12/04/2018

மனோசக்தியால் எதையும் செய்ய முடியும்...


மனோசக்தியால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளவர் அமெரிக்காவின் யூரி கெல்லர்.

வெறும் பார்வையாலேயே இவரால் தேக்கரண்டி, கத்தி, சாவி போன்றவற்றை வளைக்க முடிகிறது. கை அசைவால், ஓடும் கடிகாரத்தை நிறுத்தவும், ஓடாததை இயங்கச் செய்யவும் முடிகிறது.

டெல் அவிவில் 1946-ம் ஆண்டு பிறந்த யூரி கெல்லருக்கு மூன்று வயதிலேயே இந்தச் சக்தி வந்துவிட்டதாம். இவர், 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் கண்ணைக் கட்டிக் கொண்டு போக்குவரத்து நிறைந்த நகர வீதிகளில் காரை ஓட்டினார். அந்தரத்தில் செல்லும் ரெயில்களைப் பார்வையாலேயே நிறுத்தவும், பின்னோக்கிச் செலுத்தவும் யூரி கெல்லரால் முடிந்தது.

அமெரிக்க விஞ்ஞானிகள் யூரி கெல்லரின் அற்புத ஆற்றலைப் பற்றி ஆராய அவரைத் தம் நாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

திரைக்குப் பின்னால் ஒரு திராட்சைக் கொத்தை வைத்து அது என்னவென்று கேட்டனர். கெல்லர் ஒரு பேப்பரில் திராட்சைக் கொத்து படத்தை வரைந்து காட்டினார். உண்மையான கொத்தில் எவ்வளவு திராட்சைப் பழங்கள் இருந்தனவோ, மிகச் சரியாக அதே எண்ணிக்கையில் யூரி கெல்லரின் திராட்சைக் கொத்திலும் பழங்கள் இருந்தன. தனது மனத்திரையில் திராட்சைக் கொத்து தொலைக்காட்சிப் படம் போல தெளிவாகத் தெரிகிறது என்றார் யூரி கெல்லர்.

1973-ம் ஆண்டு பி.பி.சி. தொலைக்காட்சியில் தனது ஆற்றலைக் காட்டினார் யூரி கெல்லர். அப்போது தொலைக்காட்சி நிலையத்துக்குப் பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. தங்கள் வீட்டிலும் தேக்கரண்டிகள் வளைந்துவிட்டன, கடிகாரங்கள் நின்றுவிட்டன என்று தொலைக் காட்சி நேயர்கள் கூறினார்கள்.

தனது ஆற்றல் குறித்து யூரி கெல்லர், “மெஞ்ஞான சக்தி ஒன்று என்னை இயக்குகிறது என்று நினைக்கிறேன். என்னால் நினைப்பதைச் செய்ய முடிகிறது. இது என்னவென்பதை விஞ்ஞானிகள்தான் விளக்க வேண்டும்” என்கிறார்.

ஆனால் விஞ்ஞானத்தால் விளக்க முடியாத புதிர் மனிதராகவே உள்ளார் யூரி கெல்லர்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.