09/02/2019

பட்டினி கிடந்தாலும் பிச்சை எடுக்கக் கூடாதுப்பா.. பழனியில் சூடம் விற்கும் பழனியம்மா பாட்டி...


கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவனிடம் சொல்கிறார் அந்தப் பாட்டி. அவனோ, தயக்கத்தோடு ''காசு இல்லை பாட்டி" என்கிறான். சற்றும் யோசிக்காமல், இரண்டு சூட வில்லைகளை அவன் கையில் கொடுத்து, 'பழனி ஆண்டவன வேண்டிக்க, ஒன்ன நல்லா வெச்சிப்பான்' என்கிறார் சிரித்துக்கொண்டே.

கறாராக வியாபாரம் செய்வோர் மத்தியில், சின்னப் பையனின் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என நினைக்கும் பாட்டியை ரொம்பவே பிடித்துபோனது. அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது... முதலில் தயங்கினாலும், இயல்பாகப் பேசத் தொடங்கினார் பாட்டி, "எம் பேரு பழனியம்மா, 15 வருஷமா இங்கே சூடம் வித்துட்டு இருக்கேன்" என்றவரிடம் ஒருவர் சூடம் வாங்க வர, வியாபாரத்தைக் கவனிக்கிறார்.

கூன் விழுந்த முதுகு, எலும்போடு ஒட்டியிருக்கும் சுருங்கிய தோலில், ஒட்டாமல் தளர்வுடன் இருக்கும் ஜாக்கெட், நரைத்துப் போன தலைமுடி, கழுத்தில் சாயம் போன சிவப்புக் கயிறு, நடை தளர்ந்திருந்தாலும் நம்பிக்கை இழக்காத பார்வை...

இவைதாம் பழனியம்மா பாட்டியின் அடையாளம். பாட்டிக்கு வயது 85 - க்கும் மேல் இருக்கலாம். “சாமி... சூடம் வாங்கிக்கிறியா?” என்று பழனியம்மா பாட்டியின் நடுங்கும் குரலைக் கேட்காமல் பழனி கோயிலுக்குச் செல்ல முடியாது. சிலரின் புன்னகையும், பார்வையும் நம்மை எளிதில் கவர்ந்துவிடும். அப்படிக் கவர்ந்தவர்தான் பழனியம்மா பாட்டி.

உழைக்கும் வகையில் உடல் திறனிருந்தும், பலர் பழனி மலையடிவாரத்தில் பிச்சையெடுத்துக்கொண்டிருக்க, தள்ளாடி நடக்கும் வயதிலும் பழனியம்மா பாட்டி உழைத்துக்கொண்டிருக்கிறார். பழனியம்மா பாட்டியின் கையிலிருக்கும் தட்டில் கற்பூரம், சாமிக்கு காணிக்கையாகச் செலுத்தும் சின்னச்சின்ன வேல்கள், பாதமலர், அத்தோடு பத்துப் பதினைந்து ரூபாய்க்குச் சில்லறைகள் எப்போதும் இருக்கும்.

மழையிலிருந்தும் வெயிலிலிருந்து காப்பாற்றும் என நம்பியிருக்கும் ஒரு கிழிந்து போன குடையோடு அவரை நீங்கள் பார்க்க முடியும். அந்தக் குடையை நிழல்வரும்படி, தள்ளி வைத்துவிட்டு, பேச்சைத் தொடர்கிறார்.

"நான் சின்ன வயசா இருக்கிறப்பவே, என் அப்பா என்னையும் அம்மாவையும் விட்டு ஓடிப்போயிட்டாரு. அம்மாதான் என்ன வளத்தாங்க. எனக்கு பத்து வயசு இருக்கறப்ப கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்க. ரெண்டு ஆம்பள புள்ளைங்க, ரெண்டு பொம்பளப் புள்ளைங்கனு மொத்தம் நாலு புள்ளைங்க. நாலுல மூணு செத்துப் போயிருச்சு.

ஒரு பொம்பள புள்ள மட்டும்தான் இப்ப இருக்கு. அதையும் கட்டிக்கொடுத்துட்டேன். தன் புருஷன்கூட ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா, அதுவும் இப்ப ரொம்ப தூரத்துல இருக்குது சாமி. எப்போவாது என்ன பார்க்க வருவாங்க” என்று கூறிக்கொண்டே பாட்டி கண்களைத் துடைத்துக்கொண்டார்.

