06/11/2020

திரையரங்குகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு...

திரையரங்குகள் செயல்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கடம்பூர் செ,.ராஜு உரியவர்களிடம் வழங்கினார்.

அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அழகுராஜ், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் முனியசாமி, பள்ளி துணை ஆய்வாளர் சசிகுமார், வட்டாட்சியர் மணிகண்டன், காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைகதிரவன், 

அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், மேற்கு ஒன்றியச் செயலர் அன்புராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பாபு, பாலமுருகன், பழனிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறியது:  பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதுகுறித்து முதல்வர் அறிவிப்பு செய்வார்.

ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்துள்ளனர் என கமலஹாசன் கூறியிருப்பது குறித்து கருத்து கேட்டபோது,  இதுவரை ஆட்சியில் என்ன தவறு நடந்துள்ளது, எங்கு நடந்துள்ளது என ஆதாரத்துடன் கூறினால் நன்றாக இருக்கும். 

பொத்தம் பொதுவாக கூறினால் சரியாக இருக்காது.சினிமாவில் அப்படி பேசினால் சரியாக இருக்கும். அரசியல் தலைவர் என்ற முறையில் கமலஹாசன் பேச வேண்டும். ஒருவேளை திமுகவை நினைத்து அவர் கூறியிருக்கலாம்.

நீண்ட காலத்திற்கு பின் திரையரங்கு திறக்கும் நேரத்தில் வி.பி.எப். பிரச்சினை வருவது சரியாக இருக்காது என்றும், திரைப் படங்களை வெளியிட்டு விட்டு இது பற்றி எப்போது வேண்டுமானலும் பேசலாம்,சுமார் 7  மாதங்களுக்குப் பின், திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. 

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் திரையரங்குகளில் கடைபிடிக்கப்படும் என உரிமையாளர்கள் உத்திரவாதம் வழங்கியுள்ளனர். திரையரங்குகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என திரையரங்கு உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களும் அதை மீற மாட்டார்கள். அரசும் அதை கண்காணிக்கும். விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.