25/10/2020

ஆன்லைன் வர்த்தகம் எனக் கூறி 50 கோடி வரை மோசடி - அருப்புக்கோட்டை இளம்பெண் மீது புகார்...

விருதுநகரில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி ரூபாய் 50 கோடி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் உள்பட ஏராளமானோரிடம் மோசடி செய்ததாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி இளம்பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கெப்பிலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை (53). எம்.காம்., பி.எட்., படித்தவர். கணவரை இழந்த இவர் தனது குழந்தைகளின் படிப்பு செலவிற்காக கூலி வேலை செய்து சிறுக சிறுக ரூ. 5 லட்சம் வரை சேர்த்து வைத்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளக்கோட்டையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான லட்சுமி பிரியா என்பவர் 'தான் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாகவும் தினம்தோறும் ரூபாய் 2000 தருவதாகவும், 100 நாட்களுக்கு பிறகு மொத்த தொகை ரூ.5 லட்சத்தை தருவதாகவும், ' கூறியதாகத் தெரிகிறது.

இதை நம்பி பிச்சையும் தான் வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை லட்சுமி பிரியாவிடம் கொடுத்துள்ளார். ஐந்து மாதங்கள் ஆகியும் ரூபாய் 1.10 லட்சம் மட்டுமே பிச்சைக்கு லட்சுமி பிரியா கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூபாய் 3 லட்சத்து 90 ஆயிரத்து திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிச்சை விருதுநகரில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் இன்று புகார் அளித்தார். அப்பொழுது தன்னைப்போல் ஆன்லைன் வர்த்தகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் பலர் ஏமாற்ற பட்டுள்ளதாகவும் ரூ.50 கோடி வரை இந்த மோசடி நடந்துள்ளதாகவும் பிச்சை தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.