21/01/2019

மதுரையில் கைதான போலி ஐ.ஏ.எஸ்., வாழ்த்துக்காக சென்று வசமாக சிக்கினார்...


மதுரை, மதுரையில் கைதான போலி ஐ.ஏ.எஸ்., யுவராஜ் 22, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் வாழ்த்து பெறச்சென்றதால் சிக்கிக் கொண்டது தெரிந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் யுவராஜ் சிவில் சர்வீஸ் ஆரம்ப நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்தகட்ட தேர்வில் தோல்வியுற்றார். ஆனால் ஆடு மேய்க்கும் தனது பெற்றோரிடம் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சில 'டிவி'க்கள், 'ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ்., ஆனார்' என யுவராஜை பிரபலப்படுத்தின. இதை சாதகமாக்கி கொண்ட அவர், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவரை சில கல்லுாரிகள் பேச அழைத்தன.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது குறித்து மாணவர்களிடையே யுவராஜ் பேசினார். இதற்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரை அவரது வங்கி கணக்கில் கல்லுாரிகள் செலுத்தின.

திருவண்ணாமலை ஓட்டல் உரிமையாளர் பாலகிருஷ்ணனுடன், யுவராஜுக்கு அறிமுகம் கிடைத்தது. தைப்பொங்கலை முன்னிட்டு சொந்த ஊரான மதுரை திருமங்கலம் கட்ராம்பட்டிக்கு யுவராஜை, பாலகிருஷ்ணன் அழைத்து வந்தார். உறவினர் சேதுராமன் மூலம் விருதுநகர் கல்லுாரிகளில் யுவராஜை பேச வைக்க ஏற்பாடு செய்தார்.

அதற்கு முன் நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரியான மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஜன.,16 காலை கமிஷனரை யுவராஜ் சந்தித்தார்.

அப்போது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) தொடர்பாக சில விபரத்தை கமிஷனர் கேட்ட போது யுவராஜ் கூறிய பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின.

யு.பி.எஸ்.சி., இணையதளத்தை கமிஷனர் ஆய்வு செய்ததில், யுவராஜ் மோசடி நபர் எனத்தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

நமது நிருபரிடம் கமிஷனர் கூறியதாவது:

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறுவது என்பது குறித்த புத்தகங்களை யுவராஜ் படித்துள்ளார். அவரிடம் தேர்வில் கேட்கப்படும் பாடம், அதற்கான துணைப் பாடங்கள், மதிப்பெண் உள்ளிட்டவை குறித்து அவர் அளித்த பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின. இணையதளத்தை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட ஆண்டில் அவர் பெயரே இல்லை. இதை உறுதிசெய்ய மீண்டும் அவரை அழைத்துவர கூறினேன். அவரிடம் விசாரித்த போது பலரையும் ஏமாற்றி மோசடி செய்தது உறுதியானது, என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.