30/10/2018
ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு...
மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.
அதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.
அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில....
பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது.
பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.
அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம்.
இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்...
திருவிசநல்லூரில் சூரிய ஒளிக் கடிகாரம்...
14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்...
காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன.
அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன் கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.
இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது...
அகநானூறு...
அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும்.
இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது.
நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு.
இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல.
இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.
எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன.
இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே.
அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.
அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளது. அவை...
களிற்றியானைநிரை:
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.
மணிமிடை பவளம்:
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
நித்திலக் கோவை:
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.
அகநானூற்றால் அறிய வரும் வரலாற்றுச் செய்திகள்..
அகப்பொருள் நூலான அகநானூறில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன.
தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிவிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது.
அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலும் வாணிபமும்:
நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்திஅகந்நானூறு வழி தெரிகிறது.
யவனர்கள் வாசனைத் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை
"யவனர் தந்தவினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்"
என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.
வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகள்..
அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. "மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று விளக்கப்படுகிறது...
அழிந்து வரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்...
அரிக்கன் விளக்கு - காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.
அம்மி - குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.
அண்டா - அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.
அடுக்குப்பானை - ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.
அடிகுழாய் - கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.
ஆட்டுக்கல் - வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.
அங்குஸ்தான் - தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.
ஓட்டியாணம் - பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.
எந்திரம் - (அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.
உரல் - வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.
உரி - (வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.
குஞ்சம் : குஞ்சலம் - (பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.
கூஜா - (குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.
கோகர்ணம் - (ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.
கொடியடுப்பு - ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.
சுளகு - வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.
தாவணி - (இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.
தொடி - பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.
நடைவண்டி - (குழந்தை நடை பழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.
பஞ்சமுக வாத்தியம் - கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.
பாக்குவெட்டி - (பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.
பிரிமணை - (பானை போன்றவை உருண்டு விடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.
புல்லாக்கு - மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்க விடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.
முறம் - (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.
லோட்டா - நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.
மரப்பாச்சி - பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.
மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்து கொண்டே வருகின்றன.
முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம்.
அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்...
பாகற்காயின் மருத்துவ குணங்கள்...
உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்...
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
12. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவுடன் சேர்த்து உண்டு வந்தால், கணையம் சீராகி இன்சுலின் சுரப்பு நாளடைவில் கூடுதலாகும் வாய்ப்பு உள்ளதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்...
உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல்....
படத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு.
இதை நம் ஊரில் 'வெள்ளிகாவரை' ன்னு சொல்லுவாங்க.
சில இடங்களில தூக்கு, தூக்கு கோல்ன்னும் சொல்லுவாங்க..
வெள்ளைக்கோல்வரை என்கின்ற
சுத்தமான, அழகான தமிழ் சொல் தான் நம்ம வாய்களுக்குள்ள நுழஞ்சி சிதஞ்சி வெள்ளிகாவரன்னு ஆகி போச்சு.
அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க..
அதனால தான் இந்த பேரு.
அந்த கோடுங்க தான் எடைகளுக்கான குறியீடு. பொதுவா தாரசுன்னா இரண்டு தட்டு இருக்குறது வழக்கம்.
ஒண்ணு எடைக்கல் வைக்கறதுக்கு. இன்னொன்னு எடை போட வேண்டியத வைக்க.
ஆனா இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு.
ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது.
அங்க இங்க நகர்த்துற மாதரி அந்த கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பங்க. தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த கோட்டுலயே கயித்த இருக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான்.
கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல பாக்க தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம்.
கோல் கீழபாக்க தாந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இப்ப புழக்கத்துல இருக்குற ரெட்டத்தட்டு தராச விட இந்த ஒத்தத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைங்க உண்டு. இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல.
இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும்.
ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்ல. இன்னக்கு ரயில்வே ஸ்டேசன், லாரி ஆபீஸ் மாதரி இடங்களில பண்டங்கள நிறுக்க பயன்படுத்தப்படுகிற 'மேடை சமநிலை' (Platform Balance) ங்களுக்கு மூலம் நம்ம தாத்தாங்க கண்டுபிடிச்ச ஒத்தத்தட்டு தராசு தான்.
நாம அபிவிருத்தி பண்ணியிருக்க வேண்டிய நம்ம தாத்தாக்களோட தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திகிட்டு இருக்கான். நாம வேடிக்க பாத்துகிட்டு இருக்கோம். என்ன கொடுமை சார் இது?
திருவள்ளுவர் சொன்ன "சமன் செய்து சீர்தூக்கும் கோல்" இது தான்.
இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல்ங்கிறது வேற ஒண்ண ஞாபாகப்படுத்துது.
தமிழ் மாதம் ஐப்பசிக்கு துலாம் மாசம்ன்னு ஒரு பேரு இருக்கு. இந்த பேரு எத்துக்குன்ன சூரியன் துலாரசில சஞ்சரிக்குற மாதம் இது. சூரியன் துலா ராசில நுழையுற நாள் அன்னக்கி பூமில பகலும் ராத்திரியும் சம நீளத்துல இருக்கும்.
அதாவது பகல் 12 மணி நேரம் ராத்திரி 12 மணி நேரம். மத்த நாளையில எல்லாம் பகலுக்கும் ராத்திரிக்கும் நீளத்துல கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும். எனவே சமமான நீளம் கொண்ட பகலிரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம்ன்னு பேர் வச்சிருக்கிறாங்க நம்ம தாத்தாங்க.
இன்னும் ஒரு கூடுதல் வானத்தில் துலாராசி நம்ம ஒத்ததட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில் தான் இருக்கு.
இப்படி வானியல், கணக்கு, கணக்கீடு, சமானம்ன்னு நம்ம தாத்தாங்களோட பன்முக அறிவு செழிப்பை நினைச்சி பார்க்கையில் நம்மால் ஆ....ன்னு வாய பிளக்கதான் முடியுது.
நம்ம தாத்தாங்களோட அறிவு தொடர்ச்சி கண்ணி நம்ம விட்டு எப்போ, எங்கே அறுந்து போச்சுங்கிற கேள்விக்கு தான் பதில் இல்லாமல் நாம் மற்றவர்கள் முன்னால நின்றுக்கிட்டு இருக்கிறோம்...
Subscribe to:
Posts (Atom)









