரிய அளவில் விழா எதுவும் நடத்தப்படுவதில்லை என்பது வேதனையான உண்மை.

"நாட்டரசன்கோட்டையில் கம்பன் மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய தமிழக அமைச்சர் தமிழ்க்குடிமகன் ஒரு விழாவில் அறிவித்தார். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. கம்பருடைய உண்மையான தமிழ்ப் பற்று, கம்பர் தமிழுக்கு ஆற்றியத் தொண்டு ஆகியன நாளடைவில் இப்பகுதியில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மறையும் நிலை உள்ளது.

“சிவகங்கை மாவட்டச் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் கம்பன் நினைவிடத்தையும் சேர்த்து, அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் அளவுக்குச் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்; கம்பன் குளத்தைச் சீரமைக்க வேண்டும்" என்பதே நாட்டரசன்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுபற்றி சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கந்தசாமி பேசும்போது, "நாட்டரசன்கோட்டையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை கண்ணாத்தாள் கோயில் திருவிழாக் காலங்களில் தனியார் அமைப்புகள் சார்பில் கம்பன் விழா நடத்தப்பட்டது. 10 நாள் நடக்கும் இந்த விழாவில் தினந்தோறும் பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது தனியார் சார்பிலும் விழா நடத்தப்படுவதில்லை; அரசு சார்பிலும் எந்த நிகழ்ச்சியும்  நடத்தப்படுவதில்லை. கம்பருக்கு மணி மண்டபம் அமைத்து, அவரின் நினைவைப் போற்றும் வகையில் இலக்கிய விழாக்கள் நடத்தப்பட வேண்டும். உலகமே கம்பரைப் போற்றுகிறது. மிகப்பெரிய காவியம் தந்த கம்பர் நினைவிடம் பராமரிப்பு இல்லாமல் இருப்பது தமிழர்களுக்கும், தமிழக அரசுக்குமான அவமானமாகவே கருதுகிறேன். எனவே, உடனடியாக கம்பருக்கு அரசு விழா நடத்த வேண்டும்" என்றார். கம்பர் குறித்த கோரிக்கைக்கு தமிழக அரசு கவனம் செலுத்துமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.