08/09/2022

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பெரும்பான்மையோர் வேற்றுமொழியாளர்கள்..

50 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட கேட்டிராத  "இலங்கை" என்னும் பெயரை 1000 ஆண்டுகளுக்கு முன்பான சோழர்கள் விளிப்பதாக வசனம் அமைத்திருப்பது, சிவனையே ஆதிகடவுளாக கொண்ட சோழ சாம்ராஜ்யத்தின் தலை மன்னர்களை  திருநீறு பூசாது காட்சிப்படுத்தி இருப்பது என படம் மூன்று நிமிட காட்சிகளிலேயே பெரும் அச்சத்தையும்  சந்தேகத்தையும்  உண்டாக்கியிருக்கிறது.


கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வேண்டுமானால் கற்பனை கலந்த கதையாக இருக்கலாம் ஆனால் சோழர்கள் தமிழர்கள் என்பதும் இன்றைய இலங்கை அன்றைக்கு ஈழமென்றே விளிக்கப்பட்டதும் அரசர் முதல் கடைக்கோடி குடிமகன் வரை நெற்றி நிறைய திருநீறு பூசி வாழ்ந்ததும் என எல்லாமே சத்தியம், வரலாறு...


 பாகுபலி போன்ற போலி, முற்றும் முழுதான  கற்பனை கதைகளே திரைப்படங்களாக உலகை அதிரவைக்கும்போது உலகையாண்ட தமிழினத்தின் வரலாறு, வீரகாவியங்கள்  திரைக்காவியமாக இன்றைய உலகிற்கு கொண்டு செல்லப்படவில்லையே என்ற வருத்தமும் வலியும் தமிழர் எமக்கிருப்பது உண்மை தான், எனவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அறிவிப்பு வந்தபோது நாங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் விழுந்து திளைத்தது, படம் வெளியாகும் நாளுக்காக இந்த நொடிவரை பெரும் எதிர்பார்ப்பையும் குதூகலத்தையும் கொண்டு நிற்பது உண்மை தான் ஆனால் அது சமயம் படம்  திரைகற்பனைகளையும் தாண்டி போலியான திட்டமிட்ட வரலாற்று திரிபுகளோ, இழிவு செய்யும் நோக்கத்திலான காட்சிகளோ நிரம்பி இருப்பின் எங்களின் மறுப்பும் எதிர்ப்பும் மிகக் கடுமையாக இருக்கும்.


படத்தின் இயக்குனர் ஏற்கனவே கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தின் வாயிலாக எமது விடுதலை போராட்டத்தை தவறாக எடுத்துக் காட்டியதும் இப்போது வெளிவந்துள்ள 3 நிமிட ட்ரைலர் உண்டாக்கிய அதிர்வு என எல்லாமே  எமக்குள் அச்சத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இயக்குனர் பாகுபலி இயக்குனருக்கு போட்டியாக தனது திறனை வெளிக்காட்டும் வாய்ப்பாக இத்திரைப்படத்தை எடுத்துக் கொள்ளாமல் தமிழர் வரலாற்றின் வீரத்தையும் பெரும்புகழையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் முயற்சியாக கையாண்டிருந்தால் படம் உண்மையான உள்ளபடியாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


ஆனால் அந்த நம்பிக்கையை தாண்டிய அச்சமும் சந்தேகமும் எழுவதை தவிர்க்க முடியவில்லை காரணம் வரலாற்றின் வழியெங்கும் தமிழர் நாங்கள் அதிகம் வீழ்ந்தது எதிரிகளால் அல்ல, துரோகிகளால்.


பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.