25/06/2017

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்?


‘கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிரிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு அதில் இல்லுமினாட்டி கூறுகள் மநிறைந்து கிடக்கின்றன.

‘இல்லுமினாட்டி’ பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். “உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் பின்னணியில் இருந்து மொத்த உலகையும் ஆட்டுவிக்கிறார்கள். அந்த 13 குடும்பங்களின் கமுக்கக் (இரகசிய) குழுவுக்குப் பெயர்தான் இல்லுமினாட்டி (Illuminati). அரசியல், அறிவியல், கலை, இறையியல் (ஆன்மிகம்) எனப் பல துறைகளிலும் உள்ள பெரும்புள்ளிகள் இந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பிரீமேசன் (freemason) எனப்படும் இந்த உறுப்பினர்கள் மூலம்தான் உலகெங்கும் கிளை பரப்பி இல்லுமினாட்டிகள் ஆண்டு வருகிறார்கள். உலகின் முதன்மையான அரசியல் முடிவுகள் அனைத்தும் இவர்கள் சொல்படிதான் நடக்கின்றன” எனவெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்கள்.

இங்குள்ள சிலர், ரூபாய்த்தாள்கள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது முதல் தங்கள் வீட்டுக்குப் பால் வராதது வரை எதற்கெடுத்தாலும் இல்லுமினாட்டி மீதே பழி சொல்லித் திரிவதால் இது ஏதோ வேலையற்றவர்களின் கட்டுக்கதை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இல்லுமினாட்டிகள் பற்றி வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்ற பலர் இல்லுமினாட்டிகள் இருப்பதாக நம்புகிறார்கள். இணையத்தின் அறிவுக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இல்லுமினாட்டி பற்றிக் கட்டுரைகள் உள்ளன.

இவற்றையெல்லாம் நம்புவதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், இல்லுமினாட்டிகள் மீதான குற்றச்சாட்டுகள் அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பார்வையாளர்கள் உணராத வகையில் சில குறியீடுகளை மறைமுகமாகக் காட்டி பொதுமக்களின் ஆழ்மனதில் சில தவறான எண்ணங்களைப் பதிய வைப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்கான விழிய (video), ஒளிப்படச் சான்றுகள் உள்ளன. இது மாயக்கலையில் (Magic) பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைதான் என்பதால் நம்பத்தகாததும் இல்லை! இப்படி ஒரு குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிக்கிய டிஸ்னி நிறுவனம் அதற்காக விளக்கம் தர வேண்டிய அளவுக்குப் போனது சிக்கல்.

எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால், இல்லுமினாட்டி தொடர்பான குற்றச்சாட்டுகளை வெறும் புரளி என அவ்வளவு எளிதில் நாம் ஒதுக்கி விட முடியாது என்கிற கருத்தை முன்வைக்கத்தான். இப்பொழுது பிக் பாஸ் (Bigg Boss) தொடர்பான விதயத்துக்குச் செல்வோம்.


கமல் காட்டும் முத்திரை..

சர்ச்சில் முதலான அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் (பெரும்பாலானோர்), மைக்கேல் ஜாக்சன் போன்ற மேலை நாட்டுக் கலைஞர்கள் என வெளிநாட்டினர் மீது மட்டுமே இருந்து வந்த இல்லுமினாட்டி குற்றச்சாட்டு, அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் மீதும் சுமத்தப்பட்டு வருகிறது. ரஜினி, தனுஷ், அநிருத், ஏமி ஜாக்சன் என அந்தப் பட்டியல் நீள்கிறது. எந்த அடிப்படையில் இவர்களை இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் எனப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு ஒளிப்படத்தில் (photo) ஏதேனும் ஒரு இல்லுமினாட்டி முத்திரையைக் காட்டியிருக்கிறார்கள் என்பதால்தான். அதே போன்ற ஒரு முத்திரையை பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.

விளம்பரத்தில் கமல் அவர்கள் ஆள்காட்டி விரலைக் கட்டை விரலோடு சேர்த்து வட்ட வடிவமாகப் பிடித்துத் தன் கண் மீது வைத்துக் காட்டுவார் (பார்க்க: மேலே உள்ள படம்). இல்லுமினாட்டிகளின் முத்திரைகளிலேயே உச்சக்கட்டப் புகழ் வாய்ந்தது இதுதான்! இது தவிர இன்னும் சில இல்லுமினாட்டி முத்திரைகளையும் காட்டியுள்ளார். இப்படி முத்திரை காட்டியதால்தான் மேற்சொன்ன கலைஞர்கள், அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் முதலான அனைவர் மீதும் இல்லுமினாட்டி என்கிற முத்திரை விழுந்தது. அதையேதான் இந்த விளம்பரத்தில் கமலும் செய்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சின்னம்..

