15/11/2020

ஆசாரித் தமிழன் வாயில் மண்...

 


என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட சில விடயங்களைப் பகிர்கிறேன்.. எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை...

ஆசாரிகள் தான் அந்தக்காலத்துப் பொறியாளர்கள் (எஞ்சினியர்ஸ்). தமிழர் தலையெழுத்துக்கு அவர்கள் மட்டும் விதிவிலக்கா?

இன்று கேரளாவுக்குப் போய் சம்பாதிக்கும் அளவுக்கு தரம்தாழ்ந்து போனார்கள்.. தமிழகத்தில் இருக்கும் கொத்தனார்கள், நாவிதர்கள், சிற்பிகள், கூலிகள், ஓட்டுநர்கள் எல்லாரும் இப்போது கேரளாவுக்குப் போய் சம்பாதிக்கிறார்கள்..

அதாவது தமிழகத்திலிருந்து ஆள்கூட்டிவந்து வேலைவாங்குமளவு மலையாளிகள் உயர்ந்துவிட்டனர், தமிழர் தாழ்ந்துவிட்டனர்..

சபரிமலை ஐயப்பன் சிலையை செய்து தந்ததே தமிழக சிற்பிகள் தான் (ஸ்தபதி என்று அழைக்கப்படும் பெருந்தச்சர்)..

இன்று அதே சபரிமலையில் ஒரு தேநீர்கடை மலையாளி தமிழனை வெந்நீர் ஊற்றிக்கொல்லும் அளவு தரம்தாழ்ந்துவிட்டனர்...

சரி, ஆசாரிகள் கதைக்கு வருவோம்...

மற்ற தமிழரைப் போலவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கல்வியறிவு இல்லாமல் (ஆங்கிலம் தெரியாமல் படிப்பைவிட்டோரே அதிகம்) சொந்தமண்ணில் எதிர்காலமும் இல்லாமல் அவர்கள் குடிமூழ்கிவருகிறது.

தமிழர்களின் கலைகள் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகின்றன என்பதை அறியப்போகிறீர்கள்; ஊரறிந்த பெருந்தச்சன் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் 'கணபதி ஸ்தபதி'..

குமரிக்கடலில் வானுயரம் நிற்கும் வள்ளுவர் சிலையை கட்டியவர்; இவர் பல்வேறு புகழ்பெற்ற சிலைகளையும் கோவில்களையும் தமிழர் வாழும் பல நாடுகளில் செய்துதந்துள்ளார்.

(பலருக்குத் தெரியாத செய்தி- இலங்கை அரசு 1998ல் பாம்புப்படுக்கையில் இருக்கும் திருமால் சிலை செய்ய முன்பணம் கொடுத்தது; பல இடங்கள் தேடி நீலநிறப் பாறைகளைக் கண்டறிந்து தன் கைக்காசைப்போட்டு அந்த சிலையைச் செய்தார்; சிங்கள அரசுகளைப் பற்றிக் கூறவும் வேண்டுமா, ஆட்சிமாறியதும் அம்போவென விட்டுவிட்டார்கள்; அச்சிலையை அவர் தானியங்கள் நிரப்பிய தொட்டியில் வைத்து புதைத்து வைத்திருந்தாராம், அது இன்றும் அப்படியே இருக்கிறதாம்)..

சென்னையில் சிற்பக்கல்லூரி நிறுவப்பட்டபோது (அதை நிறுவியதும் தமிழ்ப் பார்ப்பனரான ராஜாஜிதான், திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு ஆபத்து வரும்போது வள்ளுவர் கோட்டம், கண்ணகி சிலை போல எதையாவது கட்டி விளம்பரம் தேடுவதோடு சரி) அக்கல்லூரியின் முதல்வராக கணபதியார் நியமிக்கப்பட்டார்; வெறும் உளிப்பட்டறையாக இருந்த சிற்பக்கல்லூரியை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு குறைவில்லாமல் கட்டியெழுப்பினார் கணபதி ஸ்தபதி; தமது 84ம் வயதில் 2011 ல் மறைந்தார்.

கணபதி ஸ்தபதி தான் அதுவரையிலும் தலைமுறை தலைமுறையாக வாய்வார்த்தையாக ஆசாரிகள் கற்றுவந்த தொழில்நுட்பங்களை (கட்டுமானம் மற்றும் சிற்பம்) சரியாக தொகுத்து சீராக்கி வார்த்தைகளை உருவாக்கி கோட்பாடுகளை வகுத்து நூலாக வெளியிட்டார்.

அவர் இருந்தவரை ஆங்கில எழுத்துகள் கூட தெரியாத ஆசாரிகள் பட்டறிவை (அனுபவத்தை) நிறுவி 'ஸ்தபதி' பட்டம் வாங்க முடிந்தது; அதாவது

மூன்றாம் வகுப்பு தாண்டாத ஒரு கோவில்கட்டும் ஆசாரி தமது பட்டறிவால் கற்றுத்தேர்ந்ததும் அக்கல்லூரியில் விண்ணப்பித்தால் பட்டறிவை சோதித்து 'ஸ்தபதி' பட்டம் வழங்கினார்கள். 

