17/10/2021

சித்தராவது எப்படி - 23...

 


சுவாச ஒழுங்கில் சூரிய கலை சந்திர கலை...

இன்று ஒரு அன்பர் கேட்ட கேள்வியின் விளைவாக சுவாச ஒழுங்கினை பற்றி மேலும் விவரிக்க வேண்டிய அவசியமாகிறது...

சுவாசத்தோடு இருக்கின்ற நாம் அதில் செம்மையாக இருக்கும் போது அதாவது ஒழுங்காக இருக்கும் போது ஏற்படுகின்ற உயர்வுகள் முன்னேற்றங்கள் அளவிட முடியாதது..

அப்படி பட்ட உயர்வுகளை தன்னிடமே வைத்துக் கொண்டுள்ள அந்த சுவாச ஒழுங்கில் இருப்பது அவ்வளவு எளிதா என்ன?

ஆமாம் அது சற்று என்ன மிகவும் கடினமே..

அதற்கு இடையூறு செய்கின்ற தடைகளை வெல்லுவது என்பது ஒன்று சேர்ந்து வரும் மிக பெரிய பூதங்களை வெல்லுவதற்கு இணையானது..

கவர்ச்சி என்பது துளியும் இல்லாத இந்த சுவாச ஒழுங்கு மனதிற்கு புலப்படாத ஒருநிலை நோக்கி நகர்ந்து ஒரு தோன்றா நிலை என்ற அதி உன்னத நிலை நோக்கி நகர்த்தி செல்லுவதால் அந்த தெய்வநிலைக்கு இடையூராக பூத கணங்கள் என்ற எண்ண தடைகள், தடை செய்வது சகஜமே..

சரி இந்த சுவாச ஒழுங்கில் சூரியகலை சந்திர கலை என்று வெளி விடுகின்ற மூச்சும் உள்வாங்குகின்ற மூச்சுமாக பார்த்தோம்..

ஆனால் சந்திர கலை சூரிய கலை என தனித்தனியாக உணர முடிந்ததா ?

இரண்டும் ஒன்றாகவே இருக்கும் பொழுது எந்த முன்னேற்றமும் காண முடியாது..

ஆனால் தனித்தனியாக உணர வேண்டும் என்றால் வெளி விடுகின்ற சூரிய கலை முழுமையும் தோன்றா நிலையாக இருந்தால் மட்டுமே சூரிய கலை சந்திர கலை தனித் தனியாக பிரியும்..

அதற்கு ஓம் நமசிவய என்ற மந்திரத்தின் கால அளவினை பிடித்துக் கொண்டு சூரிய கலை முழுமைக்கும் தோன்றா நிலை உணரவும் அதே நிலையில் சந்திர கலையும் அந்த தோன்றா நிலைக்கு சென்று விடாமல், நம் மனதின் திறனை இழந்து விடாமல் சந்திர கலையில் உள் வாங்கும் மூச்சை நம் மனதால் பற்றி நாமே உள் வாங்க வேண்டும்..

இதில் நாம் என்பது மனதாக உள்ள நாம் தான்...

அந்த சந்திர கலையில் நம் அதி தேவையான ஒன்றை நினைக்கும் போது அந்த தேவைக்கான தடைகள், அந்த தோன்றா நிலையில் கரைந்து போகும் அதிசயம் நடக்கிறது...

தடைகள் கரைந்து நீங்கிய நிலையில் அந்த தேவை நிறைவேற்றப் படும் அதிசயமும் நடைக்கிறது...

மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தோன்றா நிலையினை சூரிய கலையில் பெற்ற உடன் நம் சந்திர கலை சுத்தமாக தோன்றா நிலையை பூரணமாக கவ்விக் கொண்டு அமாவாசை போன்ற சந்திரகலையும் தோன்றா நிலைக்கு சென்று மறைந்து விடுகிறது..

பயிற்சியில் தொடரும் போது, தோன்றாநிலை நீங்கிய பிறைகளாக சந்திர கலை வளர்ந்து வளர்ந்து பௌர்ணமியான முழு நிலவு ஆகிறது..

அந்த முழு மதிநிலையில் மட்டுமே நமது ஆசைகள் ஒழிந்து தேவைகள் முன் நிறுத்தப் படுகின்றன..

ஆசைகள் வேறு தேவைகள் வேறு என்பதை முன் பகுதிகளில் தெளிவாக கூறி இருக்கின்றது..

அனைத்துக்கும் ஆசைபடு என்ற கருத்தை விட்டு விட்டு அனைத்து தேவைகளையும் உணர் என்ற சத்தியத்தை பிடித்தால் பெரும் நன்மை அடையலாம்...

நோய் நீங்குதல், தரித்திரம் நீங்குதல், தன்னை சார்ந்தவர்களுக்கு உதவாத அவலநிலை, பாதகமான சூழ்நிலைகளை எதிர் கொள்ளல் போன்ற, மிக அவசியமான தேவைகள் மட்டுமே இந்த சந்திர கலை மதியான நிலையில் உதிக்கும்..

