21/08/2018

பாஜக - அதிமுக இனைந்து தமிழக விவசாய நிலங்களை அழிக்கின்றனர்...


காவிரி நதியில் நொடிக்கு 2,30,000 கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டும் காவிரிப் படுகையின் கடைமடை பகுதிகளுக்கு இதுவரை நீர் வந்து சேரவில்லை என்கிற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது...

இது எப்படி சாத்தியம்? ஒரு நேரத்தில் 12,000 முதல் 15,000 கன அடி அளவிற்கு மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் முறை வைத்து 3,000 முதல் 4,000 கன அடி வரை நீர் திறந்துவிடப்பட்ட போதெல்லாம் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு பாய்ந்து அதன் மூலம் பாசன வசதிப் பெற்று வேளாண்மை செய்த நிலை இன்று எப்படி மாறியது?

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நொடிக்கு ஒரு இலட்சம் கன அடிக்கும் அதிகமாக மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பெருமளவிற்கு கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு கடலிற்கு சென்று சேர்கிற அவலத்தை கண்டு கொண்டிருக்கின்றோம். ஒரு கட்டத்தில் நீர் வரத்து 2 இலட்சம் கன அடியை எட்டிவிட்ட நிலையில் கல்லணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீர் 66,000 கன அடியாகவும், பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்லும் கல்லணைக் கால்வாயிலும், திருச்சி மாநகருக்குள் பாய்ந்து அங்கிருந்து வாழவந்தான் கோட்டை ஏரி வழியாக தஞ்சாவூரின் சேராண்டி ஏரிவரை பயணிக்கும் உய்யக்கொண்டான் கால்வாயிலும் திறந்துவிடப்படும் நீரின் அளவு 10,000 கன அடிக்கும் குறைவாகவும், ஒரு இலட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் – இப்போது ஒன்றரை இலட்சமாக உயர்த்தப்பட்டு கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டு கடலில் சென்று சேர்ந்துக் கொண்டிருக்கிறது.

காவிரி நீரின் ஒரு பகுதி கடலில் சென்று கலப்பதை எதிர்ப்பவர் அல்ல நாம், அது இயற்கையின் நீரியல் சுழற்சிக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை நிலைப்படுத்தலுக்கும் அவசியமானது, எனவே அவ்வாறு கலப்பது ஏற்றது என்பதை உணர்ந்தவர்கள். ஆனால் நொடிக்கு ஒன்றரை இலட்சம் கன அடி நீர் எதற்காக கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட வேண்டும் என்பதே கேள்வி. ஏன் குறைந்த அளவிற்கு காவிரி, வெண்ணாறு, கல்லணை, உய்யக்கொண்டான் கால்வாய்களில் திறந்துவிடப்படுகிறது?

அவ்வாறு திறந்துவிடப்படும் நீரும் கடைமடைக்கு வராததைக் கண்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவா சத்திரம் உள்ளிட்ட கல்லணைக் கால்வாயோடு பிணைக்கப்பட்ட பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், நாகை மாவட்ட மக்களும் ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றியெல்லாம் பத்திரிகைகளிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ செய்தியோ அல்லது விவாதங்களோ நடைபெறவில்லை

கேரள வெள்ளத்தைப் பற்றி நாள் முழுவதும் செய்திகளைக் கொடுத்து விவாதங்கள் நடத்தும் தொலைக்காட்சிகள், இரண்டரை இலட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டும் அது கடைமடைப் பகுதிகளுக்கு சென்று சேராத்த்து ஏன் என்பது பற்றிய விவாதிருக்க வேண்டும் அல்லவா?
மக்களின் போராட்டங்கள் பற்றி தமிழக அரசும் வாய் திறக்க மறுக்கிறது. ஒவ்வொரு ஆண்டின் நிதி நிலை அறிக்கையிலும் ஏரிகள், குளங்கள், பாசனக் கால்வாய்கள் தூரெடுப்பதற்கு என்று பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதே, அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்துள்ளதாகவும் கணக்கு காட்டப்படுகிறதே, அப்படியானால் இந்த அளவிற்கு நீர் திறந்துவிடப்பட்டும் பல பகுதிகளுக்கு நீர் சென்று சேராத காரணம் என்ன?

