11/12/2017

வங்கியில் பணம் போட்டவர்கள் இனி ஒரு பைசா கூட திரும்ப பெற முடியாது : மத்திய பாஜக மோடி அரசின் புதிய சட்டத்திற்கு.. பாமக அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு...


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து...

நலிவடையும் வங்கிகளைக் காப்பாற்றுவதற்கான புதிய அமைப்பை உருவாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சட்ட முன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ள சில பிரிவுகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மக்களின் இந்த அச்சத்தைத் தீர்க்க வேண்டிய மத்திய அரசு, மக்களை திருப்திப்படுத்தும் வகையில் விளக்கமளிக்கக் கூட முன்வராதது கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நிதித் தீர்வு மற்றும் வைப்பீடுக்கான காப்பீட்டு சட்ட முன்வரைவு என்ற புதிய மசோதா தான் அனைத்து சர்ச்சைகளுக்கும் காரணம் ஆகும். கொடுத்தக் கடன் திரும்ப வராத சூழலில் வங்கிகள் நலிவடைந்து விட்டால், அவற்றைக் காப்பாற்ற ‘தீர்வு நிறுவனம்’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்துவது தான் இச்சட்டத்தின் நோக்கமாகும். இதில் எந்தத் தவறும் இல்லை.

நலிவடையும் வங்கிகளைக் காப்பாற்ற இந்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுகள் தான் ஆபத்தானவையாக உள்ளன. இப்போதுள்ள நடைமுறைப்படி வங்கிகள் நெருக்கடிக்கு ஆளானால், அந்த வங்கிகளுக்கு அரசே நிதி உதவி செய்து காப்பாற்றும். ஆனால், புதிய சட்டத்தின்படி வங்கிகளுக்கு அரசு நிதியுதவி அளிக்காது. மாறாக, வங்கியில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ள நிதியை பயன்படுத்தி நெருக்கடியை வங்கிகளே சமாளித்துக் கொள்ள வேண்டும். இது மிகத் தவறானது.

புதிய சட்டப்படி மக்களின் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை, குறிப்பிட்ட காலத்திற்கான வைப்பீடாக மாற்றிக் கொள்ளவும், அதற்கு மிகக்குறைந்த வட்டி வழங்கவும் வங்கிகளுக்கு அதிகாரமளிக்கப்படும். ஏற்கனவே உள்ள வைப்பீடுகளின் கால அளவை அதிகரிக்கவும், வட்டி அளவை குறைக்கவும் முடியும். இதனால், குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்ப விழாக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு  வாடிக்கையாளர்கள் செய்துள்ள முதலீடுகளை அவர்களுக்கு தேவையான நேரத்தில் எடுக்க முடியாது. இதனால் வங்கிச் சேமிப்பு, வைப்பீடு ஆகியவற்றின் அடிப்படை நோக்கங்களே சிதைக்கப்பட்டு விடும்.

இதைவிட பெரிய ஆபத்தும் புதிய சட்டத்தில் உள்ளது. 1961-ஆம் ஆண்டின் வைப்பீடு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகச் சட்டத்தின்படி வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைப்பீடு செய்யும் தொகையில் ரூ.1 லட்சம் வரை காப்பீடு செய்யப்படும். அதன்படி ஓர் வங்கி நலிவடைந்து விட்டால் அதில் ஒரு லட்சம் பணம் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திரும்பத்தரப்படும். ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பணம் வைப்பீடு செய்திருந்தவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் பணம் வழங்கப்படும். ஆனால், புதிய சட்டத்தின் 52-ஆவது பிரிவின்படி ரூ.1 லட்சம் வரையிலான காப்பீடு ரத்து செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு பைசா கூட வழங்க முடியாது என்று தீர்வு நிறுவனம் அறிவிக்க முடியும்.

கடந்த காலங்களில் வங்கிகள் நலிவடைந்தால் கூட அது மூடப்படுவதை இந்திய ரிசர்வ் வங்கி அனுமதிக்காது. மாறாக, அவ்வங்கியை பிற வங்கிகளுடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கும். ஆனால், புதிய சட்டத்தின்படி அந்த வாய்ப்புகள் பறிக்கப்படும். நலிவடைந்த வங்கிகள் அவற்றின் முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு மட்டுமே சீரமைக்கப்படும். அதாவது வங்கி நிர்வாகம் செய்யும் தவறுகளால் ஏற்படும் இழப்புகளை வாடிக்கையாளர்கள் தாங்க வேண்டும். வங்கிகளின் தவறுகளுக்காக வாடிக்கையாளர்களை தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல.

புதிய சட்டம் குறித்து மக்களிடையே அச்சம் எழுந்துள்ள நிலையில் அதைப்போக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால், இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் மத்திய நிதி அமைச்சகமும், நிதி அமைச்சரும் மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர்.

வாடிக்கையாளர் நலன் எந்த வகையில் பாதிக்கப்படும் என்ற வினாவுக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. இது ஐயத்தை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இத்தகைய சட்டம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும். சைப்ரஸ் நாட்டில் இதேபோன்ற சட்டம் கொண்டு வரப்பட்டு, அதனடிப்படையில் கடந்த 2013-ஆம் ஆண்டில் சைப்ரஸ் வங்கியில் முதலீடு செய்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் பணம் பறிப்போனது. அதேபோன்ற நிலை இந்தியாவிலும் ஏற்பட்டு விடக்கூடாது. 2008-ஆம் ஆண்டில் உலக முழுவதும் கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போதும் கூட இந்திய வங்கிகள் வலிமையானவையாக திகழ்ந்தன.

ஆனால், பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்கள் திரும்பச் செலுத்தப்படாததாலும், அவை தள்ளுபடி செய்யப்பட்டதாலும் தான் இந்திய வங்கிகள் நலிவடைந்துள்ளன. இத்தகைய சூழலில் நிதித் தீர்வு மற்றும் வைப்பீடு காப்பீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டால் வாடிக்கையாளர்களின் பணம் பறிக்கப்படக்கூடும்.

வங்கிகள் அமைக்கப்பட்டதன் நோக்கமே வாடிக்கையாளர்களின் பணத்தை காப்பதும், வளர்ப்பதும் தான். அதற்கு மாறாக வாடிக்கையாளர்களின் பணத்தைப் பறிக்கும் சட்டங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. எனவே சர்ச்சைக்குரிய நிதித் தீர்வு மற்றும் வைப்பீடு காப்பீட்டு சட்டத்தை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.