பிக் பாஸ் நிகழ்ச்சி விளம்பரத்தில் ஒரு கண்ணின் படம் காட்டப்படும். இது இல்லுமினாட்டிகளின் சின்னம் என்பது உலகறிந்த கதை. “அமெரிக்காதான் இல்லுமினாட்டிகளின் தலைநகரம். அமெரிக்காவுக்கு நாணயத்தை அச்சிட்டுக் கொடுப்பதே அவர்கள்தாம். அதனால்தான் இல்லுமினாட்டிகளின் சின்னமான ஒற்றைக் கண் படம் அமெரிக்க டாலரின் பின்னால் இடம் பெற்றுள்ளது” என்கிறார்கள் இல்லுமினாட்டிகள் இருக்கிறார்கள் என்பதை நம்புபவர்கள். உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க, ஏன் இந்த ஒற்றைக் கண் படத்தை இந்த நிகழ்ச்சியின் சின்னமாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது அடுத்த கேள்வி.

உடனே சிலர், “நிகழ்ச்சியின் முழக்கமே ‘நான் உங்களைக் கண்காணிக்கிறேன்’ (I will be watching you) என்பதுதானே? அதற்குக் கண் படத்தை வைக்காமல் வேறு எதை வைப்பார்கள்?” என்று கேட்கலாம். அடுத்த செய்தியே அதுதான். அதாவது, இந்த நிகழ்ச்சியின் விளம்பரச் சொலவம் (caption).


பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பர வாசகம்..

“14 பிரபலங்கள்! 30 காமிராக்கள்! 100 நாட்கள்! ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது” என்று நிகழ்ச்சி பற்றி விளக்கும் கமல், கடைசியாக “ஐ வில் பீ வாட்ச்சிங் யூ” என்கிறார்.

அமெரிக்க டாலரின் பின்னால் இருக்கும் அந்த ஒற்றைக் கண் படத்துக்குக் “கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்பது பொதுவாகச் சொல்லப்படும் பொருள். ஆனால், “அது கடவுளின் கண் இல்லை. சாத்தானின் கண். சாத்தானை வழிபடுபவர்களான இல்லுமினாட்டிகள் நம் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள்” என்பது இல்லுமினாட்டி கோட்பாட்டை நம்புபவர்களின் கூற்று.

விளம்பரத்தில் இதையேதான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறார் கமல். கமலகாசன் இல்லுமினாட்டி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்கிற கோணத்தில் பார்த்தால், அவர் சொல்வதன் பொருள் என்ன?... “இல்லுமினாட்டிகளாகிய நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்பதுதானே? ஆக, இந்த நிகழ்ச்சியின் விளம்பரச் சொலவம் கூட அப்படிக்கு அப்படியே இல்லுமினாட்டிகளுடைய சின்னத்தின் எழுத்து வடிவம்தான்!

நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் கூடவா?

வரும் 25.06.2017 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நாளின் எண்களைத் தனித் தனியே பிரித்துக் கூட்டிப் பார்த்தால் [2+5+0+6+2+0+1+7] கூட்டுத்தொகை 23 என வருகிறது. இல்லுமினாட்டிகளால் பயன்படுத்தப்படும் சாத்தானின் எண்கள் எனக் குறிப்பிடப்படுபவையான 666, 13, 6 ஆகியவற்றின் வரிசையில் இன்னொரு முதன்மையான எண் 23.

எனக்குத் தெரிந்த வரை சொன்னேன். இன்னும் இதுபோல் எத்தனை இல்லுமினாட்டி கூறுகள் இந்நிகழ்ச்சியின் விளம்பரத்திலும் இது தொடர்பான இன்ன பிறவற்றிலும் மறைந்திருக்கின்றனவோ தெரியவில்லை.

