12/05/2017

ஆட்டத்தில் ஐடி? விப்ரோ, இன்போசிஸ் வரிசையில் டெக் மஹிந்திரா.. 1500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு...


விப்ரோ, காக்னிசான்ட், இன்போசிஸ் உள்ளிட்ட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. அந்தப் பட்டியலில் டெக் மஹிந்திரா நிறுவனமும் இணைந்துள்ளது.

அமெரிக்காவின் நிலையற்ற பொருளாதார கொள்கைகளால் அந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்தியர்களும் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அமெரிக்க நிழலில் ஓய்வெடுக்கும் இந்திய தலைமுறையை உருவாக்கிவிட்டது அந்த நாடு.
விசா கட்டுப்பாடு , ஐடி நிறுவனங்களின் எதிர்பாராத வீழ்ச்சியினாலும் ஐடி மற்றும் தொழில்தொடர்பு நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்னும் டெர்மினேட் நடவடிக்கையில் இறங்கி ஊழியர்களின் அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டிவருகின்றன. இதனால் என்ன செய்வதென்ற குழப்பத்தில் தவிக்கிறார்கள் ஐடி நிறுவன வாசிகள்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்தப் பதவிக்கு வந்த உடன் முதல்வேலையாக செய்தது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கடிவாளம் போட்டதுதான். அவுட்சோர்ஸிங் வேலைக்கு கட்டுப்பாடுகள் அதிகம் விதித்து இன்போசிஸ் நிறுவனத்தையே மிரள வைத்தார்.

அந்த வரிசையில் விப்ரோ,காக்னிசான்ட், இன்போசிஸ் நிறுவனங்கள் பல ஆயிரம்பேரை வீட்டுக்கு அனுப்பி உள்ளன. அதே போல டெக் மஹிந்திரா சாப்ட்வேர் நிறுவனமும் 1500 பேரை வேலையைவிட்டு நீக்க முடிவெடுத்துள்ளது.

கேப்ஜெமினி நிறுவனம் புராஜெக்ட் மேனேஜர், சீனியர் தொழில்நுட்ப அதிகாரிகள், ஊழியர்கள் என 9000 ஊழியர்களை வெளியேற்றுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் தனது மும்பை அலுவலகத்தில் இருந்து 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் குரூப் புராஜெக்ட் மேனேஜர், சீனியர் ஆர்கிடெக்ட் என குரூப் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதிகளில் இருக்கும் 1000 பேரை நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்நிறுவனம் 500 ஊழியர்களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மூன்றாவது மென்பொருள் ஏற்றுமதியாளரான விப்ரோ நிறுவனமும் பிராஜெக்ட் லீடர் , மேனேஜர் பதவிகளில் இருப்பவர்களை நீக்க முதல்கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. டாடா தொழில்தொடர்பு நிறுவனம் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 8000 ஊழியர்களை கொண்ட ஏர்செல் நிறுவனம் , கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.லீ ஈகோ என்ற சீனா நிறுவனம் 85% இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.ஸ்நாப்டீல் நிறுவனம் 30% ஊழியர்கள் அதாவது சுமார் 1000 ஊழியர்களை கடந்த பிப்ரவரி மாதம் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து ஐடி நிறுவனத் தலைவர்கள், சிஇஓ-க்கள் தரப்பில், இந்த மாதிரியான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறையில் நிகழ்வதுதான். சரியான ஆட்களைத் தேர்வுசெய்ய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஒன்றுதான். என்று சப்பைக்கட்டு காட்டுகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.