27/09/2018

ஆதாம், ஏவாள் மற்றும் நோவா ஆகியோரும் தமிழரே...


உலகில் முதல் மொழி தமிழ் என்று ஏற்காவிட்டாலும்..
உலகின் முதல் மாந்தன் தமிழன் என்று ஏற்காவிட்டாலும்..

60,000 ஆண்டுகளுக்கு முன் உலகம் அழிவைச் சந்தித்தபோது தப்பிப் பிழைத்த ஒரு மாந்தர் குடும்பம் மீண்டும் இனப்பெருக்கம் செய்து உலகம் முழுவதும் பரவியது என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர். ஸ்பென்ஸர் வெல்ஸ் கூறியுள்ளார்.

அந்த குடும்பமும் ஒரு தமிழ்க் குடும்பம் தான். இதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

ஆம். மேலும் இதுபற்றி அறிவோம்.

மனித வரலாறு காலம் பின் செல்லச் செல்ல மங்கி தெளிவில்லாமல் ஆகிவிடுகிறது.

ஆனால் எழுதும் வழக்கம் வரும் முன்னே நடந்த நிகழ்வுகளின் எச்சங்கள் செவிவழிப் பழங்கதைகளாக, புராணங்களாக, இதிகாசங்களாக, தொன்மங்களாக, நாடகமாக, இலக்கியமாக இன்றும் பல்வேறு மாய மந்திரங்களுடன் விரவப்பட்டு இன்றும் உள்ளன.

உலகில் தொன்மையான இனங்களின் புராணங்களில் ஒரு நிகழ்வு மட்டும் தவறாமல் இடம்பெருகிறது.

அது உலகம் நீரில் மூழ்குவதும் அதிலிருந்து குறிப்பிட்ட மக்கள் பிழைப்பதும் ஆகும்.

இது பைபிளில் நோவா கதையாக உள்ளது.

குரானில் நூ கதையாக உள்ளது.

தமிழ் இலக்கியத்தில் குமரிக்கண்டம் மூழ்கியபோது மக்களை காப்பாற்றிய நெடியோன் கதையாக உள்ளது.

இது தவிர பைபிள் கூறும் முதல் மனிதன் ஆதாம். இவன் தமிழனே.

தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…- ஆதியாகமம் (2-8)
கிறித்தவ மதம் தோன்றியது மத்திய ஆசியா.

அதற்கு கிழக்கே பழமையான குடியாக தமிழர்கள்தான் இருக்கிறோம்.

ஆதாம் என்ற பெயர் ஆதிமனிதன் என்று பொருள்படும் வகையில் உள்ளது.

ஆதி என்றால் தொடக்கம்.

ஆதாம் வாழ்ந்த இடம் இலங்கைத் தீவில் இன்றும் உள்ளது.

அதனை 'ஆதாம் சிகரம்' (Adams peak) என்று அழைக்கின்றனர்.

தமிழர்கள் இதனை 'சிவனொளிபாத மலை' என்று அழைக்கின்றனர்.

மலையின் உச்சியில் மனிதப் பாத வடிவில் ஒரு பள்ளம் காணப்படுகிறது.

மார்க்கபோலோ (சுமார் கி.பி. 1293) 'ஆதம் மலையில் நமது முதல் தந்தையான ஆதத்தின் கல்லறை இருக்கிறது' என்று குறிப்பிடுகிறார்.
(இந்த மலையின் அடிப் பகுதியில் உள்ள ஒரு குகையின் வாசலில் ‘மனித குலத்தின் தந்தை’என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் இருக்கிறதாம்.

இது உறுதியாகத் தெரியவில்லை.
இதை பிற்காலத்தில் யாராவது வைத்திருக்கலாம்).

‘ஆதன்’என்பது தமிழில் வழங்கிய மிகப் பழைய பெயர்களுள் ஒன்று.

ஆதன் அவினி, ஆதன் அழிசி, ஆதனுங்கன், ஆதன் எழினி என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

தந்தையைக் குறிக்கும் ‘அத்தன்’, ‘அத்தா’என்ற சொற்கள் 'ஆதன்’என்ற சொல்லில் இருந்து தோன்றியவையே.
கந்த புராணத்தில் "ஈன்ற ஔவையும் அத்தனும்" என்று வருகிறது.

"ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான். ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 )

ஏவாள் என்றால் தாய் என்று பொருளாம்.

ஈவே (Eve) என்பது பைபிளை மொழி பெயர்க்கும் போது ஏவாள் என்று ஆக்கப்பட்டது.

பைபிள் எபிரேய மொழியில் (ஹீப்ரு) இருந்து தான் மற்ற மொழிகளுக்கு சென்றது.

ஈவே என்பதும் மொழிபெயர்ப்பு திரிபு.

முதல் பைபிள் ஏவாளை ஆயா என்று கூறிப்பிடுகிறது.
ஆயா, ஆய் என்பன தாயையோ அல்லது தாயின் தாயையோ குறிக்கும் தமிழ்ச்சொல்.

குரான் ஹவ்வா என்று குறிப்பிடுகிறது.