கணபதியார் மறைந்தபிறகு சிற்பக்கலையில் கல்லூரிப் பட்டம் பெற்றவருக்கு மட்டுமே அப்பட்டம் கிடைக்கிறது.

இதனால் தனியாக தாமே முழுக்கோவிலையும் கட்டிமுடிக்கும் திறமையுள்ள பட்டறிவு வாய்ந்த ஆசாரிகள், பட்டம் வாங்கிய ஒரு மாணவன் இருந்தால் தான் கோயில்கட்ட இசைவே (அனுமதியே) பெறமுடியும்; வெறுமனே புத்தகத்தைப் படித்த ஒரு இளைஞன் உட்கார்ந்த இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு காசு பார்ப்பான்..

இதைவிடவும் கேடு வேறொன்று உள்ளது...

அதாவது வெளிநாட்டு ஆட்களும் அக்கல்லூரியில் சேர்ந்து புத்தகத்தைப் படித்து தேர்வெழுதிவிட்டு தமிழகத்தின் தலைசிறந்த ஆசாரிகளுக்கு தன் பட்டத்தின் மூலம் தொழில் பெற்றுக் கொடுத்து அதற்கு கைமாறாக அவர்களின் தொழில் முறையைப் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டு அவன் நாட்டுக்குப் போய் அதற்கான காப்புரிமையை வாங்கிவிடுவான்.

அதன் பிறகு ஆசாரிகள் காலம்காலமாக பயன்படுத்திவரும் தொழில்நுட்பங்கள் அவனிடம் இசைவு பெற்ற பிறகு தான் ஆசாரிகளே பயன்படுத்த முடியும்.

எடுத்துக்காட்டாக, இன்று தங்க வளையல்களில் போடப்படும் வேலைப்பாடுகள் (டிசைன்ஸ்) ஆசாரிகள் பயன்படுத்திவந்த அதே முறையை பயன்படுத்தி சிறிய இயந்திரத்தின் மூலம் செய்யப்படுகின்றன. அதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமைகள் வைத்துள்ளன; அந்த வேலைப்பாடு மற்றும் அதன் அளவீடுகள் வடிவங்கள் என அனைத்தும் ஆங்கிலப்பெயர்களில் மாற்றப்பட்டுவிட்டன. அதாவது வளையல் செய்யும் கலையே வெளிநாட்டிலிருந்து வந்ததாக மக்கள் நம்புவார்கள்.

எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் நடைமுறைக்கு கொண்டுவரும் முன் பழைய தொழில்நுட்பம் பயன்படுத்துவோர் அடையும் பாதிப்பை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்;

பழைய தொழில்நுட்பத்தில் பிழைப் போருக்கு புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உரிய மாற்றுவழி அமைத்துத் தரவேண்டும்.

நமக்குத்தான் அரசே கிடையாதே; எப்படி பனினி என்பவரால் தமிழின் புணர்ச்சி விதிகள் திருடப்பட்டு சமசுக்கிருத இலக்கணத்தில் சேர்க்கப்பட்டு இன்று அது தமிழுடன் போட்டிபோடுகிறதோ.

எப்படி தெலுங்கர் ஆட்சியில் தமிழிசையைக் கற்று அதில் தெலுங்கு பாடல்களை அமைத்து மெட்டு, தாளம், இசை ஆகியவற்றின் பெயரை சமசுக்கிருதத்தில் மாற்றி தமிழரின் இசையை திருடி இன்று கர்நாடக சங்கீதம் ஆக்கினார்களோ. 

அதே கலைத்திருட்டுதான் இதுவும்...

கலையைப் பாதுகாக்க அக்கறையுள்ள ஆற்றலுள்ள அரசு நமக்கு இல்லை;

தமிழரின் பழமையான நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகத்தை இந்தியா தனதாக்கிக் கொண்டது;

தோப்புக்கரணத்திற்கு ஆங்கிலத்தில் பெயர்வைத்து அமெரிக்கா காப்புரிமை வைத்துள்ளது.

இன்று பரதநாட்டியம் என்று அறியப்படுவது தமிழர் கலையான சதிராட்டத்தின் ஒரு வடிவமே..

வாடிப்பட்டி மேளம் என்பது போல பந்தநல்லூர் சதிராட்டம் தான் இன்றைய பரதநாட்டியம் (பந்தநல்லூர் தஞ்சாவூர் அருகில் உள்ளது).

இந்த திருட்டு வேலையைச் செய்த சென்னை கலாச்சேத்ராவுக்குப் போய்ப் பாருங்கள் ஒரு தமிழன் கூட அங்கு கிடையாது.

கலையை வளர்க்காமல் அதை வெளிநாட்டாருக்கும் வேற்றினத்தாருக்கும் விற்று பின் அவன் திருத்திய வடிவத்தை நமக்கே கொண்டுவந்து கொடுத்து இரட்டையாக காசு பார்த்து நம்மை சீரழிக்கின்றன இந்த வேற்றின வந்தேறி அரசுகள்.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இழந்துவருகிறான் தமிழன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.