23/06/2017

அணு உலை போராட்டமும், கள்ள நிதி குற்றச்சாட்டும்...


அரசின் எந்த ஒரு கொள்கை முடிவுகளையும்  நியாயமான காரணங்களை முன்வைத்து எதிர்த்தாலும், அதிகார வர்க்கத்தின் எந்த ஒரு குறையை  சுட்டிக்காட்டினாலும் சுட்டிக்காண்பிக்கும் நபர்களின் யோக்கியதை, அருகதை என்னவென்று இன்ஸ்டன்ட் ஆக, சுரண்டி பார்ப்பது இயல்பு.  அவ்வாறு பார்க்கும்போது குறை கூறியவர் தகுதியற்றவர் என்றால் அடுத்த வினாடியே  அதை அலட்சியப்படுத்தி செல்வதும் இயல்பு.

கூடங்குளம் அணு உலை போராட்டத்தை மிக முக்கிய  தளத்திற்கு எடுத்து சென்ற S P Udayakumaran  குழுவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தொடக்கம் முதலே வைக்கப்பட்டன. காங்கிரஸ் அரசாங்கத்தில் தொடங்கி பாஜக அரசாங்கம் வந்த பின்னரும் அதே குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

அதே சமயம்  அணு சக்தி எதிர்ப்பில் உதயகுமரன் குழுவினரும்  அதே உறுதியோடு நிற்கிறார்கள். போராட்ட குழுவினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது எழுந்தாலும்கூட பொது கொள்கையில் அவர்கள் ஒத்த கருத்தும் செயல்பாடும் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

இன்று வரை உதயகுமாரனையோ, அவரது குழுவினரையோ  அவ்வளவு எளிதாக  அலட்சியப்படுத்திவிட்டு செல்ல முடியவில்லை. ஆட்சியாளர்களால் கூட அவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை முன்வைக்க முடியவில்லை.

இத்தகைய நிலையில் ஊடகங்கள் என்பவை உண்மை  நிலை என்ன என்பதை வெளிக்கொண்டுவர எண்ணினால் அது  போற்றுதலுக்கு உரியது.

அரசாங்கமும், அரசாங்கத்தின் ஆதரவாளர்களும்  உதயகுமாரனுக்கு எதிராக முன்வைத்த ஒரு குற்றச்சாட்டின் உறுதி தன்மையை ஆவணப்படுத்த ஸ்டிங் ஆபரேஷன் நடத்தப்படுகிறது என்றால், கூடங்குளம் அணு உலை மற்றும்  அணு சக்திக்கு எதிராக உதயகுமாரன் மற்றும் குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி உண்மை நிலையை கொண்டு வந்தால் அது ஒரு நியாயமான ஊடகமாக மதிக்கப்படும்.

இந்த சர்ச்சை மட்டுமல்ல எல்லா சர்ச்சைகளுக்கு இது பொருந்தும் என்றாலும் கூட அணு உலை என்கிற மிகப்பெரிய எளிதானவர்க்கு புரிந்திடாத ஒரு சர்ச்சை தொடர்பாக இதை செய்யலாம்.

கூடங்குளம் அணு உலை போராட்டம் உச்ச கட்டத்தை தொட்ட  காலகட்டத்தில்  புதிய தலைமுறை தொலைக்காட்சி இரண்டு தரப்பு செய்திகளையும் வெளியிட்டது. உதயகுமாரன் தரப்பு மட்டுமல்ல, அணுஉலை நிர்வாகம் தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன.

கல்பாக்கம் அணு உலைக்கு நேரில் சென்று, அணு உலை பாதுகாப்பானது, மீன்களுக்கு எதிரானது அல்ல என்ற அவர்கள் தரப்பு வாதத்தையும், மும்பை சென்று அணு உலை கண்காட்சி ஒன்றை செய்தியாக்கி வணிகம் தரப்பு நிலைப்பாட்டையும் முன்வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி அன்று, இந்த விவகாரத்தை சமூக, அறிவியல், வணிகம், பாதுகாப்பு, நாட்டு நலன் என்ற அனைத்து கோணங்களிலும் அணுகியே செய்திகளை வெளியிட்டது.

