24/02/2021

கண்ணாடி...

 


மிகுந்த செல்வம் சேர்த்தும் மன நிம்மதி இல்லாத பணக்காரன் ஒருவன் மன நிம்மதி தேடி ஒரு குருவிடம் சென்று விபரம் சொன்னான்.

குரு அவனிடம், ''இந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்து என்ன தெரிகிறது என்று சொல்,'' என்றார். அவனும், ''மக்கள் போய் வருகிறார்கள்,'' என்றான். 

குரு பின்னர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவனிடம் கொடுத்து,''இந்தக் கண்ணாடியில் என்ன தெரிகிறது என்று பார்த்து சொல்,''என்றார்.

அவனும் பார்த்து விட்டு, ''என் முகம் தெரிகிறது, ''என்றான். 

''மக்கள் யாரும் தெரியவில்லையா?'' என்று குரு கேட்க அவன் இல்லை என்றான். 

இப்போது குரு சொன்னார், இரண்டு கண்ணாடிகளும் ஒரே பொருளால் தான் செய்யப் பட்டுள்ளன. ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில் மட்டும் பின்புறம் பாதரசம் பூசப் பட்டுள்ளது. பாதரசம் பூசியதால் வெளியே உள்ளது எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்த சாதாரண கண்ணாடி ஜன்னல் மூலம் வெளி உலகை உன்னால் பார்க்க முடிகிறது. 

நீ சாதாரணமாக ஏழையாய் இருந்தால் மற்றவர்களை உன்னால் சரியாகப் பார்க்க முடியும். அவர்களிடம் இரக்கம் காட்ட முடியும். பணம் எண்ணும் பாதரசத்தால் நீ மறைக்கப் பட்டு விட்டால் உன்னால் உன்னை மட்டுமே பார்க்க முடியும்.

பொருள் ஆசையைக் களைந்து விடுவது ஒன்றுதான் உனக்கு நிம்மதி கிடைப்பதற்கான ஒரே வழி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.