மதுரை அருகே 400-க்கும் மேற்பட்ட பழமையான ஓலைச்சுவடிகளை வைத்திருக்கும் ஜமீன் வாரிசு, அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்.
மதுரை அருகே அதலை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (45). ஜமீன் வாரிசான இவரிடம், முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்ற 400 ஆண்டு கால பழமையான அரிய ஓலைச்சுவடிகள் உள்ளன. இவரது குடும்பத்தினர் அதலை கிராமத்தை மையமாக கொண்ட 18 கிராமங்களுக்கு சிறிய ஜமீனாக இருந்துள்ளனர். அங்கிருக்கும் இவர்களது பெரிய வீடு அந்த ஊரின் அடையாளமாக உள்ளது. தற்போது இதைப் பராமரிக்க பொருளாதார வசதி இல்லாததால் வீடு சிதலமடைந்து காணப்படுகிறது.
பொதுமக்களிடம் பெற்ற நன்மதிப்பால் இவரது குடும்பத்தினர்தான் ஊராட்சித் தலைமைப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இவரது தந்தை பழனியாண்டி ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வாகி 1995-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரது தந்தைக்குப் பிறகு, இந்த ஊராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் இவரது சகோதரி ஊராட்சித் தலைவரானார். இவரது தாத்தா வீரணன் 1967-ல் ஆண்டில் மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார்.
வீரணனின் தந்தை சோனைமுத்து பிரிட்டீஷார் ஆட்சியில் கிராம முன்சீப்பாக இருந்துள்ளார். இதற்கு முந்தைய இவர்களுடைய தலைமுறையினர்தான், இந்த ஊர் ஜமீனாக இருந்துள்ளனர். அவர்கள் எழுதி வைத்துச் சென்றதுதான் இந்த ஓலைச்சுவடிகள்.
இதுகுறித்து நடராஜன் கூறும்போது, எங்கள் வீட்டில் உள்ள இரும்புப் பெட்டியில் 400 ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயம் மற்றும் அந்தக் காலத்தில் போர்க்களத்தில் வீரர்கள் பயன்படுத்திய வளரி ஆயுதம் போன்றவை இருந்தன. செப்புப் பட்டயத்தில் அழகர்கோவில் பாளையப்பட்டு சிறுவாலை ஜமீன், எங்கள் முன்னோரான மணியன் சேர்வைக்காரர் உள்ளிட்டோர் செய்த சிறந்த சேவைக்காக அதலை, பிள்ளையார் நத்தம், பரவை, ஊர்மெச்சிகுளம், சமயநல்லூர், தல்லாகுளம் உட்பட 18 கிராமங்களை எழுதி வைத்துள்ளார்.
இந்த ஊர்களில் நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளவும், சொத்துகளை அனுபவிக்கவும் அந்த ஜமீன் எங்கள் முன்னோருக்கு செப்புப் பட்டயம் எழுதி உரிமை அளித்துள்ளனர். ஓலைச்சுவடிகளில் என்ன தகவல் இருக்கிறது என்பதை அறிய அதை 15 ஆண்டுகளுக்கு முன் மதுரை தொல்லியல் துறை அலுவலகத்தில் தந்தேன். அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட அவர்கள், பின்னர் அவற்றை திருப்பித் தரவே இல்லை. ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்ட தகவல்களையும் அவர்கள் படித்துக் காட்டவில்லை.
அதில் உள்ளவற்றைப் படித்து சொன்னால் எங்கள் முன்னோர் எங்களுக்கும், இந்த சமூகத்துக்கும் என்ன சொல்லிச் சென்றார்கள் என்பதையும் அறிய முடியும். ஓலைச்சுவடிகளை பூச்சிகள் அரிக்காமல் பாதுகாப்பது பெரிய சிரமமாக உள்ளது. ஒருவித ரசாயனத்தை தடவிப் பாதுகாக்கிறேன். இதுதவிர எங்கள் முன்னோர், ஏராளமான காகித ஆவணங்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அவை நொறுங்கி உதிர்ந்து வருகின்றன.
தொல்லியல்துறை அதிகாரிகள் இந்த ஓலைச்சுவடிகளைப் படித்துக் காட்ட உதவ வேண்டும் என்றார்.
மதுரை தொல்லியல்துறை அதிகாரி (உதவி பொறியாளர்) மாலிக்கிடம் கேட்டபோது, முன்பு இருந்தவர்களிடம் ஓலைச்சுவடியைக் காட்டியிருக்கலாம். அவர்கள் அதில் அக்கறை எடுத்திருக்காமல் இருந்திருக்கலாம். தற்போது மகால் தொல்லியல்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தால் நாங்கள் படித்துக் காட்டுகிறோம். அதற்கு கட்டணம் எதுவும் இல்லை. அவரிடம் இருக்கும் ஓலைச்சுவடிகள் அவரது சொத்து என்றார்...
































