21/04/2019

வ.உ.சி எனும் சிதம்பரம்பிள்ளை...


வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை...

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.


வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். பாரதியார் ஒரு பெரும் புலவர். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார். வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களானர்கள்.

வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும்.

இப்படி பட்ட மா மனிதர், செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சி-கப்பல் ஒட்டிய தமிழர் அவர்களை ஒரு பொழுதும் மறந்துவிடக் கூடாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.