13/06/2017

பாரம்பரிய முறையில் விதைகளை பகிர்ந்தால் 12 ஆண்டு சிறை, ரூ.1.5 கோடி அபராதம்...


பாரம்பரிய முறைப்படி விதைகளை பகிர்ந்துக் கொண்டால் சிறை தண்டனையை எதிர்கொள்ளும் நிலைக்கு டான்சானிய விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாய உற்பத்தியில் ஈடுபடும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கும் வகையில் டான்சானிய அரசு புதிய சட்டத்தை கடந்த டிசம்பரில் இயற்றியுள்ளது. இதன்படி காப்புரிமைப் பெறப்பட்ட விதைகள் பரிமாற்றத்திற்கு முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விதைகள் பகிர்வானது 80 விழுக்காடு அளவுக்கு பாரம்பரிய முறைப்படி, தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் தங்களுக்குள் பகிர்ந்துக் கொள்ளும் முறைப்படியே டான்சானியாவில் நடைபெற்று வருகிறது.

இதனை தடை செய்வதன் மூலம் டான்சான்யாவின் கிராமப்புற பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும் என பாரம்பரிய விதை பாதுகாப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

புதிய சட்டத்திற்கு உட்பட்டு நீங்கள் மான்சாண்டோ அல்லது சிங்கெண்டா நிறுவனங்களிடம் இருந்து விதைகள் வாங்குவீர்களேயானால் அதன் அறிவுசார் சொத்துரிமையை அந்நிறுவனங்கள் தக்க வைத்துக் கொள்ளும். ஒருமுறை வாங்கும் விதைகளை நீங்கள் எடுத்துவைத்து, பின்னர் மீண்டும் பயன்படுத்தும் போது, உங்களது நிலத்தில் வர்த்தகமற்ற பயன்பாட்டுக்கு மட்டுமே அதை பயன்படுத்த முடியும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ, உறவினர்களுக்கோ விதைகளை பகிர்வது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமாக ஆப்ரிக்காவின் பெரும்பான்மை மக்கள் பாரம்பரிய முறைப்படியே விதைகளை பகிர்ந்து வருகின்றனர். இதனை அரசு சட்டவிரோதமாக்கியுள்ளது என்கின்றனர் விதை பாதுகாப்பு அமைப்பினர்.

புதிய சட்டவிதியின்படி, பாரம்பரிய முறைப்படி விதைகளை பகிர்ந்தால் டான்சானிய விவசாயிகள் 12 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்கவோ அல்லது, 2 லட்சத்து 5,300 பவுண்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான சம்பளத்தை பெறும் டான்சானிய விவசாயிகளுக்கு இந்த அபராதத்தொகை கனவில் கூட காண இயலாதது.

சர்வதேச ஊடகங்களில் இச்செய்தி பெரிய இடத்தை பெறாவிட்டாலும், உணவுரிமைக்காக போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இது குறித்த செய்திகளை சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாக பகிர்ந்து வருகின்றனர்.

2012-இல் ஜி-8 நாடுகளின் NAFSN எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான புதிய கூட்டமைப்பு உலகில் ஏழ்மையால் உழலும், பசியால் அவதிப்படும் 50 மில்லியன் மக்களின் நலன் சார்ந்த புதிய முடிவை எடுத்ததாகவும், அதனையொட்டியே டான்சானிய அரசு இந்த புதிய சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விதைகளின் அறிவுசார் சொத்துரிமைக்கு அனுமதி அளித்ததன் மூலம், UPOV 91 கூட்டமைப்பில் இணைந்த முதல் வளர்ச்சி குன்றிய நாடு என்ற சிறப்பை டான்சானியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

50 மில்லியன் மக்களின் பசியை போக்கக் கூடியதாக சொல்லப்படக்கூடிய இந்த நடவடிக்கை உணவுக்காக டான்சானியாவை ஜி-8 நாடுகளிடம் கையேந்த வைத்துவிடும் என விதைகள் பாதுகாப்பு அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் ஆப்ரிக்க ஏழை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையிலேயே டான்சானியா அரசால் இந்த முற்போக்கு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிங்கெண்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

நன்றி: நியூசு 7 தமிழ்...

இந்திய அரசு கொக்க கோலா என்ற அந்நிய பெருநிறுவனத்திற்கு விளை நிலங்களையும் விவசாயத்தையும் தாரைவாரத்திருப்பது பல ஆயிரம் கோடிகளை அவர்கள் விவசாயத்தில் முதலீடு செய்ய அனுமதித்திருப்பது நாளை நம்மை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று கொஞ்சம் ஊகித்துப் பாருங்கள், நம்மை ஆள்வது அரசு தானா என்ற கேள்விக்கு விடை காணுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.