தூர் வாரப்படவில்லை என்றாலும் நீர் சூழ்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே? அதுவும் ஏற்படவில்லையே! நீர் சுத்தமாக வரவில்லை என்றால் திறந்துவிடப்பட்ட நீர் எங்கு சென்றது? மதகுகள் சீர் செய்யப்படாமல் ஆங்காங்கு திறந்துவிடப்பட்டு வந்த நீர் தேங்கி நிற்பதாகவும் கூறப்படுகிறதே, அப்படியானால் மதகுகளைக் கூட சீர் செய்யாமல் இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எதற்காக செலவு செய்யப்பட்டது? கணக்கை காட்டுமா தமிழக அரசு?

இந்நாட்டின் உணவுத் தேவையை அளவிடற்கரிய அளவிற்கு ஈடேற்றிடும் காவிரிப் படுகையில் விவசாயத்தை வேறருக்கும் உள்நோக்கம் ஏதும் உள்ளதோ?  ஏனென்றால் காவிரிப் படுகையின் பாசனத் தேவையை முழுமையாக நிறைவேற்றக்கூடிய அளவிற்கு கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட பாசனக் கட்டமைப்பை சீர்குலைக்கும் சதியாகவே தூர் வாரப்படாமையும், மதகுகள் சீர் செய்யப்படாமையும், அதிகமான அளவிற்கு நீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டு கடலில் கலக்க வழி செய்யப்பட்டிருப்பதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எமது மக்களின் இந்த ஐயப்பாட்டை போக்க வேண்டிய கடமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உள்ளது. ஏனெனில் இந்திய ஒன்றிய அரசு தனது ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டத்திற்கு காவிரிப் படுகையையும், தமிழ்நாட்டின் கடற்பகுதியையும் குறிவைத்துள்ளது என்பதை காவிரிப் படுகை மக்கள் அறிவார்கள். காவிரிப் படுகையில் – குறிப்பாக நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஏற்கனவே ஏலம் விடப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் பெரும் திட்டங்களை வேதாந்த நிறுவனமும், ஒ.என்.ஜி.சி.யும் பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுப்பை தடையின்றி எடுக்க வேண்டுமெனில் அங்கு விவசாயம் நடந்தால் முடியுமா? எனவே வேளாண்மையை அழித்து தனது ‘வளர்ச்சி’த் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய ஒன்றிய அரசு திட்டமிடுகிறது என்பதும் எமது மக்களுக்குத் தெரியும்.

எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உக்கடம் கமலாபுரம் பகுதிக்கு வரும் பாசனக் கால்வாய்களில் நீர் வரவில்லை, இங்குதான் பல கச்சா எண்ணெய் எடுப்புக் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. இயக்கி வருகிறது. ஏற்கனவே எண்ணெய் எடுப்பால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவிற்கு கசடாகி குடிக்கவோ பாய்ச்சவோ பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இப்போது சுத்தமாக நீரை வரவிடாமல் செய்வதன் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ‘மன நிலை’யை உருவாக்கி வருகிறார்கள் – இதற்கு மாவட்ட நிர்வாகங்களும் முழுமையான ஒத்துழைப்பை (!) தருகின்றன. இந்திய ஒன்றிய அரசின் இந்த மறைமுக விவசாய அழிப்புத் திட்டத்திற்கு தமிழக அரசின் மறைமுக ஆதரவு இருக்கிறதா என்பதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நாம் எழுப்பும் கேள்வியாகும். இந்த அரசு அம்மாவின் பாதையில் நடைபோடுகிறது என்கிறாரே, அம்மா ஜெயலலிதா இருந்தால் இது நடக்குமா? 

