05/06/2018

கரீபியன் தமிழர்...


கிறித்தவத் தேவாலயம் போன்ற கட்டிடத்தில் ஏசு சிலை இல்லை. ஆனால், வேறு ஏதோ தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அவை மாரியம்மனையும் அய்யனாரையும் ஒத்திருக்கிறது.

அங்கே பூசாரி தன்னை ஒரு இசுலாமியர் என்கிறார் நோய்வாய்ப்பட்டு வந்த மக்களுக்கு வேப்பிலை அடித்து, சாமியாடி, மருந்து தருகிறார்.

யார் இவர்கள்? பார்ப்பதற்கு தமிழர்கள் போலவே இவர்கள் முகம் இருக்கிறது; ஆனால் உடையோ வேறுமாதிரி இருக்கிறது.

இவர்கள் பெயர்களோ தமிழோடு ஒத்துப்போகிறது; ஆனால் பேசும் மொழி வேறு எதுவோ.

இவர்கள் சமைக்கும் உணவுவகைகளின் பெயரும் சுவையும் தமிழ் மண்ணோடு ஒத்துப்போகிறது; இவர்களின் இருப்பிடமோ தமிழ்மண்ணிலிருந்து பாதி உலகம் கடந்து இருக்கிறது.

கிறித்தவப் பெயர்களோ இசுலாமியப் பெயர்களோ வைத்துள்ளனர்; ஆனால் திருமணமுறை தமிழ்முறைப்படி உள்ளது.

நீங்கள் யார் என்று கேட்டால் 'தமிழர்' என்கின்றனர்.

வாழ்வதோ வேற்றின மக்களுக்கு மத்தியில் எங்கோ ஒரு பட்டியூரில் (குக்கிராமம்).

மிகவும் பின்தங்கிய மக்கள், தங்கள் வாழ்க்கையை அடையாளத்தைத் தொலைத்துவிட்ட மக்கள்.

நீங்கள் இந்தியர்கள் என்று அங்கே இயங்கும் இந்திய அரசு அமைப்புகள் இந்தியைக் கற்றுக்கொடுத்து இந்து சமயத்தை அந்த மக்களிடம் பரப்புகின்றன.

விடுமுறை நாட்களில் ஆடு, கோழி பலியிட்டு, கும்மிப்பாட்டு பாடி, விருந்துண்ணும் போது அவர்கள் தாங்கள் தமிழகத்தில் வாழ்ந்த கண்ட அனுபவித்த விடயங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

எந்த திசையில் இருக்கிறதென்றே தெரியாது ஆனாலும் அவர்கள் தமிழகத்தின் நினைவாகவே இருக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.