10/05/2018

மரமும் மனிதனும்...



பெருமரம்...

தமிழர்களோடு தொன்மையான தொடர்புடையது ‘பெருமரம்’. அந்தக் காலத்தில் திருவிழா சமயங்களில் ‘வழுக்கு மரம் ஏறுதல்’ மிகச்சிறந்த பொழுதுபோக்கு. இன்றைக்கும் தமிழகத்தின் பல கிராமங்களில் வழுக்கு மரம் ஏறுதல் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் திருவிழாவுக்காக வழுக்கு மரத்தைத் தேர்வு செய்யும் பணியே திருவிழாபோல் நடக்கும். கோயில் பூசாரிக்கு அருள் இறங்கி, அவர் கைக்காட்டும் திசையிலிருந்து மரத்தைக் கொண்டு வருவார்கள். அந்தக் காலத்தில் கிராமங்களைச் சுற்றிப் பெருமரங்கள் பரவலாக இருக்கும். அதனால், எந்தத் திசையில் சென்றாலும் மரம் கிடைத்துவிடும். ஆனாலும், பூசாரி சொல்லிய திசையில் ஊர்க்காரர்கள் திரண்டு போய், வளைவு நெளிவு இல்லாமல் நேராக வளர்ந்த மரத்தைத் தேர்வு செய்வார்கள். பிறகு, அந்த மரத்தை வெட்டி ஊருக்குக் கொண்டு வருவார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த மரத்தைச் சுற்றி அமர்ந்துகொண்டு, பட்டையை உரித்துச் சோற்றுக்கற்றாழை கூழைத் தடவுவார்கள். பிறகு எண்ணெய், கேழ்வரகு கூழ் ஆகியவற்றைத் தடவித் தூக்கி நிறுத்துவார்கள். அதன்பிறகுதான் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடக்கும். தற்போது, இந்தப் பழக்கமும் கிராமங்களில் அரிதாகிக்கொண்டே வருகிறது.

இம்மரத்துக்குப் பீயன், பீதக்கன் எனவும் பெயர்கள் உண்டு. தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் முக்கிய மூலப்பொருள் இந்த மரம். இதன் பட்டைகளிலிருந்து தீக்குச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இம்மரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூர், குடியாத்தம் போன்ற ஊர்களில் உள்ள நூற்றுக்கணக்கான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இந்த மரங்களை நம்பித்தான் இருக்கின்றன. முன்பு, கேரளாவிலிருந்து ரப்பர் மரங்களைக் கொண்டு வந்து தீக்குச்சிகளைத் தயாரித்தார்கள்.

ரப்பர் மரங்களைப் பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல கேரள அரசு தடைவிதித்த பிறகு, தமிழகத்தில் இம்மரத்துக்கான தேவை அதிகமாகிவிட்டது. மரங்களை வெட்டியவுடன் பட்டையில் ஈரப்பதம் காய்வதற்குள் ஆலைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஈரப்பசை இருந்தால்தான் எளிதாகப் பட்டையை உரிக்க முடியும்.

வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களில் முதன்மையானது பெருமரம். இம்மரத்துக்குப் பராமரிப்பும் பெரிதாகத் தேவையில்லை. தொழிற்சாலைகளில் 16 அங்குலம் முதல் 100 அங்குலம் சுற்றளவுள்ள மரங்கள்தான் வாங்கப்படுகின்றன.

இறவைப்பாசனத்தில் வளர்க்கும்போது நான்கு ஆண்டுகளுக்குள் மேற்சொன்ன அளவுக்கு மரம் வளர்ந்துவிடும். அதிகபடியான பராமரிப்பு செய்து வந்தால் மூன்று ஆண்டுகளிலேயே அபாரமாக வளர்ந்துவிடும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த மரம் சிறப்பாக வளரும். செம்மண், சரளை மண், சுண்ணாம்பு மண், கடற்கரையோர மணல் பகுதிகள், ஆற்றங்கரையோரப் பகுதிகள் என அனைத்து வகையான நிலங்களிலும் இதை நடவு செய்யலாம்.

தண்ணீர் இல்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்களில் வடகிழக்குப் பருவ மழைக்கு முந்தைய காலங்களில் நடவு செய்தால், மூன்று மாதங்கள் பெய்யும் மழையில் செடிகள் உயிர்ப்பிடித்துக் கொள்ளும்.

‘தண்ணீரில்லை; பயிர் வைத்தால் பாதுகாக்க முடியாது’ என நினைத்து எதுவும் செய்யாமல் நிலத்தைத் தரிசாகப் போட்டு வைத்திருப்பவர்கள் பெருமரத்தை வளர்க்கலாம். மானாவாரி நிலங்களில், மழைக்கு ஏற்றவாறுதான் வளர்ச்சி இருக்கும். அதனால், இதுபோன்ற நிலங்களில் நான்கு ஆண்டுகளில் அறுவடை சாத்தியமில்லை. ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு மேல்தான் அறுவடைசெய்ய முடியும்.