இன்றைக்கு காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தை எத்தனையோ நீர் மேலாண்மைத் திட்டங்களை திட்டமிட்டப்படி நிறைவேற்றியிருந்தால் காவிரி வெள்ளப் பெருக்கு தமிழ்நாட்டிற்கு கொடையாக அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் – இது வெறும் ௹.250 கோடி செலவிலான திட்டம் -  இன்றைக்கு பெரும் பகுதி வெள்ள நீர் அந்த இணைப்புக் கால்வாயில் திறந்துவிட்டிருக்கலாம். அதன் மூலம் புதுக்கோட்டையின் பகுதிகள் பலவும் நீர் வளம் பெற்று விவசாயம் செழித்திருக்கும். ஆனால் திட்டங்கள் தீட்டுவதோடு எல்லாம் நின்றுவிட்டக் காரணம் இப்போதல்லவா புரிகிறது.

இதேபோல் நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் 47 இடங்களில் கச்சா எண்ணெய் எடுப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ளதால் இப்பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள தூர் வாரப்படவில்லை என்றும், கால்வாயின் மதகுகள் சீர் செய்யப்படாமல் துருப்பிடித்துக் கிடப்பதாகவும் நண்பர் ஒருவரின் பதிவின் மூலம் தெரியவருகிறது!
இப்படியெல்லாம் வேறு எந்த ஒரு நாட்டிலாவது நடக்குமா? தன் நாட்டு மக்களின் இயற்கை சார்ந்த வாழ்வாதாரமான விவசாயத்தை அழித்துவிட்டு அங்கு எண்ணெய் எடுப்பது, கனிம வளங்களை எடுப்பதற்காக விவசாய விளை நிலங்களை சிதைப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறோமா? விவசாய பணியாளர் ஒருவருக்கு புற்று நோய் ஏற்படுகிறது. அதற்குக் காரணம் மான்சாண்டோ நிறுவனம் விற்ற ரவுண்ட் அப் எனும் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கப்பட்டதுதான் என்றும் அதில் கலந்திருந்த கிளைக்கோபோஸ்ட் எனும் ரசாயணமே புற்று நோயை உருவாக்கவல்லது (carciogenic) என்று வழக்கு தொடரப்பட்டு, ஆய்வில் அது உறுதி செய்யப்பட்டு, அந்த விவசாயத் தொழிலாளருக்கு மான்சாண்டோ நிறுவனம் பல மில்லியன் டாலர் இழப்பீடு தர வேண்டும் என்று தீர்ப்பாகியுள்ளது. இங்கேயும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இதே கிளைக்கோபோஸ்ட் பயன்பாட்டால் பல விவசாயிகள் புற்று நோய்க்கு ஆட்பட்டுள்ளனர், ஆனால் அரசுகள் கண்டுகொள்ளவில்லை! உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடல்லவா இந்தியா? எனவே எத்தனை விவசாயிகள் செத்தாலும் மான்சாண்டோ நிறுவனத்தின் பிசினஸ் இலாபகரமாக தடையின்றி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இதற்கு எதற்கு ஜனநாயகத்தை இழுக்கிறாய் என்று கேட்கிறீர்களா? ஆம், இங்கு அதைப் பற்றிய புரிதல் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. தங்களுடைய பலம் வாக்குரிமையில் தான் இருக்கிறது என்பதை உணராத நம் நாட்டு மக்களே ஜனநாயகத்தை வைத்து பிழைப்பு நடத்துவோருக்கு அரசியல் மூலதனமாக இருக்கின்றனர். இங்கே மணலை கொள்ளையடித்து விற்பவனுக்கு அரசியல் பின்புலம் இருக்கிறது, வாழ்வாங்கு வாழ்கிறான், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி ஆற்றைக் காக்க போராடிய முகிலன் சிறையில் வாடுகிறான்..

இதற்குக் காரணம் என்ன? அரசியல்வாதிகளா?

இல்லை, மக்களிடையே ஜனநாயகத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாததே காரணம். இந்நிலை நீடிக்கும்வரை நம்மை பீடித்துள்ள அவலமும் நீடிக்கும், அதைச் சார்ந்த சுரண்டலும் நீடிக்கும். எச்சரிக்கை.

கா. ஐயநாதன், சென்னை, ஆகஸ்ட் 19, 2018...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.