27/10/2018
நீங்கள் ஒரு காந்தம்...
உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.
முதலாவது, கர்மா-மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.
இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.
மூன்றாவது அதீத ஆர்வம்-ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.
ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.
ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.
ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.
இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால் வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.
இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.
ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம்.
அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை "சத் சங்கம்" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.
மூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.
அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.
நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.
எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.
இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயல்பு, அவ்வியல்பு கணிக்கவியலாதது...
அவற்றை பற்றிய முழு புரிதலன்றி அவை நடந்தேறாது, நடைமுறைப்படுத்தி கண்டாலும் சில குணங்களே வெளிப்படுத்தவல்லது,
வெளிப்படுத்தவியலாத ஒன்று அதிகமிருப்பின் அதுவே இயல்பு. அவை நகலெடுக்கவல்லதன்று
உன் சில இயல்புடன் பொருந்துவோரிடம் பழகு..
பொருந்தாதவற்றை வெறுக்காது விலக்கி வை..
பொருந்துவோரை நம்பாதே அதே சமயத்தில் சந்தேகிக்காதே
உனக்கு தோன்றுவதை உருவாக்கு..
பின்வருவோரை மட்டும் இணைத்துக்கொள்..
உண்மைக் கருத்தியலுக்கு விளம்பரம் தேவையற்றது,
விலகி செல்வோர்க்கு புரியவை, அவ்வாறும் பொருந்தவில்லையெனில்
அவரை விலக்கி, வெறுக்காத பாதையில் கண்டுங் காணாது கடந்து செல்..
உண்மையைத் தேடிப் பொருந்தும் வரும் ஓர் கூட்டம் உன் கருத்தியலை
ஆராய்ந்து ஏற்கும்..
ஏற்று ஏறி வந்தோரிடம் தலைமையற்ற எண்ணத்தை விதை..
ஒரே கருத்தியலில் இயல்பில் முரண்பட்டாலும், கருத்தியலால் ஒன்று சேரும் தன்மையை உருவாக்கு
இயல்பாக பின்வருவோரைக் கண்டு அமைதியாய் கடந்துக் கொண்டே செல்..
நான் உயிரியல் புத்தகத்துல உணர்ந்து நடப்பனவற்றுள் பொருத்தி எழுதியது...
அகத்திக்கீரையின் மகத்துவம்...
துக்க வீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை ரசம் வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு..
காரணம், இறப்பின் சோகத்தில் சாப்பிடாமல் - கிடப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்..
உடலின் உள் காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷ முறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் தன்னகத்தே வைத்திருக்கும் உன்னதமான மரம் அகத்தி...
அகத்தி மரம்..
அகத்தி மரம் தை முதல் மாசி மாதம் வரையிலும் பூக்கும் இயல்பு உடையது.
தஞ்சாவூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் பி.சரஸ்வதி, அகத்தியின் பலவிதமான மருத்துவக் குணங்களை விவரிக்கிறார்..
'அகத்தி 20 முதல் 30 அடி வரை வளரக்கூடியது. பூவின் நிறத்தைப் பொருத்து செவ்வகத்தி மற்றும் வெள்ளை அகத்தி என்று அகத்தியை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்..
இலைகள்:
அகத்தி இலையைக் கீரை என்பார்கள்.
இதன் சாற்றை எடுத்து, ஒன்று அல்லது இரண்டு துளி மூக்கில்விட்டால் காய்ச்சல் குணமாகும். அகத்தி இலையிலும் பூவிலும் அதிக அளவில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. நெய்யை நன்றாகக் காய்ச்சி அதில் அகத்தி இலைகளை இட்டு நன்கு வெந்த பிறகு வடிகட்டிப் பருகச் செய்தால், மாலைக்கண் நோய் குணமாகும்..
இலையை அரைத்துப் பசைபோல் செய்து காயங்களுக்குக் கட்டலாம். புண்கள் விரைவாக ஆறும். சீழ் பிடிக்காது..
வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு.
செவ்வகத்தி இலை குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. தேகம் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் இருக்காது. சிறுநீர் பிரிவது எளிதாக இருக்கும்..
பூக்கள்:
அகத்திப் பூச்சாற்றைக் கண்ணில் பிழிய, கண் வலி குணமாகும்.
மரப்பட்டைகள்:
குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், அம்மைக் காய்ச்சல் தீரும்.
வேர்ப் பட்டை:
அகத்தி வேர்ப் பட்டையில் சாப்போனின், டானின், ட்ரைடெர்பின் போன்ற பல வேதிப் பொருட்கள் உள்ளன. வேர்ப் பட்டையை நீரில் இட்டுக் குடித்து வந்தால், மேகம், ஆண் குறியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ஐம்பொறிகளில் ஏற்படும் அனைத்து வகையான எரிச்சல்களையும் குணமாக்கும்.
அகத்திக் கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால், வாயுவை உண்டாக்கிவிடும்.
மேலும் தினசரி அதிக அளவில் உண்டால், வயிற்றுக் கடுப்பையும் ஏற்படுத்திவிடும்.