இது ஔவை என்பதன் திரிபு.

மூழ்கிய குமரிக்கண்டத்தின் எஞ்சிய ஒரு பகுதி குமரி மாவட்டம்.

இம்மாவட்டத்தில் ஔவைச் கோயில்கள் இருக்கின்றன.

தோவாளை வட பகுதியில் அழகிய பாண்டிபுரத்தை அடுத்துள்ள குறத்தியறையில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
குறத்தியறையில் இருந்து தெற்கே தாழக்குடியில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
முப்பந்தலில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும் அமைந்திருக்கின்றன.
குமரி மாவட்டத்து தமிழ் இசுலாமியர்கள் ‘ஆதம் பாவா’ என்ற பெயரை சூடிக்கொள்கின்றனர்.

(‘பாவா’என்றால் தந்தை என்று பொருள்).

ஆதமின் புதல்வர்கள் ஆபில் மற்றும் காபில் இவர்களின் கல்லறைகள் தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் உள்ளன.

அதுதான் ஆபில்காபில் தர்கா.
 
இதுபற்றி இதுவரை யாரும் ஆய்வு செய்யவேயில்லை என்பது பெரிய வேதனை.

ஆபில் காபில் தர்காவில் அடக்கமாகி உள்ள உடலை தோண்டி ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.

ஆதாம் மற்றும் அவரது குடும்பம் வாழ்ந்த சுவடுகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை அறிக.

பிரளயத்தில் தப்பித்த நோவாவும் அவருடைய குடும்பமும் தமிழினத்தைச் சார்ந்தவர்களே என்பதைக் காட்டும் அரிய சான்று ஐயனாரிதனார் இயற்றிய 'புறப்பொருள் வெண்பா மாலை’ நூலில் காணப்படுகிறது.

' பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலகக் கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி.’

‘பூமியைப் போர்த்தியிருந்த வெள்ளம் வடிந்த போது,
கல் அதாவது மலை நீரிலிருந்து வெளிப்பட்டு, மண் அதாவது தரை வெளிப்படாதிருந்த காலத்தில் கையில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்பது இதன் பொருள்.

நோவா கதையில் அவர்தான் உலகிலேயே கப்பல் கட்டிய முதல் மனிதர்.

அதேபோல உலகிலேயே முதன்முதலாகக் கப்பல் கட்டிய இனம் தமிழினம்.

நோவா என்ற பெயர் நாவாய் என்ற தமிழ்ப் பெயருடன் ஒத்துப்போகிறது.

நாவாய் என்றால் நா+வாய்.
அதாவது நாக்கின் முன்புறம்.
கப்பலின் அமைப்பை இது கூறுகிறது.

இதுதான் ஆங்கிலத்தில் Navy ஆனது.

ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் கப்பலைக் குறிக்க இச்சொல் சிறுசிறு மாற்றத்துடன் வழங்கப்படுகிறது.

உலகின் பழைய துறைமுகங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயரையே கொண்டுள்ளன.

உலகின் அனைத்து மொழிகளிலும் கப்பல் தொடர்பான சொற்கள் தமிழ் வடிவத்திலேயே உள்ளன.

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.”
-ஆதியாகமம் 1.

நோவா கோபர் மரத்தில் கப்பல் செய்ததாக கூறப்பட்டுள்ளது. கோபர் என்ற சொல் மத்திய ஆசிய மொழிகளில் குறிப்பிட்ட பொருளைத் தரவில்லை.

தமிழில் காப்பெரு மரமாக இருக்கலாம்.

காப்பெரு என்றால் பெரிய காட்டுமரம் என்ற பொருள்.

நோவாவின் புதல்வர்கள் ‘ஷெம்’, ‘ஹாம்’
நோவா ‘வெள்ளம் வற்றிக் கரையேறும் வரை சுத்தபத்தமாக இருக்க வேண்டும்’ என்று ஆணையிட்டாராம்.

ஆனால் ஹாம் அவர் கட்டளையை மீறித் தன் மனைவியோடு உடலுறவு கொண்டான்.

அதனால் கோபம் கொண்ட நோவா,
காமனும் அவன் சந்ததியினரும் கருநிறம் பெறுவார்கள் என்றும், அவர்கள் வெண்ணிறம் உடைய ஷெம் சந்ததியினருக்கு அடிமைகளாக இருப்பர் என்றும் சபித்தார்.

இதில் நோவாவின் ஒரு மகன் கறுப்பாகவும் மற்றொருவர் வெண்மையாகவும் இருந்ததாக அறிகிறோம்.

திருத்தக்க தேவர் தனது சீவக சிந்தாமணியில் வெள்ளை நிறமும், கருப்பு நிறமும் உடைய இரு காளைகளை ஏரில் பூட்டும் காட்சியை வர்ணிக்கும் போது அவை ‘காமனும் சாமனும்’ (ஹாம், ஷெம்) போல இருந்ததாகக் கூறுகிறார்.

மனு எனும் அரசன் ஒரு பேசும் மீனை கண்டறிந்து வளர்ந்தானாம். அது பெரிதாக வளர்ந்துகொண்டே போனதால் கடலில் கொண்டு விட்டானாம்.