பெருமரத்தை நாற்று மற்றும் போத்து (குச்சி) மூலமாக நடவு செய்யலாம். நாற்று நடவுதான் சிறந்த முறை. நாற்றுகளை நாமே தயாரித்துக்கொள்ள முடியும். ஏப்ரல் மாதத்தில் மரத்திலிருந்து நெற்றுகள் உதிரும். அதைச் சேகரித்துத் தடி மூலமாக அடித்தால் விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ அளவுக்கு நெற்றுகளைச் சேகரித்தால் எண்ணிக்கையில் பத்தாயிரம் நெற்றுகள் வரை இருக்கும். அவற்றிலிருந்து எண்ணிக்கையில் 15 ஆயிரம் விதைகள் கிடைக்கும். விதைகளை நீண்ட நாள்கள் சேமித்துவைத்தால் முளைப்புத்திறன் குறையும். அதனால், உடனடியாக நாற்றுப் பைகளில் நடவு செய்துவிட வேண்டும்.

மரம் வளர்ந்த பிறகு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இலை முழுவதும் உதிர்ந்துவிடும். இதைப் பார்த்து மரம் பட்டுப் போய்விட்டது எனச் சிலர் நினைப்பார்கள். ஆனால், இது பெருமரத்தின் வழக்கமான நிகழ்வுதான். அடுத்த மழை பெய்யும்போது புது இலைகள் துளிர்த்துவிடும்

பெருமரத்தைச் செடிக்குச் செடி 12 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் 300 செடிகள் வரை நடவு செய்யலாம். நிலத்தின் வரப்போரங்களிலும் வேலிகளிலும் இதைச் சாகுபடி செய்யலாம். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வன விரிவாக்க மையங்களில் செடிகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இதை நன்றாக வளர்ப்பவர்களுக்கு மானியமும் உண்டு.

இந்த மரம் நான்காண்டுகளில் நான்கு மீட்டர் உயரம் வரை வளரும். சுற்றளவு 16 அங்குலத்துக்கு மேல் வந்தவுடன் அறுவடை செய்யலாம். மூன்றாண்டுகள் வரை ஊடுபயிர்ச் சாகுபடி செய்துகொள்ளலாம். ஒரு டன் எடை கொண்ட பெருமரம், தற்போது 5,500 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

- வளரும்

பெருமரத்தின் பயன்கள்..

பெருமரத்தின் இலைகள் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிக்கவும் பட்டுப்புழு வளர்க்கவும் பயன்படுகின்றன. இந்த மரத்தில் பொம்மைகள், படகு சாமான்கள், பீப்பாய்கள், காகிதம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

காவல் நிலையத்தில் பெருமரம்..

சத்தீஸ்கர் மாநிலம், தாம்தரி மாவட்டத்தில் உள்ள சிகாவா என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் இருநூறு ஆண்டுகளைக் கடந்த பெருமரம் மரம் இருக்கிறது. அந்த மரத்தைச் சுற்றி மேடை அமைத்துப் பாதுகாக்கிறார்கள். வயது காரணமாக, இயற்கையிலேயே மரங்களில் பல பொந்துகள் உள்ளன. அவற்றைப் புறாக்கள் தங்கள் வாழ்விடமாக்கிக் கொண்டுள்ளன. மனிதநேயம்மிக்க காவலர்கள் அந்த மரங்களில் ஆங்காங்கே மண்பானைகளைக் கட்டி விட்டிருக்கிறார்கள். அவற்றிலும் புறாக்கள் தங்குகின்றன.

ஆஸ்திரேலிய மரம்...

பெருமரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா. இது, ‘சைமருபேசியே’ (Simaroubaceae) எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ‘ஐலாந்தஸ் எக்ஸெல்ஸா’ (Ailanthus Excelsa) என்பது இதன் தாவரவியல் பெயர். எக்ஸெல்ஸா என்பது மரத்தின் ஓங்கி வளரும் தன்மையைக் குறிப்பதாகும்.

இதில், ஐலாந்தஸ் மலபாரிக்கா என்ற ஒருவகை உண்டு. இது, நேராக வளரும் ரகம். பென்சில் தயாரிப்புக்குப் பயன்படும் இந்த மரம், டாப்சிலிப் பகுதியில் வனத்துறையின் மூலம் சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ளது.

 நன்றி வணக்கம் பெருசங்கர் ஈரோடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.