குண்டலினி சக்தி பயணம் - பாகம் இரண்டு...
இது இரண்டாம் நிலை பயிற்சி.. முதல் நிலை பயிற்சியில் மேன்மை அடைந்தவர்களிடம் ஏற்படும் அனுபவங்களின் விளைவாகவும், அந்த அனுபவங்களை முறை படுத்துவதற்காகவும் இந்த இரண்டாம் நிலை பயிற்சி தர வேண்டிய அவசியம் ஆகிறது..
முதல் நிலையான சுவாச ஒழுங்கில் மேன்மை அடையாதவர்கள் இந்த இரண்டாம் நிலை பயிற்சிக்கு வந்தால் குழப்பமே உருவாகும்...
முதல் நிலையில் மேன்மை அடைந்தவர்கள் பேரண்ட ஆற்றலை அதிகம் பெற்ற காரணத்தினால் உடம்பில் சில நகரும் ஊறல்கள் ( moving feeling ) தோன்றுகிறது.. அதுவே குண்டலினி சக்தி பயணமாகும்..
இந்த சக்தி பயணம் சூட்சும தேகத்திற்கே உரியது.. இந்த பயணத்தை முறை படுத்துவதின் மூலம் மிக பெரிய அளவில் ஆன்ம இலாபம் பெறலாம்..
சுவாச ஒழுங்கு ஆரம்பத்தில் சில இடங்களில் உறுத்தல் உணர்வுகள் ( spot feeling ) தோன்றி பின்பே அது நகரும் ஊறல் உணர்வாக மாறும்..
ஆனாலும் நாம் தூல உடம்பிலே இயங்கும் சுவாச ஒழுங்கிற்கு குறை ஏற்படுத்தினால் இந்த குண்டலினி சக்தி பயணமும் தடை படும்.. இதை மறக்காமல் செயல் பட வேண்டும்..
இந்த இரண்டாம் நிலை பயிற்சி முற்றிலும் சூட்சும தேக பயிற்சி ஆகும்...
அதிகபடியான ஆற்றலை சூட்சம தேகத்தில் முறை படுத்தும் நெறி ஆகும்.. ஆகவே சுவாச ஒழுங்கினை எந்த காரணம் கொண்டும் விட்டு விலகி செல்லக் கூடாது...
சுவாச ஒழுங்கு மேன்மை அடையும் போது பெறப்படும் அளவற்ற ஆற்றல் சூட்சம தேகத்தின் ஆதார சக்கரங்களில் தன்னிச்சையாக ஓட தொடங்கும் போது அதை முறை படுத்த வேண்டிய அவசியம் ஆகிறது..
முதல் அப்பியாசமாக அச்சக்தியை மூலாதாரத்திலிருந்து பிடரி ஆதாரத்திற்கு பயணப் பட வைத்து பிடரியை பலப் படுத்த வேண்டும்.. அது நினைவகம்..
நினைவு இல்லையென்றால் உயிரிடம் துளியும் முன்னேற்றம் ஏற்படாது..
உயிருக்கு அடுத்த படியாக முக்கியமான இடத்தில் இருப்பது நினைவகம் தான்..
இந்த நினைவகத்தில் மையம் கொண்டுள்ள பழைய அனுபவத்தின் தொடர்சியாகத்தான் புதிய அனுபவங்களுக்கு நகர்ந்து செல்லுகிறோம்..
இல்லையேல் மீண்டும் மீண்டும் பழைய அனுபவத்தை அனுபவப் படவே வாழ்ந்து கால விரையும் செய்து கொண்டு விலங்கு போல் இருப்போம்..
இந்த நினைவகம் பலப்பட பலப்பட வாழ்க்கையில் புதுமைகளை புகுத்து கொண்டே இருப்போம்.. இந்த பிடரி ஆதாரத்தை சித்தம் எனவும் சொல்லலாம்..
அனுபவங்களை தாங்கி நிற்கும் வலிமை உடைய இந்த சித்தம் என்னும் பிடரி ஆதாரம், மீண்டும் அதே அனுபவங்களை ஏற்றுக் கொள்ளாமல் அந்த அனுபவத்திலேயே நிறைவு கொண்டு இருக்கும்..
புகை பிடிப்பவர்கள் மது அருந்துபவர்கள் இந்த பிடரி ஆதாரத்தை பலப்படுத்திய உடனே அந்த பழக்கங்களின் தொடர் நிகழ்வு நின்று விடும்... கெட்ட பழக்கங்கள் காணாமல் போய் விடும்..
இப்படியாக சித்தமான பிடரி ஆதாரத்தை பலப் படுத்தியவர்கள் தான் சித்தர் ஆவதற்கான முதல் தகுதி பெறுகிறார்கள்..
இந்த சித்தர்கள் ஏன் உலகியல் விவகாரங்களில் அதிகம் நாட்டம் இல்லாமல் இருக்கிறார்கள்..
ஏற்கனவே அனுபவித்த உலகியல் அனுபவங்கள் அதன் வீரியம் குறையாமல் பலம் வாய்ந்த சித்தத்தில் தக்க வைத்து கொண்டிருப்பதால் அவர்களின் அந்த பழைய அனுபவங்களுக்கான ஏக்கம் மிகவும் தளர்ந்த குறைந்த அல்லது நீங்கிய நிலையில் பூரண நிறைவு காரணமாக மீண்டும் பழைய செயலில் ஈடுபட விரும்பாமல் போவதே..
இந்த பிடரி ஆதாரம் பலப்படும் பொழுது பழைய அனுபவங்களும் நினைவாற்றலால் பலம் ஆகி அந்த அனுபவங்களுக்காக ஏக்கமும் நீங்க ஆரம்பித்து, மீண்டும் அந்த அனுபவங்களுக்கு ஆசை படாத நிலையும் உருவாகும் அற்புதமும் நடக்கிறது..
சில ஆழமான அழுத்தமான ஆசைகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்..
சுவாச ஒழுங்கில் மூலம் பெறப் படும் அதிக ஆற்றலை மூலாதாரத்திலிருந்து பிடரிக்கு அனுப்பி பிடரி ஆதாரத்தை வலுவாக்குவதின் மூலம் ஆசைகளை வேரறுக்கும் சூத்திரமும் இரகசியமும் இது தான்..
உள் நகைத்தல் மூலம் குண்டலினி சக்தி ஓட்டத்தை அடையாளம் தெரிந்து கொண்ட நாம் அதிகப் பட்ட ஆற்றலை மூலதாரத்திற்கும் பிடரிக்கும் பயணப் பட வைத்து பிடரி ஆதாரமான சித்தத்தை வலு படுத்துவதின் மூலம் அதிக பலன் பெற முடியும் என்பதை நினைவில் கொண்டு எல்லாவற்றிக்கும் சுவாச ஒழுங்கே அடிப்படையானது என்பதை மறவாது சுவாச ஒழுங்கிலே இருக்க முனைவோமாக...
அடுத்த பதிவில் பிடரியில் இருந்து சுழுமுனை ஆதாரத்திற்கு பயணப் படும் முறையையும், சுழுமுனையின் மேன்மையும் தெரிந்து கொள்வோமாக...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.