30/05/2017

மாட்டிறைச்சி தடையில் விலக்கு பெற புதிய அவசரச் சட்டம்: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்...


மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்...

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விஷயத்தில் மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடும் மத்திய அரசின் அத்துமீறலைக் கண்டித்து தமிழக அரசு இதுவரை குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்ட போது, அதற்கு பாமக கடும் கண்டனம் தெரிவித்தது. ''விவசாயிகளின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுவது மாடுகள்தான். வாழ்க்கையில் எந்த நேரத்திலும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புள்ள விவசாயிகளுக்கு அத்தகைய தருணங்களில் உதவுவது மாடுகள்தான். குழந்தைகளின் கல்வித் தேவை உள்ளிட்ட காரணங்களுக்காக மாடுகளை விற்பனை செய்வதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தடையால் விவசாயிகள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக மாடுகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகும்'' என்று ஏற்கெனவே நான் எச்சரித்திருந்தேன்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, அந்தியூர் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களில் நடந்த கால்நடைச் சந்தைகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவ்வாறு கொண்டு வரப்பட்ட மாடுகளையும் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. காரணம், மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை எவராலும் பூர்த்தி செய்ய முடியாதுதான்.

இனி வரும் காலங்களிலும் இதேநிலை தான் தொடரப்போகிறது. விவசாயிகள் தங்களின் அவசரத் தேவைக்காக மாடுகளை விற்க முடியாமல் தவிப்பதும், குடும்பத்தைக் காக்கும் குல தெய்வமாக போற்றப்பட்ட மாடுகள் குடும்ப சுமையாக மாறுவதும் தொடர்கதையாகப் போகின்றன.

கால்நடைகள் பராமரிப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பிரிவில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது. இதுபோன்ற சூழலில் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்கள் விரோத முடிவை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சி நடத்தும் மாநிலங்களைத் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் புதிய முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கேரள அரசும், வடகிழக்கு மாநிலங்களின் அரசுகளும் மத்திய அரசின் புதிய ஆணையிலிருந்து விலக்கு பெறுவதற்காக தனிச்சட்டம் இயற்றப் போவதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து விவாதிப்பதற்காக கேரள முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

ஆனால், மத்திய அரசு ஆணை பிறப்பித்து 5 நாட்கள் ஆகியும் இது குறித்து தமிழக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேட்ட போது, 'மாட்டிறைச்சி தடையைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் அரசு ஆணை கிடைக்கப்பெற்று அதை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே முடிவை அறிவிப்போம்' என்று கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் ஆணையை 5 நாட்களாகியும் கூட ஒரு முதல்வரால் படிக்க முடியவில்லையா? தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினையில் முதல்வர் அமைதியாக இருப்பது அழகல்ல. மற்றொரு மூத்த அமைச்சரான தங்கமணி உலகின் தலைசிறந்த தலைவர் மோடி என பாராட்டு மழை பொழிந்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு மறைமுகமான ஆதரவை தெரிவித்துள்ளார். இவை நல்ல அறிகுறியல்ல.

சசிகலா குழுவினரின் பினாமி அரசாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அரசு இப்போது மத்திய ஆட்சியாளர்களின் அடிமை அரசாக மாறி வருவதைத் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் காட்டுகின்றன. மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் தான் தோன்றித்தனமாக செயல்படுவது முறையல்ல.

எனவே, இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை தடை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். இவற்றை செய்யத்தவறும் பட்சத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.