19/08/2021

கோழையே சுடு...

 




1967 அக்டோபர் 8, மாலை மூன்றரை மணிக்கு பொலிவிய சேனையால் சே தமது 22 தோழர்களுடன் சுற்றி வளைக்கப்படுகிறார்..

சே காலில் குண்டு பாய்ந்திருந்தது சகதோழர் தூக்கிக்கொண்டு ஓடமுயன்றார் ஆனால் முடியவில்லை.

துப்பாக்கியை எடுக்க முயன்ற சேவின் கை சுடப்பட்டது.

குவப்ராடா டெல் யூரோ என்ற ஆற்றின்கரையில் இது நடந்தது
(இப்போது அது நினைவிடம்)..

கை கால்கள் கட்டப்பட்டு தூக்கிச் செல்லப்படுகிறார் சே.

ஒரு பள்ளிக்கூடத்தின் தனி அறையில் அவர் கிடத்தப்பட்டார்.

சேவை என்ன செய்வது விசாரணைக்கு உட்படுத்தினால் உலகம் உற்றுப்பார்க்கும்.

பேசாமல் கொன்றுவிடலாம் மோதலில் இறந்ததாக அறிவித்துவிடலாம் கூடியிருந்த சி.ஐ.ஏ உளவாளிகளான கியூப நாட்டு இனத்துரோகிகள், பொலிவிய சேனைத் தளபதிகள், அமெரிக்க-பொலிவிய அரசை கலந்தாலோசித்து முடிவுக்கு வந்தனர்.

1967 செப்டம்பர் 9, காலை பத்துமணி சார்ஜண்ட்.டெர்ரன் என்பவரிடம் சேவை கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது.

அந்த அழுக்கான அறையில் அவர் நுழைந்தார்.

கிழிந்த அழுக்கான ஆடைகள், பல நாள் பட்டினியால் எலும்பும் தோலுமாக, காலில் பிய்ந்துபோன சப்பாத்துகளை அணிந்த எழக்கூட முடியாமல் கிடக்கிறாரே இவரா உலக வல்லரசுகள் நடுங்கும் சே?

இவரா அர்ஜண்டினாவில் மருத்துவர் பட்டம் பெற்ற செல்வச்சீமான்?

இவரா வெறும் 300போராளிகளை வைத்துக் கொண்டு விமானம் மற்றும் தாங்கி (tank)களுடன் நின்ற 7,000 படையினரைத் தோற்கடித்து ஹவானாவைக் கைப்பற்றிய மாவீரர்?

இவரா க்யூபாவின் ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துப் போட்ட நிதித்தலைவர்?

இவரா ஐ.நா சபையில் உரையாற்றிய மனிதர்?

இவர்தானா சொற்பமான போராளிகளுடன் பதினோரு மாதங்கள் பொலிவியாவைக் கதறவைத்த கரந்தடிப் போராளி?

நம்பமுடியவில்லை..

சே அந்தநிலையிலும் எழ முயன்றார்.

டெர்ரன் நடுங்கிப்போய் திரும்பிவிட்டார்.

பிறகு மேலாளர்களின் கண்டிப்பான உத்தரவுக்கு பணிந்து நிலைமறக்கும் அளவு குடித்துவிட்டு மறுபடி போனார்.

துப்பாக்கியை நீட்டினார்.

"கோழையே சுடு, நீ சுடுவது
தனி மனிதனைத் தான்"
சேவின் குரல் ஒலித்த மறுநொடி கண்களை இறுக்க மூடி முகத்தை வேறுபக்கம் திருப்பியவாறு படபடவென்று சுட்டுவிட்டான்.
ஆம் சே மரணத்தை வென்றுவிட்டார்.
மாந்த உடலில் அடைபட்டிருந்த சே உலகம் முழுவதும் நிறைந்துவிட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.