18/07/2020

ஆம்பூரில் முழு ஊரடங்கின்போது வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவம்...


சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர் சந்திரசேகர் தற்காலிக பணியிடை நீக்கம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு..

ஆம்பூர் அடுத்த புதுமனை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான முகிலன். இவரது மனைவி 25 வயதான நிலா. இந்த தம்பதிக்கு 4 வயதில் பிரசன்னா, 3 வயதில் ஜனனி மற்றும் 6 மாத கைக்குழந்தை பிரியதர்ஷினி உள்ளனர். முகிலன் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே புறவழிச்சாலை வழியாக சென்றுள்ளார்.

அங்கு வாகனை சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் முகிலனை வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். குழந்தைக்கு மருந்து வாங்க மருந்தகத்திற்கு செல்வதாக அவர் கூறியுள்ளார்.

அருகில் உள்ள மருந்தகத்திற்கு நடந்து சென்று மருந்து வாங்கலாம், வாகனத்தில் செல்ல அனுமதியில்லை என்று கூறி வாகனத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

அருகில் உள்ள மருந்தகத்தில் மருந்து இல்லாததால் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மருந்தகத்திற்கு செல்தற்காக வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடுவதாகவும், வாகனத்தை திருப்பி தருமாறும் போலீசாரிடம் முகிலன் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர் சந்திரசேகர், திருப்பித் தர மறுத்துள்ளார்.

மேலும் அந்த இருசக்கர வாகனத்தை ஊர்காவல் படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் எடுத்துக்கொண்டு ஆம்பூர் தனியார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

பின்னர் இருசக்கர வாகனத்தை கேட்டு தனியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்த காவலர்கள் லட்சுமணன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் இடம் முகிலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் வாகனங்கள் திரும்ப வழங்குவது குறித்து தகவல் சொல்லப்படும் என்றும் அப்போது வந்து வாங்கிக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

வாகனத்தை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த முகிலன் வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு வாகன சோதனை நடைபெற்ற இடத்தில் காவலர்கள் முன்னிலையிலேயே தீ வைத்துக் கொண்டார்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சாலையில் அவர் படுத்துக் கொண்ட நிலையில் அங்கு வந்த வேறொரு வாகனம் மூலம் அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த முகிலனின் உறவினர்கள் ஆம்பூர் நகர காவல் நிலையம் முன்பாக திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி எஸ்பி விஜயகுமார் சமாதானம் செய்தார். இதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் மருத்துவமனையில் குவிந்த முகிலனின் உறவினர்கள் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 91 சதவீத தீ காயங்கள் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர்.

உறவினர்களின் கோரிக்கையை ஏற்று வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக முகிலனை போலீசார் அனுப்பினர்.

சம்பவம் குறித்து அறிந்த வேலூர் சரக காவல்துறை டி.ஐ.ஜி. காமினி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினரிடம் டிஐஜி காமினி விசாரணை செய்தார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினரால் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மருந்து வாங்க சென்றவரின் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், போலீசார்தான் தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

முகிலன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதற்கு போலீசார்தார்தான் காரணம் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டி.எஸ்.பி. பிரவீன்குமார் விசாரணை நடத்தினார். வழக்கில் முறையாக விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்தார்.

தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக வாகன சோதனையின் போது பணியில் இருந்த காவலர்கள் சந்திரசேகர், லட்சுமணன், விஜயகுமார் மற்றும் பட்டாலியன் போலீஸ் செல்வமணி அவர்கள் உடன் பணியிலிருந்த ஊர்வல் படையைச் சேர்ந்த கல்பனா, ராஜேஷ், ஜனனி ஆகிய 7 பேரும் திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. கூறினார்.

வேலூர் சிஎம்சியில் சிகிச்சையில் உள்ள முகிலனிடம் திருப்பத்தூர் குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில் இன்று இச்சம்பவம் தொடர்பாக சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர் சந்திரசேகரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு பிறப்பித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.