கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். கடந்த ஜூன் 30 முதல் இந்த ஊர் மக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருகிற ‘எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனத்தையும்” (Oil and Natural Gas Corporation – ONGC) அரசையும் எதிர்த்துப் போராடிக் கொண்டுள்ள செய்தி தற்போது தமிழக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
முப்பதாண்டு காலமாகக் காவிரியின் கடைமடைப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து எரிபொருளை உறிஞ்சி எடுத்து, விவசாய நிலங்களுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வதால் தம் நில வளம் மட்டுமின்றி, குடிநீர் உட்பட சுற்றுச் சூழல் பெரிய அளவில் மாசுபடுவதால் ONGC யின் செயல்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இன்று எழுந்துள்ளது. எரிபொருள் கசிவு ஒன்றை ஒட்டி நடந்த பிரச்சினையில் இன்று பத்து பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு மக்கள் தொடர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இது குறித்த உண்மைகளை ஆராய்ந்து மக்கள் முன் வைக்க ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை கீழே உள்ள இணைய முகவரியில் காண்க...
http://www.peoplesrights.in/tamil/?p=962
ஜூன் 30 அன்று நெல் வயலொன்றின் வழியே சென்று கொண்டுள்ள எரிவாயுக் குழாய் வெடித்த இடத்திற்கு நாங்கள் சென்று பார்க்க முனைந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் எங்களை அருகே நெருங்க விடாமல் தடுத்தனர். நாட்கள் 15 ஆகியும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் இன்னும் வீசிக் கொண்டுள்ளது. அருகே நெருங்க அனுமதிக்காவிட்டாலும் சுமார் 20 அடி தொலைவில் நின்று குழாய் வெடித்த இடத்தைப் பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம்...

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.