அதே சமயம், கூடங்குளம் மற்றும் அதை சுற்றி இருந்த மக்களின் குறிப்பாக பெண்கள், சிறுவர், சிறுமிகள் ஆகியோர் அணு உலை தொடர்பான கேள்விகளை முவைத்தது மட்டுமல்லாமல், அதற்காக முன்னின்று தொடர்ந்து போராடியதை களத்தில்  பல நாட்கள் இருந்து பார்த்த வகையில் அங்கே பெண்களே அந்த போராட்டத்தின் நாயகிகளாக இருந்தனர்.

தொடர் போராட்டம் எப்படி என்றால், மீனவர்கள் அதிகாலை கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்துவிட்டு மதியம் அதை விற்று  ஒரு பத்து சதவீத பணத்தை  போராட்டத்திற்கு செலவிற்கு  கொடுத்து விடுவார்கள்.

அந்த ஊரில் ஐந்து கடைகள் இருக்கிறது என்றால், காலை முதல் மதியம் வரை இரண்டு கடைகள் திறந்து இருக்கும், திறக்காத மூன்று கடைக்காரர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். மதியத்திற்கு மேல் இவர்கள் சென்று கடை திறப்பார்கள், காலை கடை திறந்தவர்கள் மதியம் போராட்டத்திற்கு வந்து விடுவார்கள்.

கூடங்குளத்தில் மாரியாத்தா கோவில் எதுவும் கடலோரத்தில் இல்லை, சர்ச் ஒன்றுதான் உள்ளது. அந்த சர்ச்சின் போதகர்கள் அப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு இடம் கொடுத்து உதவினார்கள். மாரியாத்தா கோவில் இருந்து இருந்தால் அந்த கோவில் மைதானம் கூட போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

உதய குமாரனுக்கு கூடங்குளம் சொந்த ஊர் அல்ல, சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல்லையோ, நாகர்கோவிலோதான் அவரது சொந்த ஊர்.

அந்த போராட்டத்தின் மிக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான  Mugilan Swamiyathal கூடங்குளத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் ஈரோட்டை சேர்ந்தவர்.

இப்படி அணு சக்திக்கு எதிரான பல்வேறு செயற்பாட்டாளர்கள் அந்த ஊர் மக்களின் போராட்டத்தை வழி நடத்தினார்கள் என்பதை நேரில் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டின் பிரச்னைகளை பற்றிய  விழிப்புணர்வு பெற்ற கிராமங்களாகவே அவற்றை  உணர முடிந்தது.

அணு உலைகளை வழங்கும் நாடு ரஷ்யா; உதய குமாரன் சிறிது காலம் அமெரிக்காவில் இருந்தார். எனவே அமெரிக்காவின் மூளைப்படியே அவர் ரஷ்யாவை எதிர்க்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

ஆனால், அணு சக்தி பன்னாட்டு வணிகம் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும், அணு சக்தி வணிகத்தில் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒருவர் உலை விற்றால், இன்னொருவர் எரிபொருள் விற்பார். ஆக, இவர்களுக்கு இடையே போட்டி எல்லாம் கிடையாது ஒரு பெருத்த  வணிகப் புரிதல் இருக்கும்.

எனவே, பணம் வாங்கிய வெளிநாட்டு ஏஜென்ட், சர்ச்சும் , கிறிஸ்தவர்களும் தான் பின்னணி என்பதெல்லாம் வலுவான குற்றச்சாட்டுகள் அல்ல. கள நிலவரம் பற்றி தெரியாதவர் முன்வைக்கும் வாதங்கள்.

அங்கே அனைத்து சாதியினரும் மதத்தினரும் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் இன்றுவரை அணு உலை நிர்வாகமோ, அரசோ பதில் அளிக்கவே முடியவில்லை, அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியவே இல்லை. இதுவே எதார்த்தம்.

யாரிடமோ, உள் நோக்கத்தோடு  பணம் வாங்கிக்கொண்டுதான் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்பது உண்மையானால் அதை நிரூபிக்க வேண்டியது மிக முக்கிய கடமை.

மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த  முடியாத நிலையை அந்த மக்களின் வெற்றியாயாக  நான் பார்க்கவில்லை, ஆண்ட, ஆளும்  அரசுகளின் தோல்வியாகவே  நான் பார்க்கிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.