09/11/2017

வள்ளுவனின் கடவுளைத் தொலைத்த தமிழர்கள்...


தலைப்பு அதிர்ச்சி தருகின்றதா? படித்து முடித்ததும் பதிவும் ஆதிர்ச்சி தரும், வள்ளுவர் அப்படி எந்த கடவுளை தன்னுடைய குறளில் குறிப்பிட்டுள்ளார்? எதை நாம் தொலைத்தோம்? அந்த கடவுளுக்கு அப்படி என்ன சிறப்பு?

நாம் பிறரை வையும் போது "மூதேவி" என்ற வார்த்தையை அடிக்கடி நாம் பயன்படுத்துவோம், அந்த மூதேவி யார் என்று ஒரு முறையேனும் நாம் சிந்தித்திருப்போமா? இல்லை. சரி இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள்..

மூதேவி என்பவள் திருமகளின் (லக்ஷ்மி) அக்காள், அதாவது லக்ஷ்மிக்கு மூத்தவள் என்பதால் "மூத்ததேவி", அதை தான் நாம் சுருக்கமாக "மூதேவி" என்றழைக்கிறோம்.

வள்ளுவர் தன்னுடைய அறத்துப்பாலில் 167 வது குறளில் இந்த மூதவியை "தவ்வை" என்ற பெயரில் முதன் முதலாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (குறள்:167)

விளக்கம்: பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய் விடுவாள்.

தவ்வை என்பவள் யார் என புரிந்தது, அவள் எப்படி இருப்பாள் என்று யோசிக்கிறீர்களா?

மேலே உள்ள படத்தை பாருங்கள் பெரிய வயிறுடன் காக்கைக் கொடியை கையில் ஏந்தி தன்னுடைய இடது பக்கம் மகள் அக்னியுடனும், வலது பக்கம் தன்னுடைய மகன் நந்தியுடனும் பல கோயில்களில் காணக் கிடைப்பார், பல கல்வெட்டுகள் இவரை " ஜேஷ்டை" என்ற பெயரிலும் அறிமுகப்படுத்துகின்றது.

சங்க கால தமிழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் என அனைத்து மக்களும் கொண்டாடிய தெய்வம் இவள்,

கடைசியாக சோழர் காலம் வரை சிறப்புற்று இருந்த இந்த தெய்வத்தை, பிற்காலத்தில் நாம் தொலைத்து விட்டோம்.

ஆனால் இன்றும் பழங்கால கோயில்களில் பத்தோடு பதினொன்றாக தன்னுடைய மகன் மகளுடன் ஏதோ ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாமல் வருவோருக்கு அருள் புரிந்து கொண்டு தான் இருக்கிறாள்.

ஒருவேளை யார் கண்ணிலாவது பட்டாலும் அங்கே செல்லும் மக்களுக்கு இவள் யார் என்பது தெரியாது, இவளுக்கு இப்படி ஒரு நீண்ட நெடிய வராலாறு இருப்பதும் புரியாது.

பணம் தான் வாழ்கை என்றாகிவிட்ட காலத்தில் தவ்வை நமக்கெதற்கு?

அவளின் தங்கை திருமகளே போதும் என்கிறீரா?

யாரை வேண்டுமானாலும் வணங்குங்கள் ஆனால் இத்தனை அறிவியல் வரலாற்றையும் ஈராயிரம் வருடங்களுக்கு முன் வாழ்க்கை நெறியை நமக்கு கற்பித்த வள்ளுவனும் கூறிய தவ்வையை மறந்து விடாதீர்கள் தமிழர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.