25/04/2018

ஆழியாறு அணை வறண்டது; அணையினுள் மூழ்கியிருந்த கல்பாலம் வெளியில் தெரிந்தது...


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு அணையில், தேக்கப்படும் தண்ணீர் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்துக்கும் குடிநீருக்கும் வழங்கப்படுகிறது. கோவையின் தெற்கு பகுதிக்கான குடிநீர் ஆதாரமாகவும் ஆழியாறு அணை உள்ளது. கடந்த, 2013 மார்ச் மாதம், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், 53.5 அடியாக குறைந்தது. பருவமழையால், அதே ஆண்டு ஜூன் அணை நீர்மட்டம், 100 அடிக்கு உயர்ந்தது. அதன்பின், பருவமழையும் தீவிரம் அடையவில்லை; அணையும் நிரம்பவில்லை.

பருவமழை காலத்தில் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்வதும், தண்ணீர் திறப்பு காரணமாக, கிடுகிடுவென சரிவதுமாக உள்ளது. மூழ்கிய சாலை ஆழியாறு அணை கட்டுவதற்கு முன், வால்பாறை செல்வதற்காக, 1897ம் ஆண்டு, லோம் என்பவரை பாதைகள் அமைக்கும் பணிக்கு ஆங்கிலேய அரசு நியமனம் செய்தது.ஆழியாரிலிருந்து பாரளை வழியாக சிறுகுன்றாவுக்கு சாலை அமைக்க சர்வே நடத்தப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது. மழை காலத்தில், நீர்வரத்து அதிகமாக இருக்கும் போது, போக்குவரத்து பாதிக்காமல் இருக்க, சாலையின் குறுக்கே பாலங்களும் கட்டப்பட்டன. இவ்வழித்தடம் வழியாக வால்பாறைக்கு சென்று வந்தனர். அதன்பின், காமராஜர் ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி பகுதி பாசனம் பெறும் வகையில், 1962ல் அணை கட்டப்பட்டது.

அந்த பணியின்போது, வால்பாறை செல்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட சாலை அணைக்குள் மூழ்கியது. இதனால், வால்பாறைக்கு மாற்று வழித்தடம் அமைக்கப்பட்டது.

அணையில் நீர் மட்டம் சரியும் போது, அணையினுள் மூழ்கிய ஆங்கிலேயர் காலத்து கல்பாலமும், சாலையும் வெளியே தெரிகின்றன. தற்போது, நவமலை அருகேயுள்ள அணையின்ஆழமான பகுதியிலுள்ள மற்றொரு பாலமும் தற்போது வெளியே தென்படுகிறது. இதை, சுற்றுலாப்பயணியர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஆழியாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை நிலவரப்படி, 53.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 109 கன அடி நீர் வரத்தாக இருந்தது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.