02/04/2018

அசோகரும் பௌத்தமும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி - 3...


வெற்றி… மாபெரும் வெற்றி..

இருந்தும் அமைதி கிட்டவில்லை அசோகருக்கு…

“சக்கரவர்த்தி தான்… உலகில் உள்ள அனைத்து வசதியும் உள்ளது தான்… ஆனால் நிம்மதி இல்லையே… கண் மூடினால் சடலங்கள் அல்லவா நினைவிற்கு வருகின்றன.. ஒன்றா இரண்டா… லட்சக்கணக்கான சடலங்கள் அல்லவா தோன்றுகின்றன… இந்தப் பாழாய்ப்போன கலிங்கத்து யுத்தத்தை நடத்தாமலேயே இருந்திருக்கலாமே!” என்று தனது அரண்மனையில் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது புத்தரைப் பற்றிய எண்ணம் வருகின்றது அசோகருக்கு.

“ஆ… புத்தர்! அவரின் கருத்துகள் தான் எத்தனை அழகானவை… ஆழமானவையும் கூட. அவற்றினை நான் ஏன் கவனிக்க மறந்தேன். எல்லா உயிர்களும் சமம், அவை அனைத்திற்கும் அன்பினை நாம் காட்டுவதே இப்பிறவியின் பயன் என்ற அந்தக் கருத்துக்களை நான் எவ்வாறு கேளாது போனேன்.

அன்பினை முற்றிலும் மறந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று விட்டேனே…!
போதும் இந்த வெறி… பணம், பதவி, சுகம் ஆகியவற்றினைத் துறந்த புத்தனின் வழி தான் இனி என் வழி…!

அமைச்சரே… அழையுங்கள் புத்தத் துறவிகளை…
கூடவே எனது அன்புப் புதல்வியையும் புதல்வனையும் சேர்த்தே அழையுங்கள்!

உலகில் அன்புத் திகழ அவர்கள் திக்கெட்டும் புத்தத்தை பரப்பட்டும்!
அசோகன் போர்வெறியன் அல்ல… அவன் மனித நேயத்தினைப் பரப்பியவன் என்றே உலகம் அவனை நினைவில் கொள்ளட்டும்” என்றவாறே அசோகர் புத்த மதத்தினை பரப்ப ஆரம்பிகின்றார்.

புத்தமும் பல்வேறு நாடுகளில் பரப்பப்படுகின்றது.

இந்தக் காலம் கி.மு 1 ஆம் நூற்றாண்டு! (இதை இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவோரும் உளர்).

அந்தக் காலத்தில் கிட்டதட்ட வட மற்றும் மத்திய இந்தியா முழுவதும் அசோகரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தமையால் புத்தம் அங்கே எளிதாக பரவியது. அந்தத் தாக்கம் தமிழகத்திலும் ஏற்ப்பட புத்தம் தமிழகத்திலும் பரவுகின்றது.

ஏற்கனவே மகாவீரரால் உருவாக்கப்பட்ட சமண சமயமும் தமிழகத்தில் அந்தக் காலக் கட்டத்தில் பரவி இருந்தது என்றச் செய்தியையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்…!

சரி அசோகர் புத்த சமயத்தினைப் பரப்பிக் கொண்டு இருக்கட்டும்… நாம் அதற்குள் சற்று சமணம் மற்றும் புத்த சமயங்களைப் பற்றி ஒரு எட்டு சென்றுப் பார்த்து விட்டு வந்து விடலாம்…!

இவ்விரண்டு மதங்களுமே நாத்திக மதங்கள்… அதாவது கடவுள் இல்லை என்று சொல்லுபவை!

கடவுள் இல்லை…!

அனைத்து உயிர்களும் சமம், மனித உயிராய் இருந்தாலும் சரி அது மிருக உயிராய் இருந்தாலும் சரி…!

நீ செய்யும் செயல்களுக்கு ஏற்ப உனக்கு அடுத்த பிறவி ஏற்படும்…!

இவை தான் அந்த இரண்டு சமயங்களின் முக்கியக் கோட்பாடுகள். நிற்க!

இப்பொழுது ஒருக் கேள்வி, ஏன் இந்தச் சமயங்கள் தோன்றின?

தெரியவில்லையா…!

சரி அப்படி என்றால் இன்னொருக் கேள்வி, பெரியார் ஏன் கடவுள் இல்லை என்று முதலில் கூற ஆரம்பித்தார்?

சாதி இல்லை…!

அப்படி இல்லாத சாதிகளை (சாதி ஏற்றத் தாழ்வுகளை) படைத்தது  இறைவன் என்றால் அந்த இறைவனும் இல்லை…!

இது தான் பெரியாரின் கூற்று.

சாதி ஏற்றத் தாழ்வுகளை பெரியார் எதிர்த்தார். அந்த ஏற்றத் தாழ்வுகள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்றதினால் அவர் கடவுளை எதிர்த்தார்!
கடவுள் இல்லை எனக் கூற ஆரம்பித்தார்!

அதேப் போல் தான் இந்த சமயங்களும் தோன்றின!

இவை சாதிகளை எதிர்க்கவில்லை (ஏனெனில் அப்பொழுது ஏற்றத் தாழ்வுகள் இல்லை)…!

ஆனால் இவை பலி இடும் பழக்கத்தை எதிர்த்தன.

அந்தக் காலத்தில் இறைவனை வழிப்பட விலங்குகளைப் பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. (ஏன் இன்னுமே சில கோவில்களில் இந்தப் பழக்கம் இருக்கின்றதை நம்மால் காண முடிகின்றது. அட அதாங்க ’கடா வெட்டு’).

