29/01/2018

கோவை கோட்டத்தில் சாதாரணமாக மாறிய, 'எக்ஸ்பிரஸ்' பஸ்கள்...


பஸ் கட்டண உயர்வுக்கு பின்னர் அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தில் இயங்கும் எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் என, 1,748 நகர பஸ்கள் சாதாரண கட்டணத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த, 20ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, புறநகர் பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம், 5 ரூபாயில் இருந்து, 6 ரூபாயாகவும், நகர் மற்றும் மாநகர பஸ்களில், 3 ரூபாயில் இருந்து, 5 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வால்வோ பஸ்களில், 1 - 38 நிலை வரை குறைந்தபட்ச கட்டணம், 15லிருந்து, 25 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 100லிருந்து, 150 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.கட்டண உயர்வால் மக்கள் மட்டுமின்றி, கண்டக்டர்களும் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக, நகரங்களில் இயங்கும் எக்ஸ்பிரஸ், தாழ்தள சொகுசு என, பஸ்களின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வகை பஸ்களில், சாதாரண வகை பஸ்களை காட்டிலும் பல மடங்கு அதிகம் என்பதால் பயணிகள் இவற்றில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

பிரச்னையை தவிர்க்க...

சில சமயங்களில் கண்டக்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கும் விதமாகவும், பயணிகள் சிரமத்தை போக்கவும், சொகுசு, எக்ஸ்பிரஸ் போன்ற பஸ்கள் சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டு வருகின்றன.கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மண்டலங்களை உள்ளடக்கிய கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில், 2,320 பஸ்கள் இயங்குகின்றன. தற்போது, கோவை போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை, 649 எல்.எஸ்.எஸ்., நகர பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து எக்ஸ்பிரஸ் பஸ்களும் சாதாரண கட்டண நகர பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், 1,323 நகர பஸ்களில், 224 தாழ்தள சொகுசு பஸ்கள் தவிர மற்ற, 1,099 பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக இயக்கப்படும் என, அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டம் தெரிவித்துள்ளது.

சிரமத்தை குறைக்கும் விதமாக...

போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நகர பஸ்களின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் உள்ளது. கட்டண உயர்வின்படி, சொசுகு பஸ்களில், 12 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் சிரமத்தை குறைக்கும் விதமாக சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை கோட்டத்தில் மட்டும், 1,748 எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் பஸ்கள் சாதாரண பஸ்களாகவும், அனைத்து எக்ஸ்பிரஸ் பஸ்களும் சாதாரண பஸ்களாகவும் மாற்றி இயக்கப்படுகின்றன' என்றார்மீது நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விடுமுறை வழங்காத, 94 வணிக நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்க்கொடி வெளியிட்ட அறிக்கை...

அரசு விடுமுறை நாளான குடியரசு தினத்தன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பது கட்டாயம். விடுமுறை அளிக்காமல் அவர்களை வேலைக்கு அமர்த்தினால், அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம் அல்லது சம்பளத்துடன் வேறோரு நாளில் விடுப்பு வழங்க வேண்டும்.

மேலும், தொழிலாளர்களின் ஒப்புதல் பெற்று சம்மந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்புவது அவசியம். இதன் அடிப்படையில், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என, 163 நிறுவனங்களில், குடியரசு தினத்தன்று தொழிலாளர் உதவி ஆய்வர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 54 கடைகள், 33 ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் என, 94 நிறுவனங்கள்விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்ந்தியிருந்தனர். இந்நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.