கமல்ஹாசன் நடத்தும் இந்த பிக் பாஸ் நிகழ்சியில் மட்டுமில்லை, இதற்கு முன்பு நடத்தப்பட்ட இந்தி பிக் பாஸ், கன்னட பிக் பாஸ் ஆகியவற்றிலும் மேற்படி குறியீடுகள் அனைத்தும் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளிலும் ஒற்றைக் கண் படம்தான் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களும் கண் மீது விரல் வைத்து முத்திரை பிடிக்கிறார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நிகழ்ச்சிகளும் தமிழ் பிக் பாஸ் போலவே இல்லுமினாட்டிகளோடு தொடர்புடைய எண்கள் வரும் நாளில்தான் தொடங்கப்பட்டிருக்கின்றன. (இந்தி பிக் பாஸ் தொடங்கிய நாள் 3.11.2006. கூட்டுத்தொகை 13. அதாவது 13 அரசக் குடும்பங்களை நினைவூட்டும் எண். அல்லது, சாத்தானின் எண். கன்னட பிக் பாஸ் தொடங்கப்பட்ட நாள் 24.3.2013. கூட்டுத்தொகை 15; 1+5 = 6. சாத்தான் எண்).

ஆக, இந்த நிகழ்ச்சி முதன் முதலில் ஒளிபரப்பாகத் தொடங்கிய பொழுது என்ன மாதிரியான குறியீடுகள் பயன்படுத்தப்பட்டனவோ அவையே அந்த நிகழ்ச்சியின் பிறமொழி ஒளிபரப்புகளிலும் தொடர்கின்றன என்பதாக மிக எளிதான ஒரு விளக்கத்தை இதற்கு நாம் கற்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு மொழியிலும் நிகழ்ச்சி தொடங்கும் நாள் கூடக் குறிப்பிட்ட எண்களில் மட்டுமே அமையுமாறு பார்த்துக் கொள்வது அவ்வளவு தற்செயலானதா என்ன?


ஆனால் அதே நேரம், இவற்றையெல்லாம் நான் எழுதுவதற்குக் காரணம் கமல் அவர்கள் மீதோ, விஜய் தொலைக்காட்சி மீதோ குற்றம் சாட்டுவதற்காக இல்லை. இப்பொழுது பிரச்சினை கமலஹாசன் பிரீமேசனா இல்லையா, இந்த நிகழ்ச்சி இல்லுமினாட்டிகளால் நடத்தப்படுவதா இல்லையா என்பவை அல்ல. இருக்கிறதா இல்லையா எனத் தெரியாத, ஆனால் உலகெங்கும் மிகுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிற ஓர் இயக்கத்தோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் குறியீடுகளை இந்த அளவுக்கு வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சியில் காட்டுவது சரியா என்பதுதான்.

இப்படி ஓர் இயக்கம் இல்லை என்பதாக வைத்துக் கொண்டால், இல்லாத ஓர் இயக்கத்தை நினைவூட்டும் விதமான இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவதும் நிகழ்ச்சி ஒளிபரப்பு நாள் கூடக் குறிப்பிட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக இருக்கும்படி அமைத்துக் கொள்வதும் அந்த உலகளாவிய பெரும்புரளிக்கு வலுச் சேர்ப்பதாக அமைகிறது. அந்த வகையில் இது மிகவும் தவறு.

ஒருவேளை, இல்லுமினாட்டி இருப்பது உண்மைதான் என்றால், நடந்து முடிந்த பல்வேறு பேரழிவுகளுக்கும் நடந்து கொண்டிருக்கும் அரசியல் சீர்கேடுகளுக்கும் காரணமானவர்களாகக் குற்றம் சாட்டப்படும் அவ்வளவு கொடுமையான ஓர் இயக்கத்தைத் தமிழ்நாட்டில் பரப்பும் விதமாக அவர்கள் குறியீடுகளை இந்நிகழ்ச்சியில் காட்டியிருப்பது பொறுத்துக் கொள்ள முடியாத குற்றம். அந்த வகையிலும் இது மிகத் தவறானது!
ஆக, இல்லுமினாட்டி என்கிற இயக்கம் இருக்கிறதோ இல்லையோ, அதை நினைவூட்டும் விதமான குறியீடுகளை இந்நிகழ்ச்சியில் பயன்படுத்தியிருப்பது கண்டிப்பாகத் தவறானது. கமல்ஹாசன் போன்ற பொறுப்புள்ள கலைஞர் ஒருவர் இப்படிப்பட்ட முயற்சிகளுக்குத் துணை போவது நல்லதில்லை. இது வருங்காலத் தலைமுறையினருக்கு – குறிப்பாக, கலைஞர்களுக்கு - தவறான வழிகாட்டலாக அமையும்.

எனவே, விஜய் தொலைக்காட்சி உடனடியாக இந்நிகழ்ச்சியிலுள்ள இல்லுமினாட்டியை நினைவூட்டும் கூறுகளை நீக்க வேண்டும். கமல்ஹாசன் அவர்கள் இதை வலியுறுத்த வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.