03/05/2018

வெந்நீரும் வியாதியும்...


தண்ணீரின் தேவை உலக வாழ்வில் முதன்மையானது என்பது அறியப்பட்ட செய்தி. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பழந்தமிழர் நெறி. நீரைக் காய்ச்சிக் குடித்தால் உடலுக்கு நன்மை தரும் என்பது சுகாதாரம் விரும்புவோர் கூறும் பொதுக் கருத்து. ஆனால், நீரைக் காய்ச்சி, எந்தெந்த முறையில் அருந்தினால் என்னென்ன பயன்களைத் தரும் என்று சித்த மருத்துவ நெறியாக உரைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

காய்ச்சிய நீர் சூடாகப் பருகினால், நெஞ்செரிச்சல், நெற்றிவலி, புளிச்ச ஏப்பம், வயிற்று நோய், இருமல் போகும். காய்ச்சி ஆறிய நீர் அருந்தினால், உழலை, விக்கல், அதிசாரம், பித்தம், மூர்ச்சை, விஷ வாந்தி, மயக்கம், மேகம், உலர்ச்சி, கண்ணோய், திரிதோஷம், செவிநோய், சூலை, குன்மம், சுரம், ஐயம், வாத கோபம் போகும்.’ என்று தண்ணீர் வெந்நீரானால் உண்டாகக் கூடிய பயனை விளக்கு கிறது.

வெந்நீரும் பாத்திரமும்...

தண்ணீரைக் காய்ச்சவும், காய்ச்சிய நீரைச் சேமிக்கவும் மட்கலங்களிலிருந்து மாறி உலோகப் பாத்திரங்களுக்கு நாகரிக வாழ்க்கை வளர்ச்சியடைந்திருக்கிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த தன் பயன் என்னவென்பதை உரைப்பதாக, மருத்துவச் செய்தி அமைகிறது. வெந்நீர் எந்தெந்த உலோகங்களுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுவர்.

1. பொற்கெண்டி : வாயு, கபம், அருசி, மெய்யழல், வெப்பு போகும். விந்து, நற்புத்தி, அறிவு உண்டாகும்.

2. வெள்ளிக் கெண்டி : வெப்பு, தாகம், குன்மம், பித்தம், ஐயம், காய்ச்சல் போகும். உடல் செழிக்கும். பலம் உண்டாகும்

3. தாமிர பாத்திரம் : இரத்த பித்தம், கண்புகைச்சல் போகும்.

4. பஞ்சலோகம் : முக்குற்றங்கள் நீங்கும்.

5. வெங்கலப் பாத்திரம்: தாது உண்டாகும்.

6. கெண்டி : நோய், சிரங்கு, வாய்க்குடைச்சல் போகும்.

7. பன்னீர்ச் செம்பு : சுவாசம், விக்கல், பிரமை, பித்த, ஐயவாயு, தாள் வலி போகும்.

8. இரும்பு பாண்டு நோய் போகும்; தாது உண்டாகும்; நரம்பு கெண்டி உரமாகும்; உடல் குளிர்ச்சி அடையும்

என்று, உலோகத்தினால் உண்டாகும் பயன் வெந்நீர் அருந்தும் போது கிடைப்பது உரைக்கப்பட்டுள்ளது.

வெந்நீர் மருந்து...

தண்ணீர் எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை உணர்த்தும் மடை நூலைப் போல, தண்ணீர் வெந்நீரினால் என்னென்ன பயன் உடலுக்குக் கிடைக்கிறது என்பது மேலே குறிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீர் வெந்நீராகக் காய்ச்சப்படும்போது எந்த அளவு காய்ச்சினால் என்ன பலன் என்பதை..

கால் கூறு காய்ந்த வெந்நீர் பித்தத்தைப் போக்கும்
அரைக் கூறு காய்ந்த வெந்நீர் வாதம், பித்தம் ஆகிய போக்கும்
முக்காற்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், குளிர், நடுக்கல்,
பித்தசுரம், வெக்கை, வாதபித்த ஐயம் போகும்.'

என்று பதார்த்த குண சிந்தாமணி விளக்குகிறது.

வாத, பித்த, ஐயம் என்பதே அனைத்து நோய்களும் என்பதால், அனைத்து நோயிலிருந்தும் விடுபட வெந்நீர் மருந்தாக அமைகிற தென்பதை அறியலாம். மேலும், நீரைக் கால், அரை, முக்கால் என்கிற முறையில் காய்ச்சுவதைப் போல, நீரை மருந்தாகவே மாற்றிட எட்டுப்பாகத்தில் ஒரு பாகமாகக் காய்ச்ச வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. எண்சாண் உடம்பு, எறும்பும் தன்கையால் எட்டு என்று உலக உயிர்கள் எட்டுப் பாகமாகத் தோன்றியுள்ளதைத் தெரிவிக் கிறது. எட்டுக்கு ஒன்றாகத் தண்ணீரைக் காய்ச்ச வேண்டும்

என்றுரைப்பதும் உலகத்தின் உயிரினத் தோற்றத்துடன் தொடர்புடையதாக அமைவது போல் இருப்பதை அறியலாம்.

இயம்பிட வெளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண்மின்
நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்'.

என்றும்,

சொல்லிய நாழி கொண்டு தூணியில் எட்டொன் றாக்கி.

என்றும்,

நன்னீர் விட்டே யெட்டொன்றாய் நாடிக் காய்ச்சிக் கொள்வீரே'.

எனவும், காய்ச்சும் முறை உரைக்கப்பட்டுள்ளது. இம்முறை மருந்து தயாரிக்கும் போதும், தைலம் தயாரிக்கவும் பயன்படும் என்பது அறியப்படுகிறது. இவ்வாறு காய்ச்சுவதனால் பெருக்கத்து வேண்டும் சுருக்கம் என்பது போல பெருக்கம் என வளர்த்த பொருளைச் சுருக்கம் என மூலப் பொருளாக மாற்றினால் அது மருந்தாக அமையும் எனத் தெரிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.