01/11/2018

இங்கிலாந்தில் நிலநடுக்கம்: தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிடுக - பாமக அன்புமணி எம்.பி...


இங்கிலாந்து நாட்டின் லங்காஷையர் மாவட்டத்திலுள்ள லிட்டில் பிளம்ப்டன் நகரில் பாறை எரிவாயு  (Shale Gas) எடுப்பதற்காக பூமியைத் துளையிட்ட போது அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டாவில் அடுத்தடுத்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இச்செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இங்கிலாந்தின் லிட்டில் பிளம்ப்டன் பகுதியில் பாறை எரிவாயுத் திட்டங்களை செயல்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தியதுடன், நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடர்ந்தனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி முதல் பிளம்ப்டன் பகுதியில் பாறை எரிவாயு எடுப்பதற்காக பூமியை துளையிடும் பணிகள் தொடங்கின. அதன்பின் கடந்த ஐந்து நாட்களில் அப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் கடந்த 26-ஆம் தேதி வெள்ளிக் கிழமையும், அதன்பின்னர் 27-ஆம் தேதி சனிக்கிழமையும் தலா 0.80 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 29-ஆம் தேதி திங்கட்கிழமை 1.10 டிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து அங்கு துளையிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

1.10 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்பது உண்மை தான். ஆனால், அதிக இடங்களில் துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் போது நிலநடுக்கத்தின்  வீரியம் அதிகரிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இங்கிலாந்தில் இந்த அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் 2016&ஆம் ஆண்டில் கனடாவில் இதைவிட  அதிக சக்தி கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு பாறை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தால் ஏற்படும் ஆபத்தைக் கருதி தான் கடந்த அக்டோபர் 13&ஆம் தேதி உலகம் முழுவதும் பூமியை துளையிட்டு எரிவாயு எடுக்கும் முயற்சியை கண்டித்து  சுற்றுச்சூழல் மற்றும் பசுமை அமைப்புகளின் சார்பில் அறப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனால், இதையெல்லாம் உணராமல் காவிரி பாசன மாவட்டங்களில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தைக் கொண்டு நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 85 கிராமங்களிலும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்துக்கு கடலில் 170 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உயர்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளிலேயே இத்தகைய பாதிப்புகள் ஏற்படும் நிலையில், பழங்காலத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை நினைத்தாலே மிகவும் அச்சமாக உள்ளது.

இந்தியாவைத் தவிர்த்த பிறநாடுகளில் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் குறைவாகும். இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதிகளில் ஒரு குடியிருப்புக்கும், இன்னொரு குடியிருப்புக்கும் இடையிலான தொலைவு மிகவும் அதிகம் ஆகும். அதனால் அங்கு நில நடுக்கம் ஏற்பட்டால் கூட பாதிப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால், மக்கள் தொகை அடர்த்தி அதிகமுள்ள காவிரி பாசன மாவட்டங்களில் இத்தகைய பாதிப்புகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். காவிரி பாசன மாவட்டங்கள் பாலவனமாகிவிடும் ஆபத்தும் உள்ளன.

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொண்டேன். நான் சந்தித்த லட்சக்கணக்கான மக்களில் ஒருவர் கூட அத்திட்டத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, அனைத்து மக்களுமே ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்; காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.

பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்தும், காவிரி டெல்டா மக்களின் உணர்வுகளை மதித்தும் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள  அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

https://www.bbc.com/news/uk-england-lancashire-46017252

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.