பிரளயம் வந்ததும் மனுவின் கப்பலை இழுத்துக் கொண்டு போய் வடமலையில் சேர்த்தது என்று சதபதப் பிரமாணம்
கூறுகிறது.

மகாபாரதத்தில் வைவசுத மனு வைசால வனத்தில் தவம் செய்யும்போது அருகில் இருந்த ஆற்றில் வந்த மீன் பிரளயம் பற்றி எச்சரித்துத் தோணி செய்யச் சொன்னது.

பிரளயம் வந்தபோது வைவசுத மனு ஏழு முனிவர்களோடும், பலவகை விதைகளோடும் தோணியில் ஏறியதாகவும், தோணியை மீன் இமயமலையில் சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி என்னும் ஊர் ‘தோணிபுரம்’ எனப்படுகிறது.

அவ்வூர்க் கோயிலில் உள்ள சிவபெருமான் ‘தோணியப்பர்’ எனப்படுகிறார்.

சிவபெருமான் பிரளயத்தின்போது ‘ஓம்’ என்னும் பிரணவத்தைத் தோணியாக்கிப் பயணம் செய்தார் என்று அருணாசலக் கவிராயர் ‘சீர்காழித் தலபுராண’த்தில் (2.15.4) கூறுகிறார்.

தமிழ் இலக்கியங்கள் நெடியோன் என்ற பாண்டிய மன்னன் குமரிக்கண்டம் மூழ்கியதும் கப்பலில் தப்பித்து வடக்கே பண்டைய தமிழகத்திற்கு வந்து தமிழ்மன்னர்களுடன் போரிட்டு தன் ஆட்சியைப் பரப்பி, மக்களைக் குடிவைத்து, பிறகு கப்பலில் சென்று தற்போதைய இந்தோனேசியாவின் சாலியூரைத் தாக்கி கைப்பற்றி விதைநெல் கொண்டுவந்தது வேளாண்மையை பெருக்கினான் என்று கூறுகின்றன.

மச்சபுராணத்திலும், பாகவத புராணத்திலும் இதே போன்ற மீன் கதை உள்ளது.

குரானிலும் நூ கதை நோவா கதையையே ஒத்துள்ளது.

(மலைமேல் நோவா விட்டுச் சென்ற கப்பல் துருக்கியில் அராரத் மலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினர். ஆனால் அது கப்பல் இல்லை எரிமலைப் படிவம் என்று பிறகு தெரியவந்தது)

உலகத்தின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் பிரளயத் தொன்மம் காணப்படுகிறது.

‘கில்கமெஷ்’ என்ற புராதனப் பாபிலோனியக் காவியத்தில் ‘உட்னா பிஷ்டிம்’ என்பவர் தெய்விக வழிகாட்டுதலின்படி கப்பல் கட்டிப் பிரளயம் வந்த போது அதில் ஏறித் தப்பித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

மற்றொரு பாபி லோனியக் கதையில் பிரளயத்தில் கப்பல் ஏறித் தப்பித்தவர் ஸிஸோத் ராஸ் (xisouthros) என்று இருக்கிறது.

சுமேரியக் கதை யில் தப்பித்தவர் பெயர் ஸியூ சுத்ரா (Zi-u-Sud-ra) என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இது மேற் கண்ட பெயரோடு பெரும்பாலும் ஒன்றுபடுகிறது.

ஹுர்ரியக் கதையில் தப்பித் தவர் பெயர் ‘நாஹ்- மொலெல்’ என்றிருக்கிறது.

கண்டம் மூழ்கிய கதைகளும் உலக தொன்மங்களில் காணக்கிடைக்கின்றன.

கிரேக்கரான ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

நோவா கப்பலில் இருந்து இறங்கிய மக்கள் செங்கலை அறுத்து கட்டிடம் செய்ததாகக் கூறுகிறது பைபிள்.

உலகில் முதன்முதலாகச் செங்கல் கட்டிடம் காணப்படுவதும் தமிழர் நாகரீக தளமான சிந்து சமவெளியில் தான்.

ஆக உலகில் மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக்கண்டம். அதிலேயே மாந்த இனம் வாழ்ந்து வந்தது. அங்கே பேசப்பட்ட மொழி தமிழ்.

அக்கண்டம் மூழ்கிய பிறகு சொற்ப எண்ணிக்கையில் தப்பித்த மக்கள் உலகம் முழுவதும் பரவி குடியேறி உள்ளனர்.

வரலாறு அறிந்த முதல் மனிதன் ஆதன். அவன் பேசியமொழி தமிழ்.

மூழ்கிய கண்டம் குமரிக்கண்டம்.
அதிலிருந்து மக்களைக் காப்பாற்றியவன் நெடியோன்.

நன்றி:

1) முத்துக்குளிக்க வாரீகளா? (தொடர்) _கவிக்கோ அப்துர் ரகுமான் ..
2) ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி! (தொடர்) _யாழறிவன்..
3) மற்றும் பல்வேறு வலைத்தளங்கள்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.