“அவரும் என்ன தனி மரமா விட்டுட்டு போய் சேர்ந்துட்டாரு சாமி” என்று கூறிக்கொண்டே அழுகிறார். சிறிதுநேரத்தில் கண்கள் சிவந்து போயின. நான் ஏதும் கேட்காமல் மெளனமாக இருந்தேன்.

பாட்டியே தன்னைத் தேற்றிக்கொண்டு,
“பழனியாண்டவன் புண்ணியத்துல இங்கதான் 15 வருஷமா சூடம் விக்கிறேன். எனக்கு இப்ப அவன் மட்டும்தான் துணை. கவர்மென்டுலேருந்து மாசம் ஆயிரம் ரூபாவும், 4 கிலோ அரிசியும் கொடுக்குறாங்க. அதை வெச்சுத்தான் கஞ்சி குடிச்சிகிட்டு இருக்கேன்.

 இந்தத் தள்ளாத வயசுல என்னால வேற எந்த வேல செய்யமுடியும் சொல்லு? போற வாறவங்க ஏதும் சூடம் வாங்குனா அதுல நாலனா எட்டனா கிடைக்கும். அவ்வளவுதான் என் வருமானம்.

 திருவிழா சமயம் வியாபாரம் நல்லா இருக்கும். ஆனா, எனக்கு கூட்டத்தைப் பாத்தாலே, எங்கயாவது விழுந்துடுவோமோனு பயம். ஒருவேளை விழுந்து, கை கால் ஒடஞ்சிட்டா, பாத்துக்க யார் இருக்காங்க? இந்த வயசுல யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது. ஆனாலும், வேற வழியில்லாமதான் கூட்டத்துலயும் போயி சூடம் விப்பேன். யாருக்கும் பாரமா இல்லாம செத்துப் போயிரணும் சாமி. நம்மால ஒருத்தருக்கும் சிரமம் இருக்கக் கூடாது” என்றார் விம்மிய குரலில்.

“சில சமயம், யார் கிட்டவாவது போய் சும்மா காசு கேக்கலாம்னு தோணும். ஆனா, பிச்சை எடுக்க கை வராது சாமி. கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் பரவாயில்லை. பட்டினி கிடந்தாலும் பிச்சை எடுக்கக் கூடாது சாமி” என்று உறுதியான குரலில் சொன்னவர், “எனக்கு ஒரே ஒரு ஆசைதான் சாமி.

 நான் அனாதைப் பொணமா போய்டக் கூடாது. அவ்வளவுதான்" என்று உடைகிறார். அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, "இப்ப எதுக்குப் பாட்டி அந்தப் பேச்செல்லாம்?" என்றேன். அவர் சிரித்துக்கொண்டு வாஞ்சையாய் கைகளைத் தடவிக்கொடுக்கிறார்.
“சரி பாட்டி நான் போயிட்டு வர்றேன். தவறா எடுத்துக்கலைன்னா,

 செலவுக்கு வெச்சுக்குங்க” என்று பையிலிருந்து ரூபாய் நோட்டை நீட்டியதும், பிடிவாதமாய் மறுத்து, ''ம்ஹூம். சூடம் வேணும்னா வாங்கிக்க" என்கிறார். 'சரி, கொடுங்க பாட்டி" என்று சூடம் வாங்கிக்கொண்டு புறப்பட்ட என்னிடம், "இங்க மறுபடியும் வருவியா சாமி? உன்னைப் பார்க்க முடியுமா?" என்கிறார் வெள்ளந்தியான சிரிப்போடு. ''நிச்சயம் வருவேன் பாட்டி" என்று நகர்ந்தேன். "பார்த்து பத்திரமா போயிட்டு வா, சாமி" என்று விடைகொடுத்தார் பழனியம்மா பாட்டி.

பழநி மலைக்குச் செல்லும்போது, உங்களது பார்வையில் பழனியம்மா பாட்டி தென்பட்டால், அன்பாகச் சில வார்த்தைகள் பேசுங்கள். பதிலுக்கு பழனியம்மா பாட்டி, அன்பு ததும்பும் சிரிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தலைவணங்குகிறேன்  தாயே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.