இந்தக் கீரைக்கு மருந்துகளின் செயல்பாடுகளைத் தடுக்கும் இயல்பு உண்டு. எனவே, பிற மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் அகத்தியைத் தவிர்ப்பது நல்லது.
பல வீடுகளில் முருங்கை மரம் இருக்கும் அதை போல வீட்டுத் தோட்டத்தில் அகத்தி மரத்தையும் வளர்க்க வேண்டும் . கடைகளில் இதன் விதை கிடைக்கும். தவறாதது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்...
தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...
மலையாளிகள் கொண்டாடும் அரிசி...
சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்...
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.
இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.
சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது..
கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது.
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
அதனால் தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.
இந்தியாவில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம்.
இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பது தான் உண்மை..
இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்.
பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch)..
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்து விட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்.
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.
மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காண முடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.
இதையெல்லாம் விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத் துறையில் இப்போதும் லோவாசு (ஸ்)டேடின் (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.
செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு (ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.
சிவப்பு பூஞ்சண அரிசி (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை சொத்துவரி 518% உயர்வு: மக்களைச் சுரண்டுவதற்கும் எல்லை இல்லையா?
தமிழ்நாடு முழுவதும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்ததை விட பல மடங்கு அதிகமாக சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களைச் சுரண்டும் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்துவரி உயர்த்த வேண்டும் என்று விதி இருந்தாலும், 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்த ஆணையிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் சொத்துவரியை விருப்பம் போல உயர்த்தியுள்ளன. சென்னையின் சில பகுதிகளில் சொத்து வரி 518 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில் 958 சதுர அடி பரப்புள்ள தனி வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 390 ரூபாயிலிருந்து ரூ.2410 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 1100 ரூபாயிலிருந்து ரூ.3370 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 206% உயர்வாகும்.
ஆலந்தூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான சொத்துவரி 256 ரூபாயிலிருந்து ரூ.1480 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 478% உயர்வாகும். சில இடங்களில் இதைவிட அதிகமாக சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வீடுகளுக்கான சொத்துவரியை ஒரே நேரத்தில் 518 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவது எந்த அடிப்படையில் நியாயம் என்பது தெரியவில்லை. எந்த அளவீடுகளின் அடிப்படையில் சொத்துவரியை சென்னை மாநகராட்சி இந்த அளவு உயர்த்தியது என்பதும் தெரியவில்லை.
அதேநேரத்தில் சிலருக்கு மட்டும் மிகக்குறைந்த அளவிலேயே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னைக் கோடம்பாக்கத்தில் 394 சதுர அடி பரப்பளவுள்ள தனி வீட்டுக்கு இதுவரை சொத்துவரியாக ஆண்டுக்கு ரூ.1802 வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது இது ரூ.2020 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் 12% உயர்வு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பல குடியிருப்புகளுக்கு குறைந்தபட்சமாக 10% வரையிலும், வணிக நிறுவனங்களுக்கு 40% வரையிலும் மட்டுமே சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் இவர்களுக்கு வரி குறைவாக உயர்த்தப்பட்டது என்பது இரகசியமாகவே உள்ளது. இவற்றை யார், எந்த அடிப்படையில் தீர்மானித்தனர் என்பது தெரியவில்லை.
சொத்துவரி தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான சொத்துவரி 100% உயர்த்தப்படும் என்று கடந்த ஜூலை 23&ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பின்தேதியிட்டு இந்த வரி வசூலிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால், பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து சொந்தப் பயன்பாட்டுக்கான வீடுகளுக்கான சொத்து வரி 50% வரை மட்டுமே உயர்த்தப்படும் என்றும், பின்தேதியிட்டு ஏப்ரல் மாதத்திலிருந்து வசூலிக்கப்படாது என்றும், அக்டோபர் மாதம் முதல் தான் புதிய வரி வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால், தமிழக அரசின் அரசாணையை தமிழக அரசே மதிக்கவில்லை. அதிகபட்ச வரி உயர்வை விட 10 மடங்குக்கும் கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் மாதம் முதல் பின்தேதியிட்டு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது. நகர்ப்புற உள்ளாட்சிகளின் செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், அதை சமாளிக்க சொத்துவரியை ஓரளவு உயர்த்த வேண்டியது அவசியம் தான். ஆனால், அது மக்களைப் பாதிக்காவாறு இருக்க வேண்டும். மக்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் விருப்பம் போல சொத்து வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமானதாகும். மக்களை சுரண்டவும், கொள்ளை அடிக்கவும் ஓர் எல்லை உண்டு என்பதை தமிழக பினாமி ஆட்சியாளர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
வீடுகளுக்கான சொத்து வரி 50 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்த தமிழக அரசு, அதை விட 10 மடங்குக்கும் மேலாக சொத்துவரியை உயர்த்தி இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதை உணர்ந்து சொத்துவரி உயர்வை 50% என்ற அளவுக்கு அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.
அதுமட்டுமின்றி, சொத்துவரியை உயர்த்தும் அரசின் முடிவை ஏதேனும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தால் அவர்களை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பை மிகக் கடுமையாக கையாள வேண்டும். இதற்கு காரணமான அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டிக்க வேண்டும்...
Subscribe to:
Posts (Atom)

















