11/11/2017

சிதம்பரத்தில் முதலைகளால் பாதிப்பு: தமிழ்நாடு அரசு உடனே தீர்வுகாண வேண்டும்...


கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் முதலைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வுகாண வேண்டும்.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை, வேளங்குடி, கடவாச்சேரி, பெராம்பட்டு, அகரநல்லூர், பழையநல்லூர், கண்டியாமேடு, பூலாமேடு, காட்டுக்கூடலூர், நந்திமங்கலம், சி.வீரசோழகன், அண்ணாமலை நகர், முத்தையா நகர், கான்சாகிப் வாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள நீர்நிலைகளில் முதலைகள் உள்ளன. கரையோரத்தில் கட்டி வைக்கப்படும் ஆடு, மாடுகளை முதலைகள் கொன்று விடுகின்றன. முதலைகள் கடித்து பலர் உயிரிழந்துள்ளனர், காயமடைந்துள்ளனர்.

சிதம்பரம்  காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகள் வக்காரமாரி ஏரியில் விடப்படுகிறது. இதனால் முதலைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. மழைக்காலத்தில் வக்காரமாரி ஏரியிலிருந்து முதலைகள் வெளியேறி விடுகின்றன.

அண்மையில் பெய்தமழையில், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களில் முதலைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் கொள்ளிடக்கரை மற்றும் நீர் நிலையொட்டிய கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்திலும் முதலை தங்களை தாக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தீர்வு என்ன?

முதலைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலைகளை பிடித்து வக்கராமாரி ஏரியில் விடுவது தீர்வு அல்ல. மாறாக, புதிய முதலைப் பண்ணை அமைக்க வேண்டும்.

நெய்வேலியில் முதலை பண்ணை அமைக்க வனத்துறை சார்பில் 75 லட்சம் ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இத்திட்டம் குறித்து அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ இதுவரை கண்டு கொள்ளவே இல்லை. இனியும் தாமதிக்காமல் முதலை பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

முதலைகள் உள்ள பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வனத்துறை அமைக்க வேண்டும். ஆறுகள், குளங்கள், ஏரிகளில் மக்கள் இறங்க வேண்டிய பகுதிகளில், தண்ணீருக்குள் தடுப்புகள் அமைக்கும் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். முதலைகளால் ஆபத்து உள்ள இடங்களில் மக்கள் பாதுகாப்பாக வாய்க்கால் அல்லது ஆற்றினைக் கடக்க பாலங்கள் அமைக்க வேண்டும்.

முதலைகள் அழியும் வனவிலங்குகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. அதனை கொல்வது குற்றம். அதே அழியும் விலங்கு சிதம்பரம் பகுதியில் அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளது. மக்களை அச்சுறுத்துகிறது. எனவே, இந்த சிக்கலை தீர்ப்பதற்கான எல்லா பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்குதான் உள்ளது.

நெய்வேலியில் முதலை பண்ணை அமைப்பது உள்ளிட்ட - முதலைகளால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான முழுமையான திட்டத்தை வகுத்து, தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.