சமணமும் பௌத்தமும் உயிர்களைக் கொல்வதை எதிர்த்தன.
அவை எல்லா உயிர்களும் சமம் என்றன.

“இல்லை… இந்த பலிகள் கடவுளுக்காக” என்றனர் மக்கள்.

“அப்படியா… அப்படியென்றால் கடவுள் என்ற ஒருவர் இல்லை… இல்லாத ஒருவருக்கு பலி எதற்கு” என்றன அந்தச் சமயங்கள்.

மக்கள் சிந்தித்தார்கள்.

“அப்படி என்றால் நான் இறந்தால் எங்கே செல்லுவேன்” என்றார்கள்.

“உன் முன் வினைப்படி நீ மீண்டும் பிறப்பாய், மனிதனாய் இல்லை மிருகமாய் இல்லை மரமாய்… ஏனெனில் அனைத்தும் ஒன்றே…” என்றன அந்த மதங்கள்.
மக்கள் அந்த மதங்களுக்கு செவி சாய்க்க ஆரம்பித்தார்கள்!

இது தான் அந்த மதங்கள் தோன்றியமைக்கு உரிய முக்கிய காரணம்.

இப்பொழுது நாம் அசோகரிடம் மீண்டும் செல்வோம்…!

அசோகரின் காலம் கிமு 1 ஆம் நூற்றாண்டு என்று நாம் கண்டோம்.

அவர் புத்தத்தை இந்தியா முழுமையும் பரப்புகின்றார் என்றும் கண்டோம்.

சரி, இப்பொழுது ஒருக் கேள்வி… (என்னய்யா கேள்வி கேள்வியா கேட்டுத் தள்ளுகின்றீர் அப்படின்னு கேட்குறீங்களா…

சரி உங்களுக்காக இந்தக் கேள்வியை தேர்ந்து எடுக்கும் முறையில் கேட்கிறேன் :))

தமிழகத்தில் ஒருக் கருத்தினைப் பரப்ப எந்த மொழியில் நாம் அதனைப் பரப்ப வேண்டும்?
அ) இந்தி
ஆ) பிரஞ்சு
இ) தமிழ்
ஈ) பஞ்சாபி
(எப்படி கடினப்பட்டு கோடிசுவரன் நிகழ்ச்சிக்கு ஒரு கேள்வியை தயார் பண்ணிட்டோம்ல)

விடை என்ன?

தமிழ் அப்படின்னு சட்டுன்னு சொல்றீங்களா…வாழ்த்துக்கள்! (எனக்குத் தெரியுமுங்க நீங்க புத்திசாலின்னு)

ஒரு நாட்டில் ஒருக் கருத்தினை பரப்ப வேண்டும் என்றால், அந்தக் கருத்தை அந்த நாட்டின் மொழியிலேயே பரப்ப வேண்டும்.

நமக்குத் தெரிந்து இருக்கும் இந்த விடயம், அசோகருக்குத் தெரியாமலா இருக்கும்.

அப்படி என்றால் ஏன் அவர் சமசுகிருதத்தில் கல்வெட்டுக்களை செதுக்கவில்லை?

சமசுகிருதம் கோடி வருடங்களுக்கு முன்னரே இருக்கின்றது… அது தான் மற்ற மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்றால்… ஏன் அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்தவில்லை.

பாலி, தமிழ், அரமியம் மற்றும் கிரேக்கத்தில் காணப்படும் அசோகரின் கல்வெட்டுகள், ஏன் சமசுகிருதத்தில் இல்லை?

அது தேவமொழிங்க.. அதை மக்களுடன் பேசுவதற்கு பயன்படுத்தமாட்டார்கள். அப்படின்னு சொன்னீங்கனா?

ஏங்க திடீர்னு கிபி 2 ஆம் நூற்றாண்டுல மட்டும் சமசுகிருதத்துல கல்வெட்டுகள் கிடைக்குது. அப்ப அது தேவமொழி கிடையாதா?

உண்மையில் அசோகர் சமசுகிருதம் பயன்படுத்தவில்லை.

ஏனெனில் அப்பொழுது உலகில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை! (இதைப் பற்றியும் பல தகவல்களை நாம் விரிவாக வேறு பதிவுகளில் பார்ப்போம்).

எனவே உலகில் அப்பொழுது இருந்த மற்ற மொழிகளில் புத்தத்தை அசோகர் பரப்புகிறார்.

‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று புத்தம் பரவுகின்றது. வேகமாக!

சரி கிமு ஒன்றாம் நூற்றாண்டு போதும் இப்பொழுது நாம் கிபி 9 ஆம் நூற்றாண்டுக்கு போகப் போகின்றோம்.

இடம்: தமிழகம்

சைவ வைணவச் சமயங்கள் தோன்றி இருந்தாலும் ஒருத் தெளிவின்றி இருக்கின்றன. சங்கத் தமிழ் வளர்த்த தமிழகத்திலும் சமணம் மற்றும் புத்த சமயங்கள் கடவுளை மறுத்துக் கொண்டு பரவி இருக்கின்றன.

சமண மன்னர்களும் இருக்கின்றனர்.

எனவே சமண மக்களும் இருக்கின்றனர்.

தமிழகத்திலே இந்த நிலை என்றால் இந்தியாவின் பிறப்பகுதிகளில் சமணம் மற்றும் புத்தம் மட்டுமே இருக்கின்றன.

இந்தக் காலத்தில் தான் மதுரையில் ஒரு எழுச்சி ஏற்படுகிறது.

“நமச் சிவாய வாழ்க… நாதன் தாள் வாழ்க!” என்று மாணிக்க வாசகரின் குரல் அதோ கேட்கின்றது… போய் பார்ப்போம். அடுத்த பதிவில்…

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.