அந்த தேவைகளின் தடைகளை இந்த சூரிய கலை போக்கும் அதிசயத்தை இந்த மனம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை... இல்லவே இல்லை..

ஆனால் தேவைகள் பூர்த்தியாகும் அதிசயத்தை நீங்கள் விரைவில் உணரலாம்..

சந்திர கலையை மதி ஆக்குவதற்கு மிக சிரமமா என்ற கேள்விக்கு பதில் சராசரி மனிதனுடைய திறமையில் சற்று தீவிரமாக பயின்றால் மூன்று அல்லது நான்கு வாரத்திற்குள் இது சாத்தியமாகும்...

உங்கள் அனைத்து தேவைகளையும் நிறைவேற இந்த சுவாச ஒழுங்கு முற்றிலும் கவர்ச்சி அற்ற ஒன்று என்பது மிக முக்கியமான தடை..

மதியிலே வைக்கப் படும் தேவைகள் கண்டிப்பாக சூரிய கலையின் தோன்றா நிலையால் நிறைவேற்றப் படும் என்பது சத்தியமான உண்மை..

தெய்வத்திடம் பக்தியோகத்தில் முறையாக நிற்கும் மனிதன் முதலில் அந்த தெய்வத்திடம் தோன்றா நிலையினை உணர வேண்டும்..

தெய்வத்தின் இயல் நிலை என்ற தோன்றா நிலையை உணராமல் செய்யும் பக்தியோகம் ஒரு பலனும் அளிக்காது..

தெய்வத்திடம் முறையிட்டு பல தோல்விகளை கண்டு துவண்டு போன மனிதன் தானாக அனுபவப் படும் தோன்றா நிலை மூலமாகவும் அதன் பின் சந்திர கலையை முழு மதியாகவும் அனுபவப் படும் போது மட்டுமே தெய்வதிடமிருந்து பலன் பெறப் படுகிறது..

அந்த நிலைக்கு வர பல ஆண்டுகள் ஒடி விடும்.. அதற்கு காரணம் ஆன்ம இலாபம் துளியும் இல்லாத நிலை..

காட்டில் வாழ்ந்த கண்ணப்பருக்கு தன்னுடைய அப்பாவித்தனம் மூலம் ஏழே நாட்களில் தோன்றா நிலைக்கு சென்று அன்பு என்ற முழு மதி நிலை அடைந்ததால், இறை தரிசனம் கிடைத்தது.. அவருக்கு அப்பாவி தனம் மிகவும் உதவியது..

ஆனால் அப்பரோ தனது என்பது வயதில் கடினமான கைலாய மலையில் பயணப் பட்டு அதில் அடைந்த சோர்வில் துவண்டு தோன்றா நிலைக்கு தள்ளப்பட்டு பின் தன் ஒரே குறிகோளான இறை தரிசனம் என்ற ஒரே தேவையால், கலைகள் நிரம்பிய மனம் ஒரே தேவையான இறைதரிசனம் என்ற ஒன்றால் மதியாகி, அந்த கைலாயமே தன் சொந்த ஊரிலேயே காணும் வல்லமை பெற்றார்.. அதற்குள் அவர் காலம் எண்பதற்கு மேல் தாண்டி விட்டது..

யாம் சில சமயங்களில் சில யோக பயிற்சிகளை குறை கூறுவது ஆன்மா இலாபம் துளியும் கிடைக்காது முடிவில் தோல்வி ஒன்றையே தழுவும் படியாக தருவதை தான்..

அதில் கற்றுக் கொள்பவர்கள் மேலும் மேலும் இடர் படக் கூடாது என்ற அன்பின் காரணமாக தான்... மற்றபடி வேறு ஒன்றும் இல்லை...

தோன்றா நிலை வெளிப்படாத வெளி சுவாசம் சூரியகலை அல்ல.. அதன் பெயர் வெளி சுவாசம் மட்டுமே..

தோன்றா நிலை உடைய வெளி சுவாசம் மட்டுமே சூரிய கலை எனப்படும்...

உள் வாங்கும் சுவாசத்தில் மதி நிலை தோன்றா விட்டால் அதன் பெயர் உள் சுவாசம் என்றே கொள்ள வேண்டும்.. அது சந்திர கலைகள் நிறைந்தது..

பலவித ஆசை என்ற எண்ண ஆதிக்கங்களால் நிரப்பப்பட்டது..

ஆனால் ஒரே எண்ணமான தேவையை மட்டும் உடைய மதியான உள் சுவாசத்தை ஏக கலையான பௌர்ணமியை சந்திர கலை எனலாம்..

இப்படியாக சுவாச ஒழுங்கின் மூலம் சந்திரகலை சூரிய கலை பெற்று நம் உடல், வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து பின் சித்தராகும் உயர்ந்த குறிகோளை நோக்கி நகருவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.