02/06/2017

உலக நாடுகளின் முக்கிய கவலைகள்...


கருத்துக்கணிப்பு முடிவுகள்...

வேலை இல்லா திண்டாட்டம், வறுமை மற்றும் சமூக அநீதி ஆகியவைதான் உலக நாடுகளின் இன்றைய முக்கிய கவலைகளாக உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள 24 நாடுகளில், 18,676 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தவர்களில் பெரும் பாலானவர்கள், தங்களது நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று தாங்கள் கருதுவதாகவே கூறியுள்ளனர்.

மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே தங்களது நாடு சென்று கொண்டிருக்கும் பாதை குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில், ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளைக் காட்டிலும் வேலை இல்லா திண்டாட்டம்தான் மிகப்பெரிய கவலையாக உள்ளதும், பிரேசில் மற்றும் கனடாவை தவிர்த்து அனைத்து நாடுகளிலும் சுகாதாரம் முக்கிய பிரச்சனையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

2010லிருந்தே உலக நாடுகளின் கவலைகள் மாறவில்லை என்று கூறுகிறார் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'இப்ஸாஸ்'இன் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஜான் ரைட்.

முதலில் வேலை இன்மையும், வேலைகளும் தான் உலக நாடுகளின் கவலை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன என்ற போதிலும், எங்கெங்கும் காணப்படுகிற உண்மையான பிரச்சனை வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையாகத் தான் உள்ளது என்று கூறும் அவர், இவைதான் 23 நாடுகளின் நான்கு முக்கிய கவலைகளாக உள்ளன என்று கூறுகிறார்.

இரண்டாவதாக வெளிப்பட்ட விடயம், ஐரோப்பா எவ்வாறு மோசமான நிலையில் விலகி நிற்கிறது என்பது தான். ஜெர்மனியை தவிர பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அத்தகையை ஆபத்தான சூழ்நிலைகளில்தான் இருப்பதாகவும், அதனை நோக்கி தான் சென்று கொண்டிருப்பதாகவும் அங்குள்ள மக்கள் கருதுகின்றனர்.

இதற்கு மாறாக சீனா, சவூதி அரேபியா, பிரேசில், இந்தோனேஷியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மையானோர் தங்களது நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே நம்புகின்றனர்.

இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் எதிர்மறையான எண்ணங்களையே கொண்டுள்ளனர்.

நான்கு முக்கிய கவலைகளில் ஒன்றாக வேலையின்மையை குறிப்பிடாத இரண்டே நாடுகள் பிரேசிலும், இந்தியாவும் மட்டும்தான். அதே சமயம் நான்கு கவலைகளில் ஒன்றாக வறுமையை குறிப்பிடாத ஒரே நாடு அமெரிக்காதான்.

பெல்ஜியம், கனடா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரி விதிப்புகள்தான் மிகப்பெரிய கவலையாக உள்ளது அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் கல்விதான் முதல் கவலைக்குரிய அம்சமாக உள்ளது.

மேலும் இந்தியா மற்றும் துருக்கி மக்களின் மனதில் தீவிரவாதமும் கவலைக்குரிய அம்சமாக உள்ள நிலையில், பிரிட்டனின் நான்கு முக்கிய கவலைகளில் ஒன்றாக பிழைப்புக்காக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்துவது இடம் பெற்றுள்ளது.

உங்களிடம் சமூக சமத்துவமின்மையும்,10 பேரில் ஒருவருக்குத்தான் வேலை கொடுக்கக்கூடிய நிலைமையில் அதிக அளவிலான வேலை தேவைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில், நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுமானால், அந்த நாடுகளில் மிகப்பெரிய கலகம் ஏற்படுவதை அந்த நாட்டு அரசியல்வாதிகள் காண்பது நிச்சயம் என்று கூறுகிறார் ரைட்.

வறுமை மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு இடையேயும் அதிபர் ஹோஸ்னி முபாரக், 30 ஆண்டு காலம் பதவியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த எகிப்து, அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் அல்ஜீரியா மற்றும் துனிஷியா ஆகிய நாடுகள் இந்த கருத்துக் கணிப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஹங்கேரி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, போலந்து, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், சுவீடன், துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.