31/03/2021

அவர் இறந்து விட்டார் அடக்கம் செய்யணும் என்று சொல்லிக் கொண்டே சென்றார்கள்..



மெல்ல எட்டிப் பார்த்தேன் 

மூச்சு இல்லை – ஆனால் 

இப்போது தான் இறந்திருந்தார் 

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..


இருபது வருடங்கள் முன்னாடி 

அவர் மனைவி இறந்த பிறகு

சாப்பிட்டாயா என்று யாரும் கேட்காத நேரத்தில் – அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்கவில்லை...


பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று காதுபட மருமகள் பேசியபோது.. அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...


தாய்க்குப் பின் தாரம்.. தாரத்துக்குப் பின் .. வீட்டின் ஓரம் ... என்று வாழ்ந்த போது – அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை ..


காசு இங்கே மரத்திலேயா காய்க்குது - என்று மகன் அமிலவார்த்தையை 

வீசிய போது.. அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...


என்னங்க... ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க... என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை... 


உனக்கென்னப்பா... பொண்டாட்டி தொல்லை இல்லை என்று வாழ்த்துவது போல. கிண்டலடிக்கப் பட்ட போது.. அவர் இறந்திருந்தார்.. அப்போதும் யாருமே கவனிக்க வில்லை..


இப்போது தான் இறந்தார் என்கிறார்கள்...


எப்படி நான் நம்புவது..?


நீங்கள் செல்லும் வழியில்.. இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்... 


ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்..


இல்லையேல்...


உங்கள் அருகிலேயே இறந்து கொண்டிருப்பார்கள் புரிந்து கொள்ளுங்கள்...


வாழ்க்கை என்பது 

வாழ்வது மட்டுமல்ல..

வாழ வைப்பதும் தான்...


பலர் இறந்து விடுகிறார்கள். 

புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.