16/04/2021

ஏழை எளிய மக்களிடம் வங்கிகள் நடத்திய வசூல் வேட்டை ; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்...

வங்கிகளில் ஏழை மக்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லாத அடிப்படை வங்கிக் கணக்குகளுக்கு ( பிஎஸ்பிடிஏ ) , குறிப்பிட்ட சேவைகளுக்காக எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது .

கடந்த 5 ஆண்டுகளில் எஸ்பிஐ வங்கி ரூ .300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.இது குறித்து மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது .

அந்த ஆய்வு முடிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : 

எஸ்பிஐ வங்கியில் அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 4 பணப் பரிமாற்றங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ . 17.70 வீதம் கட்டணம் வசூலிக்க வங்கி நிர்வாகம் முடிவெடுத்திருப்பது , ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை .

சேவைக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் விதிப்பதன் மூலமாக கடந்த 2015 முதல் 2020 - ஆம் ஆண்டு வரை அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 12 கோடி பேரிடமிருந்து ரூ 300 கோடிக்கும் அதிகமாக எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளது .

இந்தியாவின் 2 - ஆவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 3.9 கோடி வாடிக்கையாளர் களிடமிருந்து அதே கால கட்டத்தில் ரூ .9.9 கோடியை பல்வேறு சேவைகளுக்காக வசூலித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் 2013 - ஆம் ஆண்டு வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே அடிப்படை வங்கி கணக்குகள் மீது கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன 

அதன்படி , அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்க வங்கிக் கணக்கிலிருந்து கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர் . 

இந்த கூடுதல் பரிமாற்றத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று வங்கிகள் வாக்குறுதியும் அளிக்கின்றன .

அதோடு , அடிப்படை வங்கி கணக்கில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து வங்கிகள் விவரிக்கும்போது , 4 முறை சேவைக் கட்டணம் இன்றி பணம் எடுக்கும் வசதி உள்ளிட்ட இலவச வங்கிச் சேவை அளிக்கப்படும் என்பதோடு , மதிப்புக்கூட்டு வங்கிச் சேவைகளுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது .

அதுபோல , வங்கிக் கணக்கில் 4 பணப் பரிமாற்றத்துக்கு பிறகான பரிமாற்றத்தை , வங்கியின் மதிப்புக்கூட்டு சேவையாகவே ரிசர்வ் வங்கியும் கருத்தில் கொள்கிறது . 

ஆனால் , ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் தனது வாக்குறுதிகளை மீறி , 4 முறைக்குப் பிறகான பணப் பரிமாற்றத்துக்கு மிக அதிக கட்டணத்தை எஸ்பிஐ வங்கி வசூலித்து வருகிறது .

அதாவது என்இஎஃப்டி , ஐஎம்பிஎஸ் , யுபிஐ , பிஹெச்ஐஎம் - யுபிஐ , பண அட்டை உள்ளிட்ட வழிகளிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு ரூ .17.70 வீதம் கட்டணம் வசூலிக்கிறது . ரிசர்வ் வங்கி இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.

ஐடிபிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களிடம் 4 முறைக்குப் பிறகான ஒவ்வொரு பணமில்லா டிஜிட்டல் பரிமாற்றத்துக்கும் கடந்த ஜனவரி 1 - ஆம் தேதி முதல் ரூ .20 வீதம் கட்டணம் வசூலித்து வருகிறது . ஏடிஎம் சேவைக் கட்டணமாக ரூ .40 வசூலிக்கிறது .

இந்த வகையில் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் தனது கடமையிலிருந்து ரிசர்வ் வங்கி தவறி , அவர்களை முறைகேடுகளுக்கு இரையாக்கியுள்ளது என்று மும்பை ஐஐடி ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.