02/02/2019

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு திமுக மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு: விசாரணை பிப்.19-க்கு தள்ளிவைப்பு...


சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்த வழக்குக்கு அடிப்படை ஆதாரமில்லை என அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து மாறன் சகோதரர்கள் பதிலளித்தனர்.

7 பேர் மீது குற்றச்சாட்டு...

மத்திய அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து சன் தொலைக்காட்சிக்காக சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன்மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் என 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், சென்னை சிபிஐசிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு நடந்தது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் முன்னாள் பொதுமேலாளர் கே.பி.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொதுமேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளராக இருந்த வேதகிரி கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சி எலெக்ட்ரீசியன் ரவி உள்ளிட்ட 7 பேர் நீதிபதி ஆர்.வசந்தி முன்பாக நேற்று காலை ஆஜராகினர்.

மதியம் 12 மணி அளவில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,குற்றச்சாட்டுகளை தனித்தனியாக வாசித்துக்காட்டி அவற்றை பதிவுசெய்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை மாறன் சகோதரர்கள் மறுத்தனர்.

தயாநிதி மாறன் பதில்...

அப்போது தயாநிதி மாறன், ‘‘மத்திய அமைச்சர் என்ற பதவியை எந்த தருணத்திலும் தவறாக பயன்படுத்தவோ, அதிகாரதுஷ்பிரயோகமோ செய்யவில்லை. என் மீதுள்ள குற்றப்பத்திரிகையில் எந்த இடத்திலும் என் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ அறுதியிட்டுக் கூறவில்லை.

யூகத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை’’ என பதிலளித்தார்.

அதேபோல கலாநிதிமாறன் பதிலளிக்கும்போது, ‘‘எனக்கு எதிராக சிபிஐ பக்கம் பக்கமாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டு ஆவணங்களில் எந்த இடத்திலும் என் பெயர் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் சன் தொலைக்காட்சியை குறிவைத்து இந்தவழக்கில் என்னையும் எதிர்தரப்பாக சேர்த்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்’’ என தெரிவித்தார்.

மீண்டும் பிற்பகலுக்கு இந்தவழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, மாலை 3 மணி அளவில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட7 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, வழக்கு விசாரணையை பிப்.19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் சாட்சி விசாரணை தொடங்கும் என நீதிபதி அறிவித்தார். மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் காலை முதல் மாலை வரை நீதிமன்றத்தில் காத்திருந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.